விளம்பரம் : ஜி.ஆரோக்கியதாஸ்

“இந்த ஆபீஸ்ல ஒன்பது வருஷமா வேலை பாத்திட்டிருக்கேன். சம்பளம், பதவின்னு எதுவுமே உயரலை... எனக்குப் பின்னாடி வந்தவங்க எல்லாம் எங்கயோ போயிட்டாங்க. நான் அதே சீட்ல உக்காந்து குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். நேர்மைக்கு மரியாதையே இல்லை’’ - அலுவலகத்தில் சேர்ந்து ஒரு மாதமே ஆகியிருந்த முரளியிடம் புலம்பித் தள்ளினார் சண்முகம். அலுவலகத்துக்கு வெளியே டீக்கடையில் நின்றிருந்தார்கள் இருவரும். ‘‘சார்... உங்ககிட்ட நான் ஒண்ணு சொல்லலாமா?’’ என்றான் முரளி.
சண்முகம் புரியாமல் பார்த்தார். ‘‘நானும் இந்த ஒரு மாசமா உங்களை ஆபீஸ்ல கவனிச்சிட்டுதான் இருக்கேன். உங்களுக்குக் கொடுக்கற வேலையை ஈடுபாட்டோட கரெக்டா செய்யறீங்க. ஒரு ரிமார்க்கும் இல்ல... ஆனா, நீங்க இருக்கற இடம்தான் யாருக்கும் தெரிய மாட்டேங்குது.’’
சண்முகத்துக்கு இன்னமும் ஒன்றும் புரியவில்லை. ‘‘மத்தவங்க எல்லாம் வேலை செய்யறாங்களோ இல்லையோ... ஆபீஸ்ல குறுக்கும் நெடுக்கும் நடந்துட்டு இருக்காங்க... சும்மாவாச்சும் மேனேஜர் டேபிளுக்குப் போய் அரட்டை அடிச்சிட்டு, அவங்க செஞ்ச வேலையைப் பத்தி ஆகா ஓகோன்னு பேசி, தங்களோட இருப்பை பதிய வச்சிட்டே இருக்காங்க. அது உங்ககிட்ட இல்லை. என்னதான் தரமான பொருளா இருந்தாலும், அதுக்கு விளம்பரம் முக்கியமில்லையா? நீங்க உங்களை மாத்திக்கணும் சார்!’’ முரளியின் பேச்சில் இருந்த நிதர்சனம் சண்முகத்துக்குப் புரிந்தது.
|