சீன ராணுவம் இந்திய லடாக் பகுதி எல்லைக்குள் கிட்டத்தட்ட 19 கிலோமீட்டர் தூரம் உள்ளே ஊடுருவி வந்திருக்காங்க. இதுக்கு இதுவரை இந்திய அரசு ஏதாவது பெருசா எதிர்ப்பு தெரிவிச்சுதான்னு எனக்குத் தெரியலை, என் பக்கத்து வீட்டு முருகேசனுக்கும் தெரியல. ‘இந்த சீனப் பயலுகளே இப்படித்தான்... மூக்கும் இல்ல, மூளையும் இல்ல. அதனால ஆறு மாசத்துக்கு இப்படித்தான் பண்ணுவானுங்க’ன்னு அரசாங்கம் அசால்ட்டா நினைக்குதோ என்னவோ?
ஆனா, எனக்கு சீன ராணுவம் இவ்வளவு தைரியமா ஊடுருவி இந்தியாவுக்குள்ள வந்திருக்கறதுக்கு காரணம் புரிஞ்சிடுச்சு. லீவுல வந்த ‘துப்பாக்கி’ விஜய், காஜல் அகர்வாலோட ‘கூகுள் கூகுள்’ன்னு பாடிக்கிட்டு, இன்னமும் டூட்டில போய் ஜாயின் பண்ணாம இருக்காரே!
திரும்பவும் விஜய்யோ அர்ஜுனோ இந்திய பார்டர் போற வரைக்கும், எல்லை தாண்டும் சீனர்களைத் தடுக்க என்கிட்டே ஒரு சூப்பர் ஐடியா இருக்கு. பார்டர்ல இருக்கிற பாறை முழுக்க ‘திருமதி தமிழ்’ போஸ்டர்களை ஒட்டி வச்சோம்னா, சீனர்கள் சின்னாபின்னமாகி சிதறி ஓடிட மாட்டாங்க? ஆனா ஒண்ணு, ஓபிஎஸ் அண்ணன் ஆசைப்படி, அம்மா மட்டும் பிரதமர் ஆனா, இலங்கை வீரர்கள் நுழையத் தடை போட்ட மாதிரி சீன வீரர்களுக்கும் தடை போட்டுருவாங்கல்ல?!
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மாமனாருக்கு,
‘நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளை’ என்பதைப் படித்திருந்தும் உங்கள் பெண்ணை கல்யாணம் பண்ணிய மாப்பிள்ளை எழுதுவது...
இங்கு எல்லோரும் நலம். நான் மட்டும் சுமாரா இருக்கேன். உங்க பொண்ணு இங்க இருப்பதால், அங்க எல்லோரும் நல்லா இருப்பீங்கன்னு தெரியும். உங்க பொண்ண கல்யாணம் பண்றப்ப கண் கலங்காம பாத்துக்கிறேன்னு சொல்லிட்டுதான் தாலி கட்டினேன் (கட்ட விட்டீங்க). ஆனா மாமா, உங்க பொண்ணு காலைல பதினோரு மணிக்கு ஆரம்பிச்சு ராத்திரி பதினோரு மணி வரை சீரியல் பார்த்து, ‘நாதஸ்வரம்’ கோபி முதல் ‘வாணி ராணி’ ராதிகா வரை கஷ்டப்படுபவர்களைப் பார்த்து சிந்தும் கண்ணீருக்கு எல்லாம் நான் ஜவாப்தாரி இல்லை. இத்தனைக்கும் வாரத்தில் பாதி நாட்களுக்கு மேல வெங்காயம் (சின்னது) நான்தான் உரிக்கிறேன்.
மாசம் ஒரு நாள் உங்க பொண்ணுக்கு இன்ப அதிர்ச்சி தந்தாகணும். (அதாவது, இன்பம் அவளுக்கு; அதிர்ச்சி எனக்கு!) ஒண்ணு புது சேலை மூலமா... இல்லை, புது நகை மூலமா. அப்போ அவள் விடும் ஆனந்தக் கண்ணீரும் இந்தக் கணக்கில் வராது. ஏதாவது பராக்கு பார்த்துக்கிட்டு வீட்டு நிலைப்படில முட்டிக்கிட்டாலோ... இல்லை, கவனிக்காம வந்து நான் தொடைச்சு வச்ச மார்பிள் தரையில கீழ விழுந்தாலோ வர்ற கண்ணீருக்கும் நான் பொறுப்பில்லை. (ஆனாலும், அத்தகைய நல்ல காரியங்கள் வருடத்தில் ஓரிரு முறைதான் நடக்குது. ஸோ, மெஜாரிட்டியும் இல்ல).
ஆனா, நான் ஏதேனும் சின்ன தப்பு செஞ்சாலோ, டி.வில 11 மணி வரை ஐ.பி.எல் மேட்ச் பார்த்தாலோ.. விடுறாங்க பாருங்க அடி! (அடியா அது? ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் இடி!) அப்படி அடிச்சுட்டு, அடி வாங்கிய நானே கமுக்கமா இருக்கிறப்போ, அடிச்சதால கை வலிக்குதுன்னு கண்ணீர் விடுறாங்க பாருங்க... அந்தக் கண்ணீர என்னாலயே பார்க்க முடியல. அதனால தயவு செய்து அவங்க கை வலிக்கும் அளவுக்கு என்னை அதிகம் அடிக்கவேண்டாம் என ஒரு போன் போட்டுச் சொல்லிடுங்க. இது எனக்காக இல்லை, உங்க பொண்ண கண் கலங்காம காப்பாத்துறேன்னு நான் செஞ்ச சத்தியத்துக்காக.
அன்புடன்,உங்கள் மருமகன்

ஐந்து பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைப்பதை விட... ஐம்பது யானைகளை புத்துணர்வுக்கு கொண்டு வருவதை விட... ஐந்நூறு குழந்தைகளுக்கு தரமான இலவசக் கல்வி தருவதை விட... ஐயாயிரம் ஏழை மக்களுக்கு வயிறார அன்னதானம் செய்வதை விட... ஐம்பதாயிரம் மக்கள் நலம் பெற ஆயிரம் குளங்கள் வெட்டுவதை விட... அஞ்சு லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் அணைகள் கட்டுவதை விட, ஒரே ஒரு ஆழ்குழாய்க் கிணற்றை ஒழுங்காக மூடி வைப்பது மேல்!
இன்றைக்கு இந்தியாவில் ஆழ்குழாய்க் கிணறு என்பது ஆள் துழாவும் கிணறாகி விட்டது. காப்பாற்றப்படும் ஒரு குழந்தை, மேலே சொன்ன எல்லாவற்றையும் தனியாளாய் செய்யும் திறன் பெறலாம். எந்த விதைக்குள் எந்த விருட்சம் என யாருக்குத் தெரியும்?
அரசியல்ல சாதி இருக்கலாம், ஆனா சாதிய வச்சு அரசியல் பண்ணக்கூடாது. ஒருத்தர் என்னடான்னா ‘சிவபெருமானும் பார்வதியும் எங்க ஜாதி’ன்னு ஜல்லியடிக்கிறாரு. இன்னொருத்தரு, ‘இனி ஜாதிக் கட்சிகளுடன்தான் கூட்டணி’ன்னு கும்மியடிக்கிறாரு. கொஞ்சம் விட்டா ஜப்பானின் ஜாக்கி சான், அமெரிக்காவின் மைக்கேல் ஜாக்சன் கூட இவங்க ஜாதின்னு போஸ்டர் அடிச்சாலும் அடிச்சுடுவாங்க. இந்த மாதிரி உளறுவதில் மெத்தப் படித்த முன்னாள் அமைச்சர்களே இருக்காங்க என்பதுதான் வேதனை. அதுலயும் அவரு ஸ்டேட்மென்ட் ஒவ்வொண்ணும் ஒசாமா பின்லேடன் அட்ரஸ் கேட்டவன் ரகம். இவரு போன் பண்ணினா, கிளின்டன், ஹிலாரி கிளின்டன், பில் கேட்ஸ் கூட உடனே பேசுவாங்களாம். பாவம், போன் ஒயரு பிஞ்சது கூட தெரியாம இருக்காரு!
இதையெல்லாம் கேட்க வேண்டிய மூத்தவர்களோ மது ஒழிப்பு மாநாட்டுக்கு கும்பலை குவார்ட்டர் கொடுத்து கூட்டி வர்றாங்க. இப்போ தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருப்பது என்னன்னே புரியல. தர்மபுரி தொடங்கி மரக்காணம் வரை பற்றி எரிந்துகொண்டிருப்பது குடிசைகள் அல்ல... நம்மள பெத்த தமிழ்த் தாயின் வயிறு.
சமையலறையின் சர்க்கரை டப்பா, பீரோவுக்குள் இருக்கும் புடவையின் மடிப்புகள், புத்தக அலமாரியில் இருக்கும் பாரதியார் கவிதைகள், பழைய பொருட்களுடன் கூடவே அடுக்கப்பட்டிருக்கும் பழைய டைரி, பெட்ரூமில் இருக்கும் படுக்கையின் அடி, நகை வாங்கும்போது தரும் பெட்டி, இதெல்லாம்தான் life insurance policy போல, அவ்வப்போது அவசர குடும்பச் செலவுகளைக் காத்திடும் wife insurance policy இருக்கும் இடங்கள்!
மக்களே, கால் பாதம் வரை இறக்கம் வைக்கிற முழு டவுசர் தைக்க 200 ரூபாவும் கால் முட்டி வரை இறக்கம் உள்ள அரை டவுசர் தைக்க 100 ரூபாவும் வாங்குற நேர்மையான நாடு, நம்ம தமிழ்நாடு. இப்படிப்பட்ட நாட்டுல, இந்த உச்சி வெயில் காலத்துல கண்ணுக்கு முன்னாடியே பெரும் கொள்ளை நடக்குது. 20 ரூபா தண்ணி பாட்டில ஃப்ரிட்ஜுல வச்சி கூலிங்குக்கு 2 ரூபா சேர்த்து, 22 ரூபாய்க்கு விக்கிறாங்க... அது ஓகே. ஆனா அந்த லாஜிக்படி, ஃப்ரிட்ஜுல வைக்காத தண்ணி பாட்டிலை கூலிங் இல்லாததனால 2 ரூபா குறைச்சு 18 ரூபாய்க்குத்தானே விக்கணும்? என்ன நான் சொல்றது? இதைக் கேட்டா நம்மள ‘கேனப்பய’ன்னு சொல்றாங்க.

இந்திய எல்லைக்குள்ள சீன ராணுவம் கூடாரம் போட்டும் அலாரம் அடிக்காத இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி