சாயி : ஷீரடி பாபாவின் புனித சரிதம்





நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அழைத்தால், அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.
- பாபா மொழி
பாபாவை திரும்பவும் ஷீரடியில் பார்த்ததும் நானியின் மனத்திரையில் ஓடிய பழைய சம்பவங்கள் இங்கே காட்சிகளாகத் தொடர்கின்றன...

  மறுநாள் காலையில் எழுந்ததும், ‘‘அடேய் நாநா, யாரோ பாலயோகி ஊருக்குள் வந்திருக்கிறானாமே?’’ என்று வினவினாள் நாநா சோப்தாராவின் தாயார் நானி.
‘‘ஆமாம்! வேப்ப மரத்தடியில் தியானத்தில் மூழ்கி இருக்கிறான். ஊரெல்லாம் இதே பேச்சு!’’
‘‘நான் அவனை தரிசிக்கணும்... கிளம்பு’’ என்றாள்.
இருவரும் புறப்பட்டார்கள். ‘‘அக்கா... அக்கா...’’ என்றவாறே ஓடி வந்தாள் பாய்ஜாபாய். நாநாவின் தாயார் போல அவளும் வயதானவளே.
‘‘அந்த யோகியைப் பார்க்கத்தான் கிளம்புகிறீர்களா... நானும் உங்களுடன் வருகிறேன்!’’
மூவரும் வேப்பமரத்தடிக்கு வந்தால், பாதி கிராமமே அங்கு இருந்தது! எல்லோரும் ஆச்சரியத்துடன் அந்த பாலயோகியையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளம்யோகியோ இன்னும் மோன நிலையிலேயே இருந்தான். உடம்பு சற்றும் அசையவில்லை. அருகில் வைத்திருந்த போர்வை, கலையாமல் அப்படியே இருந்தது. அவன் உடம்பிலிருந்து ஒரு தேஜஸ் கிளம்பி, எல்லோரையும் ஆகர்ஷித்தது.

வெயில் ஏறியது. இருந்தும் அவன் முகம் வாடவில்லை. அப்போதுதான் பறித்த மலர் போல காட்சி தந்தான்.
‘‘இவனுக்குப் பசி எடுக்காதா?’’
‘‘இரவு பனி பெய்ததே. குளிரவில்லையா இவனுக்கு?’’
‘‘நாநா...’’
‘‘என்ன அம்மா!’’

‘‘இந்த பாலகனைப் பார். எவ்வளவு அழகாக இருக்கிறான்? என்ன சிகப்பு நிறம்? இந்த வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருக்கும் இந்தப் பையன் நிஜமாகவே ஒரு தேவதூதன்! ஞான மூர்த்தி.’’
‘‘நீ சொல்வது சரிதான் அம்மா. எல்லாருடைய மனதிலும் என்ன இருந்ததோ, அதை நீ சொல்லிவிட்டாய்!’’ என்றான் நாநா.
‘‘இவனுக்கு வெயில், பனி எல்லாம் ஒன்று. இந்த இளம் வயதில், எவ்வளவு கடுமையாக தவம் புரிகிறான் பார்த்தாயா? இவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் மனசு நிறைந்துவிடுகிறது? இவன் ஒரு அவதார புருஷன்தான்!’’ - நானி சொல்வதை எல்லோரும் அமைதியாகக் கேட்டார்கள்.
இரண்டு மணி நேரம் கழித்து, சாப்பாட்டு மூட்டையுடன் அங்கு வந்தாள் பாய்ஜாபாய். அவனருகில் கீழே உட்கார்ந்தாள்.
‘‘ஏ பையா...’’ - அவனைக் கூப்பிட்டாள்.
ஜனங்கள் திடுக்கிட்டார்கள். சதாசிவம் பயந்துபோய், ‘‘பாய்ஜாபாய்! அவனுடைய மௌனத்தைக் கலைக்காதே’’ என்றான்.
‘‘ஏன்?’’

‘‘அவன் தவநிலையில் உட்கார்ந்திருக்கிறான். தவம் செய்பவர்களைக் கலைத்தால், கோபங்கொண்டு சபிப்பார்களாம்.’’
‘‘இவன் என் மகன். தாய்க்கு யாரும் சாபம் கொடுக்க மாட்டார்கள். அவன் என்னை பஸ்பமாக்கினாலும் மறுபடியும் என்னை உயிர்ப்பித்து விடுவான். நீங்கள் கவலைப்படாதீர்கள்.’’
மறுபடியும் குரல் எழுப்பினாள். ஆனால் அந்த யோகி அசைவில்லாமல் இருந்தான். அவள் விடுவதாக இல்லை. ‘‘நீ சாப்பிடாதவரைக்கும் நான் இங்கிருந்து நகரமாட்டேன்’’ என்றாள்.



மாலை வரை அவனிடம் எந்த சலனமும் இல்லை. கிராமவாசிகள் சிலர் வெறுத்துப்போய் நகர்ந்துவிட்டார்கள்.
இரவு நெருங்கியதும் பாய்ஜாபாயின் கணவன் கோதே பாட்டீல் வந்தான். மரத்தடியில் தியானத்தில் மூழ்கியிருந்த யோகியையும் தன் மனைவியையும் பார்த்தான்.
‘‘பாய்ஜா... வா, போகலாம்!’’
‘‘இவன் சாப்பிடாதவரை நானும் இந்த இடத்தைவிட்டு நகரப் போவதில்லை...’’
‘‘நேற்றிரவு முதல் அவன் இப்படியே சமாதி நிலையில் இருக்கிறான். இன்றிரவும் அப்படியே இருந்தால்...’’
‘‘இருக்கட்டுமே...’’
‘‘இரவு முழுதும் விழித்திருப்பாயா?’’
‘‘ஏன் விழித்திருக்கணும்? அவன் நிஷ்டையிலிருந்து கலையும் வரை, நான் இந்தப் படிக்கட்டிலேயே தூங்குகிறேன்.’’
அவர் சிரித்தார்.
‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?’’

‘‘அடி பைத்தியமே! இந்த யோகி எங்கே... நீயும் நானும் எங்கே? யோக வலிமையினால் அவன் என்னவேனும் செய்வான். நாம் யோகியுமில்லை, தியாகியுமில்லை! நாம் வெறும் போகி! நமக்கு எங்கே இருக்கிறது அவ்வளவு மன திடம், வலிமை எல்லாம்?’’
‘‘அவனுடைய மன உறுதி எனக்கும் உண்டு. நீங்கள் வீட்டிற்குப் போங்கள்...’’
அவள் உறுதியைக் கண்டு, கணவன் பேசாமல் திரும்பினான். மௌனநிலையிலிருந்து மாறவே இல்லை பாலயோகி. அவனும் சாப்பிடவில்லை... பாய்ஜாவும் சாப்பிடவில்லை. காரிருளில் அந்த இரண்டு பேர் மட்டுமே இருந்தார்கள். அவ்வளவு இருட்டிலும், யோகியின் ஒளிரும் தேகத்தைப் பார்த்தபடி எண்ண அலைகளில் மிதந்தாள் பாய்ஜாபாய்.
‘யார் இந்த பாலயோகி? மனிதனா, ரிஷியா அல்லது சாட்சாத் கடவுளா? நான் அவனை என்னுடைய குழந்தை என்று எப்படிச் சொன்னேன்? எனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? இவனைப் பெற்றவர் யார்? எங்கிருந்து வந்தான்? இதற்கு முன் எங்கிருந்தான்? என்னை ‘அம்மா’ என்று அழைப்பானா? யாருக்குத் தெரியும்? அவன் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன். எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும். நான் அவனுக்குத் தாய், இதுதான் உண்மை...’
‘‘அம்மா...’’
சத்தம் வந்தாலும், அவளுக்குக் கேட்கவில்லை. யோசனையில் மூழ்கியிருந்தாள்.
‘‘அம்மா...’’
பாய்ஜாபாய் திடுக்கிட்டாள். யார் இந்த இரவில் கூப்பிட்டது? மறுபடி ‘‘அம்மா!’’ என்னும் குரல் கேட்டது.

‘‘யார்?’’
‘‘அம்மா... நான்தான்’’
‘‘அடக்கடவுளே... குழந்தாய்! நீயா அழைத்தாய். நீ தவத்திலிருந்து எப்பொழுது கலைந்தாயப்பா? எனக்கு இப்பொழுதுதான் உயிர் வந்தது...’’
‘‘அம்மா... எல்லோரும் போய்விட்டார்களா?’’
‘‘போய்விட்டார்கள்!’’
‘‘நீ ஏன் தனியாக உட்கார்ந்திருக்கிறாய்?’’
‘‘உனக்காகத்தான். எத்தனை நாட்களாகப் பசியுடன் இருக்கிறாயோ! உனக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன்...’’
‘‘சரி... இலை போடு!’’
‘‘பசிக்கிறதா?’’
‘‘தாயே, நான் அதையெல்லாம் தாண்டிப் போய்விட்டேன். ஒரு சமயம் ரொம்ப துடித்தேன். கடைசியில் அந்தப் பசியையே விழுங்கிவிட்டேன். அது முதல் பசியே எடுக்கவில்லை. இப்பொழுது கூட நீ கொண்டு வந்ததால் சாப்பிடுகிறேன். நீயும் பசியுடன் இருக்கிறாய். இருவரும் சேர்ந்தே சாப்பிடுவோம்.’’
சாப்பிட்டு முடிந்ததும், ‘‘தாயே...’’ என்றான் பாலகன்.
‘‘நீ என்னை ‘தாயே’ என்றாயே, என் காதையே நம்ப முடியவில்லை...’’ - அவள் அன்பு பெருக்கிட கூறினாள்.
‘‘ஏன்?’’

‘‘உன்னுடைய பெருமை என்ன... நான் சாதாரணப் பெண். பைத்தியமாட்டம் உன்னை ‘குழந்தாய்’ என்றேன். அதற்காக நீ என்னை ‘அம்மா’ என்று அழைத்தாயா? எனக்கு உன் அம்மாவாகும் யோக்கியதை இருக்கா?’’
‘‘யாருடைய வாயிலிருந்து ‘குழந்தாய்’ என்று ஒலி கேட்கிறதோ, அவள் அன்னைதான். யாருடைய இதயத்திலிருந்து அன்பு பெருக்கெடுத்து ஓடுகிறதோ, அவள் தாய்தான். குழந்தைக்காக யார் பசியுடன் இருக்கிறாளோ, அவள் தாயாகத்தான் இருப்பாள். பசியுடன் இருக்கும் குழந்தை சாப்பிட வேண்டும் என்பதற்காக இந்த நடுநிசியில் தனியாக இருந்து தவிப்பவள், நிச்சயம் தாயாகத்தான் இருப்பாள்!’’
‘‘எவ்வளவு இனிமையாகப் பேசுகிறாய் குழந்தாய்! உன்னுடைய உதட்டில் ‘பேடா’ (இனிப்பு) வைத்ததுபோல் பேசுகிறாய்.’’
அவன் வெறுமனே சிரித்தான்.
‘‘குழந்தாய், உன்னுடைய தியானம் முடிந்ததா?’’
‘‘தியானம் எங்கேயாவது முடியுமா? அது நிரந்தரமாக நடக்கும் சம்பவம்.’’
‘‘பின் ஏன் அதிலிருந்து எழுந்தாய்?’’
‘‘உனக்காகத்தான். நான் யார், எங்கிருந்து வருகிறேன் என எதுவும் தெரியாத நிலையில், பசியுடன் நான் வாடுவேன் என்பதற்காக நீயும் சாப்பிடாமல் இருந்தாய்... உன்னுடைய தாயன்பு என்னை இழுத்து வந்தது.’’
‘‘குழந்தாய்... நீ யார்? எங்கிருந்து வந்தாய்?’’

‘‘அம்மா, நடுநிசி ஆகிறது. உன் வீட்டுக் கதவு இன்னும் திறந்துதான் இருக்கிறது. நீ வீட்டிற்குப் போய்த் தூங்கு. நானும் தியானம் செய்யணும். கிளம்பு சீக்கிரம்...’’
அவள் சிரித்தாள். இன்றைக்கு இல்லாவிட்டாலும், நாளைக்கு சொல்வான். ‘‘சரிப்பா, நாளைக்கு சாப்பாடு கொண்டு வருகிறேன். அங்கு போர்வை வைத்திருக்கிறது. நன்றாகத் தூங்கு!’’ என்றாள்.
‘‘சரி... சரி...’’ - அவன் சிரித்தான்.
அந்த இருட்டில் அவள் பயப்படாமல் நடந்தாள். சொல்லத் தெரியாத சந்தோஷத்தையும் மனநிறைவையும் அவள் அனுபவித்தாள்.
மறுநாளும் அந்த பாலதுறவியைப் பார்க்க கிராமத்தார் கூடிவிட்டார்கள். நாநா சோப்தாரியும் அவன் தாயார் நானியும் அங்கு பிரசன்னமானார்கள்.
‘‘அந்த பாலகன் குளித்து எவ்வளவு நாளாகிறதோ?’’
‘‘அவனுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்விக்க, நான் வீட்டிலிருந்து எண்ணெய் கொண்டுவருகிறேன்!’’
‘‘நான் தேய்த்துவிட கடலை மாவு கொண்டுவருகிறேன்.’’
‘‘துடைத்துவிட, நான் துண்டு...’’
‘‘நான் அவனுக்கு அணிவிக்க புதுச் சொக்காய்...’’
இப்படி ஆளாளுக்குக் கொண்டுவந்தார்கள். சிலர் பக்கத்தில் செங்கல் அடுக்கி அடுப்பு வைத்து, ஒரு அண்டாவில் வெந்நீர் வைத்தார்கள். சில பெண்கள் அந்த பாலகன் தலையில் எண்ணெய் விட்டுக் குளிப்பாட்டினார்கள். புத்தாடை அணிவித்து மரத்தடியில் உட்கார வைத்தார்கள். அவரவர் கொண்டுவந்த பூ, தேங்காய், பழங்களை அவனுக்கு நிவேதனம் செய்து, எல்லோரும் பிரசாதத்தைப் பங்கிட்டுக் கொண்டார்கள்.

‘‘ஜனங்களே! உங்களுடைய உற்சாகமான வரவேற்பு, உபசரணை எல்லாம் பிரமாதம். நான் இந்தக் கிராமத்திற்கு அன்னியனாக இருந்தாலும், உங்கள் அன்பைக் காட்டினீர்கள். அல்லா உங்களுக்கு நன்மைகள் செய்வார். இந்த மண் பவித்திரமானது. இந்த ஊரின் தண்ணீர், ஏழு நதிகளின் தண்ணீரைவிடச் சிறப்பான தீர்த்தமாகும். அதனால்தான் நான் இங்கு வந்தேன். எல்லோரும் கடமையை ஒழுங்காகச் செய்தால், அதுவே சிறந்த தர்மம் ஆகும். நீங்கள் உங்களுடைய வேலையைச் செய்யுங்கள். அடுத்தவன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விடாதீர்கள். இதனால் காலம்தான் வீணாகிறது. நீங்கள் ஈஸ்வரனைப் பாருங்கள். அல்லா உங்கள் பக்கம் பார்ப்பார். நான் இப்பொழுது தியானத்தில் மூழ்கப்போகிறேன். நீங்கள் உங்களுடைய வேலையைப் பார்க்கப் போங்கள். இங்கு உட்கார்ந்து, வீணே கதை பேசிப் பொழுதைக் கழிக்க வேண்டாம்.’’
‘‘பாலகா, நான் உன்னை ஒன்று கேட்கலாமா?’’ என்றார் ஒரு முதியவர்.
‘‘தாராளமாகக் கேளுங்கள்.’’
‘‘நீங்கள் யார்?’’
‘‘நான் அல்லாவின் அடிமை.’’
‘‘உங்கள் பெயர் என்ன?’’

‘‘பெயரில் என்ன இருக்கிறது? அல்லாவிற்கு எப்படி பெயரில்லையோ, அதே போல எனக்கும் பெயர் இல்லை. நீங்கள் கூப்பிடுவதுதான் என் பெயர்!’’
‘‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’’
‘‘கடவுள் எங்கு இருக்கிறாரோ, அங்கிருந்து.’’
‘‘நீ எந்த ஊரைச் சேர்ந்தவன்?’’
‘‘உலகம்தான் என் ஊர். ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். என்னைப் போன்ற பக்கீருக்கெல்லாம் ஊருமில்லை பேருமில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாதவன்தான் பக்கீர்’’ - மந்தகாச பார்வையுடன் அவன் சொன்னான்.
அவனுடைய பேச்சில் ஒரு மயக்கம் இருந்தது. கண்களில் ஒளி மின்னிற்று. உதட்டில் சிரிப்பு. பேசுவதில் ஓர் அதிகாரம். ‘‘கேள்விகள் கேட்பதிலேயே நம் ஆயுள் முடிவடைந்துவிடுகிறது. முடிந்தால், வாழ்வதற்கான உண்மையைக் கண்டறியுங்கள். ஆத்ம சிரத்தையுடன் வேலை செய்யுங்கள். ஒருநாள் உங்களுக்கே பதில் கிடைக்கும். நட்சத்திரங்களை எண்ணுவதில் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களுடைய கடமையைச் செய்துகொண்டே இருங்கள். ஒரு நாள் ஆகாயமே உங்கள் வசப்படும். அல்லாவின் பெயரை உச்சரியுங்கள். இப்பொழுது கிளம்புங்கள்.’’
எல்லோரும் எழுந்தார்கள். புரிந்தது போலத் தலையை ஆட்டிக்கொண்டு சென்றார்கள்.
(தொடரும்...)

தென்னிந்தியாவின் ஷீரடி!


சென்னை மயிலாப்பூரில் திருமயிலை ரயில் நிலையத்துக்கு பின்புறம் அமைந்துள்ள சாயிபாபா ஆலயத்தை, ‘தென்னிந்தியாவின் ஷீரடி’ என்கிறார்கள் சாய் பக்தர்கள். சாயிபாபாவின் அதிதீவிர பக்தரான பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி 1941ம் ஆண்டு நிறுவினார். ஷீரடிபாபாவின் புகழை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்களில் இவர் முக்கியமானவர். மயிலாப்பூர் ஆலயத்தின் சிறப்பம்சம், பக்தர்கள் எவரும் வெண்பளிங்குச் சிலையாக வீற்றிருக்கும் பாபாவின் காலைத் தொட்டு வணங்கலாம். பாபா சன்னதிக்குப் பின்புறத்திலேயே நரசிம்ம சுவாமியின் சமாதியில் அவரது அஸ்தியும் வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சாயி சமாஜத்தால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயத்தின் அன்னதானம் மிகவும் பிரபலமானது. தினமும் மதிய வேளையில் மூவாயிரம் பேருக்கு மேல் அதில் கலந்து கொள்கிறார்கள்.  அதிகாலை 5 முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கிறது. ஆலயத் தொடர்புக்கு: 044 - 24640784