சென்னை என்றவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? மெரினா பீச், வள்ளுவர் கோட்டம், சட்டசபை, சென்ட்ரல் ஸ்டேஷன், வண்டலூர் உயிரியல் பூங்கா... இப்படி இடங்களைத்தான் சொல்வீர்கள். சென்னையின் மனிதர்கள் நினைவுக்கு வருவதில்லையே... ஏன்?
வானுயர்ந்த கட்டிடங்கள், நினைவகங்கள், ஷாப்பிங் மால்கள், பாலங்கள், வாகனங்கள்... இவை எல்லாவற்றையும் தாண்டி மனிதர்களையும் நகரங்கள் கொண்டிருக்கின்றன. நகரங்களில் அவர்கள் அடையாளம் இழந்துவிடுகிறார்கள். பிராண்டன் ஸ்டான்டன் இதை மாற்ற முயற்சிக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் இவர், அந்த நகரத்தில் குறைந்தது 10 ஆயிரம் பேரையாவது புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த முயற்சிக்கிறார். ‘நியூயார்க்கின் மனிதர்கள்’ என்ற அவரது வலைத்தளத்தில், கடந்த 2 ஆண்டுகளில் 5 ஆயிரம் பேரின் படங்களைத் தொகுத்திருக்கிறார். பள்ளி செல்லும் சிறுமிகள், நகரை சுத்திகரிக்கும் முனிசிபல் ஊழியர்கள், தடி ஊன்றி நடக்கும் பாட்டி, மலர்க்கொத்தோடு சிரிக்கும் பெண் என ஒவ்வொரு படமும் அழகு.
- அகஸ்டஸ்