‘சரித்திரத்தில் பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்திய மிகப்பெரிய போர் எது?’ என பிரிட்டனில் தேசிய ராணுவ மியூசியம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு கடந்த வாரம் வெளியானது. எங்கோ ஐரோப்பாவில் நிகழ்ந்த போர் அல்ல... இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவில் இம்பால் மற்றும் கொஹிமா முற்றுகையில் பிரிட்டிஷ் - ஜப்பான் படைகள் மோதியதுதான் ‘சரித்திரத்தில் பெரிய போர்’ என தேர்வாகி இருக்கிறது.
இந்தப் போர் இந்தியர்களை எதிரெதிரே நிறுத்தியது. பிரிட்டிஷ் படையிலும் இந்திய வீரர்கள் இருந்தனர்; ஜப்பான் படைக்கு உதவியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் வந்தனர். கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் இந்தப் போரில் மடிந்தனர். இவர்களில் முக்கால்வாசிப் பேர் இந்தியர்கள். போரில் யார் ஜெயித்திருந்தாலும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும். பிரிட்டன் ஜெயித்ததால், நேதாஜி காணாமல் போனார். அவரது மறைவைச் சுற்றிய மர்மங்கள் எப்போதும் புதிது புதிதாக முளைக்கின்றன.
இதோ இப்போதும் ஒன்று...
இப்போதைய சர்ச்சைக்குக் காரணம், நீரத் சௌத்ரி. வங்காள எழுத்தாளரான இவர், 101 வயதில் பிரிட்டனில் இறந்தார். ‘‘இவர் தொடர்பான சி.பி.ஐ ஆவணங்களை வெளியிட வேண்டும்’’ என நேதாஜி குடும்பத்தினர் இப்போது கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். நேதாஜிக்கு என்ன ஆனது என்ற புதிருக்கான விடை அவற்றில் இருக்கிறது என நம்புகிறார்கள் அவர்கள்.
நேதாஜியின் அண்ணன் சரத் சந்திர போஸின் உதவியாளராக இருந்தவர் நீரத் சௌத்ரி. ‘‘ஆனால் வெளியில் தெரியாத இன்னொரு வேலையும் அவர் பார்த்து வந்தார். அவர், பிரிட்டிஷ் அரசின் உளவாளியாக இருந்தார்’’ என்கிறார் சரத் போஸின் பேரன் சந்திர குமார் போஸ். அவர் பட்டியலிடும் விஷயங்கள் மலைக்க வைப்பவை...
* நேதாஜியைப் போலவே அவர் அண்ணனும் சுதந்திர தாகம் கொண்டவராக இருந்தார். புகழ்பெற்ற வழக்கறிஞரான அவரைப் பார்க்க சுதந்திரப் போராளிகள் பலர் வருவார்கள். அடிக்கடி ரகசியக் கூட்டங்களும் நடக்கும். இரவு நேரத்தில் நடக்கும் கூட்டத்துக்கு வருபவர்கள், வீட்டுக்கு சற்று தொலைவில் கைது செய்யப்படுவார்கள். சில சமயங்களில் கூட்டம் நடப்பதற்கு முன்பே போலீஸ் வந்து, ‘‘இங்கே ஏதோ ஆலோசனை நடக்குதாமே?’’ என விசாரிக்கும். எல்லா தகவல்களும் கச்சிதமாக பிரிட்டிஷ் நிர்வாகத்துக்குக் கிடைத்திருக்கிறது. அப்போது போஸ் குடும்பத்தில் இருந்த ஒரே வெளியாள், நீரத்!
* 1941ம் ஆண்டு சரத் போஸின் உதவியாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் நீரத். அதற்கு அடுத்த நாள் பிரிட்டிஷ் போலீஸ், சரத்தை கைது செய்தது. பெர்லினில் இருந்த நேதாஜியுடன் தொடர்புகொண்டு தேச ரகசியங்களைப் பகிர்ந்ததாகவும், இதற்கு கொல்கத்தாவில் இருக்கும் ஜப்பான் தூதரகத்தின் உதவியைப் பயபடுத்தியதாகவும் அவர் கைது செய்யப்பட்டார். மறுநாள் அவர் கைதாவார் என்பதை போலீஸ் வட்டாரத்திலிருந்து தெரிந்து கொண்டே நீரத் ராஜினாமா செய்திருக்கிறார். இதேபோல நேதாஜி மாயமான சம்பவத்தில் என்ன நிகழ்ந்தது என்பதும் நீரத்துக்கு தெரிந்திருக்கிறது.

சரத் போஸ் கைதானபோது, அவரது நெருக்கமான உதவியாளர் என்ற முறையில் நீரத் சௌத்ரி விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீரத்துக்கு ஆல் இண்டியா ரேடியோவில் உயர் பதவி கொடுத்தது பிரிட்டிஷ் அரசு. இது ஏன்? அதன்பிறகு அவர் சுலபமாக பிரிட்டன் செல்ல முடிந்தது. அங்கேயே குடியுரிமை பெற்று வசிக்கவும் முடிந்தது. இதற்கு உதவியது யார்?
* நீரத் சௌத்ரி மறைந்தபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேதாஜி குடும்பத்தினரும் சென்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்த உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவரும் அங்கு வந்திருந்தார். இவருக்கு இங்கு என்ன வேலை என நேதாஜி குடும்ப வாரிசு ஒருவர் விசாரித்தார். ‘‘உங்களுக்குத் தெரியாதா? நீரத் எங்கள் ஆள்’’ என்றார் அந்த உளவுத்துறை அதிகாரி.
றீஇந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, நீரத் சௌத்ரி பற்றி சி.பி.ஐ விசாரித்தது. நேதாஜி மாயமானது தொடர்பான மர்மங்களை நோக்கி அந்த விசாரணை சென்றது. ஆனால், என்ன காரணத்தாலோ அந்த விசாரணை அறிக்கை ரகசியமாக வைக்கப்பட்டது.
* நேதாஜியின் அண்ணன் மகனான அமியா நாத் அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். இந்திரா காந்திக்கு அவர் நெருங்கிய நண்பர். 1967ம் ஆண்டு அவர் இந்திராவை சந்தித்து, நீரத் சௌத்ரி பற்றிய சி.பி.ஐ அறிக்கை குறித்து விசாரித்தார். சில நாட்கள் கழித்து இந்திராவிடமிருந்து அமியாவுக்கு அழைப்பு வந்தது. பிரதமரின் அறைக்கு அமியா போனார். ‘‘காத்திருங்கள். சி.பி.ஐ தலைவர் கோஹ்லியிடம் அந்த அறிக்கையை எடுத்துவரச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் பார்க்கலாம்’’ என உற்சாகமாகச் சொன்னார் இந்திரா. சில நிமிடங்களில் கோஹ்லி வந்தார்; ஆனால் வெறுங்கையோடு! ‘‘அந்த அறிக்கை அபாயகரமானது. அது பகிரங்கமானால் பலருக்கு ஆபத்து’’ என கோஹ்லி சொன்னபோது, இந்திராவால் எதுவும் செய்ய முடியவில்லை.
- இப்படிப் பட்டியல் நீள்கிறது. நேதாஜி குடும்பத்தினர் 50 பேர் கையெழுத்திட்டு, ‘நீரத் மற்றும் நேதாஜி தொடர்பான 33 சி.பி.ஐ ஃபைல்களை பகிரங்கமாக்க வேண்டும். நேதாஜி விமான விபத்தில் சாகவில்லை என்பதை அவை நிரூபிக்கும்’ என பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினர். ஆனால், ‘அவற்றை பகிரங்கமாக்குவது சர்வதேச உறவுகளை பாதிக்கும்’ என பிரதமர் அலுவலகம் பதில் தந்துள்ளது.
கடைசியில் இதற்கும் விக்கிலீக்ஸ்தான் வர வேண்டுமோ!
- அகஸ்டஸ்