வாழ்த்து : பட்டுக்கோட்டை ராஜேஸ்

பேச்சுலர்களின் துயர் துடைக்கும் சொர்க்கம் அது. வீட்டிலேயே நடத்தப்படும் மெஸ். மதியம் அளவில்லாத சாப்பாடு, மூன்று வகை கறி, அப்பளம். காலையும் இரவும் டிபன். எல்லாவற்றுக்கும் அளவான, நியாயமான விலைதான். மாதாமாதம் பணம் செலுத்தும்படி அக்கவுன்ட்டும் உண்டு. ஆனாலும் அங்கு ஒரு விஷயம் என் மனதை உறுத்தியது.
என்னையும் சேர்த்து தினமும் எவ்வளவோ தடிப்பயல்கள் வருகிறார்கள். அப்பாவும் அம்மாவும் சேர்ந்து சமையலைப் பார்த்துக் கொள்ள, அனைவருக்கும் பரிமாறுவது அவர்களின் திருமணமாகாத இளம்பெண்தான். ‘கூட்டம் நிறைய வர வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களா?’ என் மனம் சங்கடப்பட்டது.
நீண்டநாள் மன உறுத்தலை ஒரு நாள் அந்தப் பெண்ணின் அப்பாவிடம் கேட்டேவிட்டேன். ‘‘என் பொண்ணுக்கு வயது முப்பது வயசாச்சு தம்பி. எத்தனையோ வரன் பார்த்தும், இன்னமும் ஒரு இடமும் சரியா அமைய மாட்டேங்குது. இங்கே வர்றவங்க என் பொண்ணு கையாலே நல்ல சாப்பாட்டை வயிறார சாப்பிட்ட திருப்தியில, ‘அந்தப் பொண்ணு நல்லா இருக்கணும்’னு மனசார வாழ்த்த மாட்டாங்களா? அந்தச் சொல்லு என் பொண்ணை கரை சேர்த்துடுமேன்னுதான் பரிமாறச் சொல்றோம்’’ என்றார் அவர். ‘அந்தப் பொண்ணு சீக்கிரமே கல்யாணமாகி நல்லா இருக்கணும்’ - நானும் வாழ்த்தினேன்!
|