நதியின் வழியே நகரும் ஒளி





‘‘ஒளி எல்லா இடத்திலும் நிரம்பிக் கிடக்கிறது. அந்த ஒளியைச் செதுக்குகிற சிற்பிதான் புகைப்படக்காரன்’’ - அளவாகவும், அழுத்தமாகவும் பேசுகிறார் ‘காஞ்சனை’ மணி. ‘கேண்டிட் போட்டோகிராபி’யின் முன்னோடி. பல படைப்பாளிகளுக்கு ஊக்கமாக இருந்த ‘காஞ்சனை திரைப்பட இயக்க’த்தின் நிறுவனர்களில் ஒருவர். வள்ளியூர் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர். தாமிரபரணியோடு தொப்புள்கொடி உறவுகொண்ட இவர், நதியின் நெளிவு சுளிவுகளையும், நதிக்கரை மனிதர்களின் வாழ்க்கையையும் உணர்வு ததும்பும் புகைப்படத் தொகுப்பாக உருவாக்கியிருக்கிறார்.

திருநெல்வேலியில் ஒரு அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்த மணி, ஓவியரும் கூட. கலர் ஃபிலிம் அறிமுகமாகாத கருப்பு-வெள்ளைக் காலத்தில் தொடங்கியது இவரது ரசனைப் பயணம்.

‘‘கண் முன்னால் உலகம் விரிந்து கிடக்கிறது. எல்லோரது கண்களுக்கும் அந்தக் காட்சிகள் தெரிகிறது. ஆனால் புகைப்படக்காரன், அழகுணர்வோடு, எதிர்பாராத கோணத்தில் அந்தக் காட்சிகளைக் கொடுக்கிறான்’’ என்கிற மணி, ‘கேண்டிட் போட்டோகிராபி’ பற்றி விரிவாகப் பேசுகிறார்.

‘‘வாழ்க்கையை எந்த சேதாரமும் இல்லாம மொழிபெயர்க்கிறதுதான் இது. இந்தத் துறையில் உலக அளவில் நிறைய முன்னோடிகள் இருக்கிறார்கள். ஹென்றி கார்டியே ப்ரசோன், ஜான் ஐசக்... இவர்கள் எல்லாம் நிறைய செய்திருக்கிறார்கள். ஹென்றி நிறைய தியரிகளை உருவாக்கியிருக்கார். அதில் முக்கியமானது, ‘டெசிசிவ் மொமென்ட்’ (Decisive Moment) தியரி. ஏதோ ஒரு கணம்தான் நல்ல புகைப்படத்தை உருவாக்குகிறது. அந்தக் கணத்தை எதிர்நோக்கி போட்டோகிராபர் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்’’ என்கிற மணியின் இயற்பெயர் வினாயக சுப்பிரமணியன்.



‘‘இலக்கிய ஈடுபாடுதான் என்னை புகைப்படக்கலை நோக்கி உந்தியது. திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் படித்தேன். புதுமைப்பித்தன் மாதிரி பல ஆளுமைகள் படித்த கல்லூரி அது. ‘புத்திலக்கிய வட்டம்’ என்று ஒரு இலக்கிய அமைப்பை நடத்தினோம். வண்ணநிலவன், கலாப்ரியா, பூமா ஈச்வரமூர்த்தி என்று பல படைப்பாளிகளை கல்லூரிக்கு அழைத்து வந்துள்ளோம். ஆர்.ஆர்.சீனிவாசனும் அப்படித்தான் வந்தார். என்னை விட 5 வயது இளையவர். புகைப்படக்கலை, சினிமாக்கலையில் அவருடைய பார்வை ரொம்பவே விசாலமானது. எங்கள் நட்பு இறுக்கமானது. ஓவியம், போட்டோகிராபி, சினிமா மூன்றையும் ஒரே கோணத்தில் அணுகத் தொடங்கினோம். இதற்காக ‘ரெக்டாங்கிள்’ அமைப்பை ஆரம்பித்தோம். ஆவணப்பட முயற்சிகளைத் தொடங்கி வைத்தோம். சினிமா ரசனையை வளர்க்க தெருக்களில் மாற்றுப் படங்களை திரையிட்டோம். ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஸ்ட்ரீட் போட்டோகிராபி பயிற்சி கொடுத்து, கேமராவை கிராமங்கள் பக்கம் திருப்பினோம். ‘ரெக்டாங்கிள்’ பிற்காலத்தில் காஞ்சனை திரைப்பட இயக்கமாக மாறியது. தாமிரபரணி ஆற்றில் 17 பேர் மூழ்கி இறந்துபோன சம்பவத்தை ஒரு ஆவணப்படமாக உருவாக்கினோம். சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது அந்தப் படம். அதுபற்றி விசாரித்த மோகன் கமிஷன், அந்த ஆவணப்படத்தை ஒரு சாட்சியமாகவே அங்கீகரித்தது’’ - உற்சாகமாகப் பேசுகிறார் மணி.

தாமிரபரணியின் பாதை நெடுகிலும் எடுத்த புகைப்படங்களைத் தொகுத்து ‘மூங்கில்வனம்’ என்ற பெயரில் கண்காட்சி நடத்தியுள்ளார் இவர். தாமிரபரணிக் கரையோர மக்களின் பண்பாடு, விழாக்கள், பண்டிகைகள் என அந்தப் புகைப்படங்களில் உயிரோட்டம் ததும்புகிறது.

‘‘இங்கு இரண்டுவிதமான கலாசாரங்கள் உண்டு. சங்கரன்கோவில், வள்ளியூர் போன்ற தாமிரபரணிக்குத் தொடர்பில்லாத கரிசல்காட்டுப் பகுதி மக்களின் வாழ்க்கை வறட்சியானது. அந்த மனிதர்களிடம் சற்று முரட்டுத்தனம் இருக்கும். தாமிரபரணி பாயும் கீராட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை செழிப்பானது. இவர்களிடம் மென்மை மிகுந்திருக்கும். குலசேகரன்பட்டினம் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயில், குரங்கணி அம்மன் கோயில் என கரையில் இருக்கிற எல்லா கோயில்களின் கொடை விழாக்களையும் பதிவு செய்திருக்கிறேன். பொதிகை மலை மூலாதாரம் தொடங்கி, புன்னைக்காயல் சங்கமம் வரைக்கும் தாமிரபரணியின் பேரழகையும், வளத்தையும் விவரிக்கும் ஒரு கண்காட்சி நடத்த முயற்சித்து வருகிறேன்’’ என்கிறார் மணி.
- வெ.நீலகண்டன்