“வருங்காலத்துல நம்ம பசங்க தமிழையோ, இங்கிலீஷையோ எழுத்துக் கூட்டி படிச்சிக்கிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? சான்ஸே இல்ல. அடுத்த தலைமுறை, படிக்க ரெடியா இல்லை. பார்க்கவும் கேட்கவும்தான் தயாரா இருக்கு. டி.வியில நியூஸ் பார்க்குற மாதிரி, அவங்களுக்கு எல்லா தகவலும் சிரமமில்லாம விஷுவலா வேணும்.
இன்னிக்கு ஒரு மாணவனுக்கு ஆகாய விமானம் பத்தி ஏதாவது சந்தேகம் வந்தா, நெட்ல ‘ஏரோபிளேன்’னு தட்டினா போதும். விக்கிபீடியா மாதிரி இணைய கலைக்களஞ்சியத்துல இருந்து அத்தனை தகவலும் வந்து விழுது. தமிழ்ல ஆகாய விமானம்னு அடிச்சாலும் தமிழ் விக்கிபீடியா தகவல்களைத் தருது. இந்த அளவுக்கு தமிழை இணையத்துல ஏத்தினது பாராட்ட வேண்டிய விஷயம். ஆனா, இது போதாது. க்ளிக் பண்ணினதும் திரையில் ஒருத்தர் வந்து, ஆகாய விமானத்தைப் பத்தி அடிப்படையான தகவல்களைச் சொல்லணும். அப்படிப்பட்ட வீடியோக்களைத்தான் வருங்கால தமிழ்ச் சமூகம் எதிர்பார்க்கும். சுருக்கமா, ‘விஷுவல் தமிழ் டிக்ஷனரி’. அந்தச் சூழலுக்கு தமிழைத் தயார்படுத்துறதுதான் பட்டர் பிஸ்கட் தமிழ்’’ - எளிமையாக அறிமுகம் தருகிறார் டாக்டர் செம்மல்.
‘தமிழ்ப் பணி ஆற்றுபவர்’ என்பதற்கான எந்த அடையாளமும் செம்மலிடம் இல்லை. தமிழறிஞர்கள் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட மணவை முஸ்தபா தன் தந்தை என்பதையே அரை மணிநேர உரையாடலுக்குப் பின்புதான் வெளிப்படுத்துகிறார். ‘‘தமிழறிஞர்கள்னு தனியா ஒரு வர்க்கம் தேவையில்லை சார். தமிழர்களாப் பிறந்த எல்லாரும் தமிழ் அறிஞர்கள்தான். சின்ன ‘ல’ பெரிய ‘ள’ சரியா வராத இந்தக் காலத்துப் பசங்க தமிழர்கள் இல்லையா? அவங்க தமிழை வளர்க்கக் கூடாதா?’’ - செம்மலின் ஒவ்வொரு வார்த்தையிலும் சூடு பறக்கிறது.

‘‘அப்பா தமிழுக்கு நிறைய செய்திருக்கார். அறிவியல் தமிழ்ங்கற பேர்ல தொழில்நுட்பம், மருத்துவம்... ஏன், கம்ப்யூட்டர் துறை வரைக்கும் கலைச்சொல் அகராதி போட்டிருக்கார். உடம்புக்கு முடியாம போனதில் இருந்து ஓய்வுல இருக்கார். சொன்னா நம்ப மாட்டீங்க... எங்க அப்பாவோட ஒரு ஸ்பீச்சைக்கூட அதுவரைக்கும் நான் கேட்டதில்ல. திடீர்னு ஒரு நாள்... ஒரு பேப்பர் பிரசன்டேஷனுக்காக திருக்குறளைப் படிச்சேன். நரம்பியல் சம்பந்தமான பல குறிப்புகள் அதில் இருக்குறதை ஒரு மருத்துவரா உணர்ந்தேன். அப்போ ஆரம்பிச்சது தமிழுக்கும் எனக்குமான தொடர்பு’’ என்கிற செம்மல், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் இயக்கவியல் துறை இணைப் பேராசிரியர். தமிழுக்காக தான் செய்யும் எந்த ஒரு சின்ன காரியத்தையும் ‘அறிவியல் தமிழ் மன்றம்’ என்ற பெயரில்தான் முன்னெடுக்கிறார்.
‘‘அதிக உறுப்பினர்களோ, ஆயுள் சந்தா மாதச் சந்தான்னு வசூல் வேட்டையோ கிடையாது. இணையத்தில் நம்ம தமிழ் இன்னும் முழுமையா ஏற்றப்படாம இருக்கு. அதை ஏத்தணும்னு நினைச்சீங்கன்னா, நீங்களும் நம்ம மன்றத்துல உறுப்பினர்தான். தன் பணத்தை செலவு செஞ்சு தமிழுக்கு யாரும் தொண்டாற்ற முடியும்னு எனக்குத் தோணலை. அப்படி செஞ்சாலும் அது எத்தனை நாளைக்கு? நானும் என் காசை இதுக்காக செலவழிச்சதில்ல. இணையம் இலவசமா இருக்கு... அதுல தமிழை ஆவணப்படுத்த நிறைய இடம் இருக்கு. ஜஸ்ட்... என் நேரத்தை மட்டும்தான் செலவு பண்றேன்’’ என்கிறவர் தற்போது கையில் எடுத்திருக்கும் ஹாட் ப்ராஜெக்ட், ‘பட்டர் பிஸ்கட் தமிழ்’!
‘‘தமிழை நாம பொத்திப் பொத்தி வச்சது போதும்ங்க. டீக்கடை, மளிகைக்கடை, பெட்டிக்கடை... ஏன் ரயில்ல நம்ம சீட் வரைக்கும் ரீச் ஆகுது பாருங்க பட்டர் பிஸ்கட். அப்படி தமிழும் வருங்காலத் தமிழர்களுக்கு ரீச் ஆகணும். அதனாலதான் இப்படிப் பெயர். என்சைக்ளோபீடியாவுல இடம்பெறுற அளவுக்கு ஒரு நல்ல தகவல் உங்களுக்குத் தெரிஞ்சா, அதை நீங்களே திரையில் தோன்றி சொல்லலாம். ஜஸ்ட் 1 அல்லது 2 நிமிஷம் ஓடக் கூடிய வீடியோதான். ஒரு வீடியோவில் ஒரே தகவல்தான். அதைத்தான் நாங்க ‘ஒரு பட்டர் பிஸ்கட்’னு சொல்றோம். இங்கிலீஷைப் பொறுத்தவரை யூ டியூப்ல இந்த மாதிரி தகவல் வீடியோக்கள் நிறைய இருக்கு. தமிழ்ல அதைச் செய்யறதுதான் என்னோட பணி.
பர்சனலா தெரிஞ்சவங்க, தமிழ் ஆர்வலர்கள் ‘பட்டர் பிஸ்கட் தர்றேன்’னு சொன்னா, கேமராவோட போய் பதிவு செஞ்சுக்கறேன். முதல் சில பிஸ்கட்களை யூ டியூப்ல பார்த்துட்டு, வெளிநாட்ல இருந்தெல்லாம் சிலர் எடுத்து அனுப்ப ஆரம்பிச்சாங்க. இது ரொம்ப சிம்பிள். இப்ப வர்ற செல்போன் கேமராக்கள்லயே ஒரு பட்டர் பிஸ்கட் வீடியோவை எடுத்துடலாம். அதை எடிட் பண்றது, பதிவேத்தறதை நான் பார்த்துக்கறேன். இப்போதைக்கு 170 பட்டர் பிஸ்கட் வீடியோக்கள் இணையத்துல இருக்கு. இது 170 லட்சம் வீடியோக்களா ஆனாலும் தமிழுக்குப் பத்தாது. வழிவழியா காலம் காலமா எல்லா நாடுகள்லயும் உள்ள தமிழர்கள் இதை முன்னெடுப்பாங்கன்னு நம்புறேன்.
‘அதென்ன பட்டர் பிஸ்கட்... இது தமிழா இல்லையே?’’ன்னு நிறைய பேர் கேட்டாங்க. நல்ல தமிழ் பெயர் வச்சு இதைச் செய்ய வேண்டியவங்க செய்யலை. அதனாலதானே என்னை மாதிரி ஆட்கள் பண்ண வேண்டியதாப் போச்சு. அந்தக் குறை இந்தப் பெயர்ல தெரியட்டுமேன்னுதான் வச்சிருக்கேன். தமிழ் விக்கிபீடியாங்கறது முழுக்க தமிழா என்ன? அது நிக்கலையா? அப்படி இதுவும் நிக்கும்!’’ - அசாத்திய நம்பிக்கையோடு முடிக்கிறார் செம்மல்.
- கோகுலவாச நவநீதன்