தண்ணீர் : ஏ.எஸ்.நடராஜ்

‘‘தலைவரே... நீங்க சொன்னபடி வாட்டர் பாட்டில்ல விஷத்தைக் கலந்தாச்சு. அந்தப் பையனும் அதை ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டான். மத்தியானத்துக்குள்ள குடிச்சிட்டு போய்ச் சேர்ந்துடுவான்’’ - வில்லத்தனமாக சிரித்தபடியே நாகு சொன்னான்.
‘‘என் அண்ணனோட வாரிசு இன்னையோட தொலைஞ்சுது. சொத்து மொத்தமும் இனி எனக்குத்தான்’’ என கொக்கரித்தான் ராஜதுரை.
விஷம் கலந்த தண்ணீர் பாட்டில் வைத்திருந்த லஞ்ச் பேக்கை எடுத்துக் கொண்டு, ராஜதுரையின் அண்ணன் மகன் சுரேஷ், ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். ஆட்டோ சின்ன தெருக்களையெல்லாம் கடந்து, ஒரு திருப்பத்தில் மெயின் ரோட்டை தொட்ட நிமிடத்தில் அந்த விபத்து நிகழ்ந்தது. எதிர் திருப்பத்திலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த ஒரு பைக் மீது, மெயின் ரோட்டில் வந்த ஒரு கார் மோதிய வேகத்தில், பைக்கில் வந்த இருவர் தூக்கி வீசப்பட்டனர். ‘‘ஐயோ... சித்தப்பா!’’ - ஆட்டோவில் இருந்த சுரேஷ் பதறி ஓடினான். கூட்டம் கூடி விட்டது. அரைகுறை மயக்கத்தில் இருந்த ராஜதுரைக்கும் நாகுவுக்கும் முகத்தில் தண்ணீர் தெளித்து வாயிலும் புகட்டினார்கள். கொஞ்சம் நேரத்தில் சுரேஷின் வாட்டர் பாட்டில் முழுவதும் காலியானது. ‘‘என்னப்பா இது... தண்ணி தெளிச்சும் மயக்கம் தெளியவே இல்ல?’’ - கூட்டத்தினர் பரபரப்பாகப் பேசிக் கொண்டனர்.
|