வேலைக்குப் போகாதீர்கள்!





இனிமேல் யாரிடமும் கைகட்டி வேலை செய்ய வேண்டாம் என தீர்மானிப்பதற்கு முன்பாக, கடினமாக உழைத்து நிறைய பணம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நீங்கள் வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது!
- ஆக்டென் நாஷ்

நிர்ப்பந்தம் என்கிற வார்த்தையையும், மனித வாழ்வையும் பிரிக்கவே முடியாது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால், இந்த வார்த்தையையும் பணி வாழ்க்கையையும் சில நேரம் பிரிக்க முடியாது. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலை - அது எளிதான வேலையாகக் கூட இருக்கலாம் - ஆனால், உங்களுக்குப் பிடித்தமில்லாத வேலை... நிர்ப்பந்தம் காரணமாக அதைச் செய்ய நேரிடும்போது, மனம் ‘இதெல்லாம் ஒரு பிழைப்பா?’ என்று அலறத்தான் செய்யும்.

இந்த இடத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளியுங்கள். வாழ்வில் உங்களுக்கு பிடித்தமானவற்றை மட்டும்தான் செய்கிறீர்களா? இதுவரை நீங்கள் கடந்து வந்த பாதையில் பிடித்தமில்லாதது எதையும் செய்யவில்லையா? இதற்கு நேர்மையான பதில் ‘சூழலின் நிர்ப்பந்தம் காரணமாக, பல செயல்களை நாம் செய்துதான் வந்திருக்கிறோம்...’ என்பதாகத்தான் இருக்க முடியும். மாணவனாக இருக்கும் நேரத்தில் தேர்வுகளுக்குப் படிப்பது கூட எல்லோருக்கும் பிடித்தமான செயலாய் இருக்கும் என்று சொல்ல முடியாது. சில பாடங்கள் பிடிக்கலாம்; பல பிடிக்காமல் போகலாம். இன்னும் எளிய உதாரணங்கள்... சினிமா பார்க்க நீண்ட கியூவில் நிற்கிறீர்கள், தவிர்க்க நினைக்கும் மனிதருடன் பேசுகிறீர்கள், கூட்டமான ரயிலில் பயணம் செய்கிறீர்கள்... விருப்பத்துடனா இதையெல்லாம் செய்கிறீர்கள்?
ஆனால், ‘வேலை’ எனும்போது மட்டும் மனம் முரண்டு பிடிக்கிறது?


பிடித்தவை - பிடிக்காதவை... இரண்டும் மனம் முடிவு செய்யும் விஷயங்கள் என்பதை உணருங்கள். மனம் நினைத்தால் சாதாரணமான ஒரு ஸ்விட்சை அழுத்தும் வேலையைக் கூட சிரமமாக்கிவிடும். எல்லாமே மனம் செய்யும் மாயங்கள்.
இந்த ‘பிடித்தமில்லாத’ வேலையை நீங்கள்தான் செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறபோது, ஏன் நீங்கள் முரண்டு பிடிக்க வேண்டும்? நிலைமையை ஏன் இன்னும் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும்?

‘பிடிக்காதது’ என்னும் மனத்தடையுடன் நீங்கள் செயல்படும்போது, இன்னும் கூடுதலாகத்தான் நீங்கள் சக்தியைச் செலவு செய்வீர்கள். இப்படி தேவைக்கு அதிகமாகக் களைப்படைவதை விட, ஏன் அதை முதலிலேயே சந்தோஷமாகச் செய்யக் கூடாது?

இந்தப் ‘பிடிக்காத வேலை’யை நீங்கள் சந்திக்க விரும்பாதபோது, அதை தள்ளிப் போடத் துவங்குவீர்கள். நாளடைவில் இதுபோன்ற வேலைகள் குவிந்து, அவை உங்களை ஜெயிக்கத் துவங்கி விடும். வேலை நம்மை ஜெயித்து, வேடிக்கை பார்ப்பதற்காகவா நாம் வந்திருக்கிறோம்? வேலையிடம் நாம் தோற்றுப்போனால், நாம் வாழ்க்கையில் ஒரு அடி பின்னால் சென்று விட்டோம் என்று அர்த்தம். என்ன செய்யலாம்?

வேலை என்று வந்த பிறகு, இது பிடித்தது - பிடிக்காதது என்று நீங்கள் சொல்வது முறையல்ல. வேலை - வேலைதான். இதில் உங்கள் சொந்த விருப்பு - வெறுப்புகளைக் காட்டி, தரம் பிரிக்கக்கூடாது.
அந்தப் ‘பிடிக்காத வேலை’யை இன்று அல்ல... இப்போதே துவங்கிவிடுங்கள். நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடும்போது, நாளை வரை இருக்கிற இடைவெளியில் உங்களது சோர்வு, கசப்பு, எரிச்சல் போன்ற மனத்தடைகள் நிரம்பிவிடும். அது உங்களை நாளை மறுநாளுக்கு அழைத்துச் செல்லும். இப்படியே அடுத்த நாள்... அதற்கடுத்த நாள்...
ஒரு பழமொழி உண்டு, ‘அன்று செய்யாத காரியம் ஆறு மாசம்...’



நீங்கள் உடனடியாக இந்த வேலையை முடிக்காவிட்டால், நாளைக்கு அதைவிட முக்கியமான வேலை ஒன்று வரும். இப்படி முடிக்கப்படாத வேலைகள் உங்களுக்கு மேலும் மன அழுத்தத்தைத்தான் தரும். எனவே எளிதான விஷயத்தை சிக்கலாக்கிக்கொள்ளும் கலையை கடைசிவரை கற்காமலேயே இருங்கள்!
பரந்த இந்தப் பிரபஞ்சத்தில் பிறருடைய உதவி இல்லாமல் யாராலும் வாழ முடியாது. அவரவர் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி பிறர் உதவி தேவைப்படும் நிலை கூடலாம், குறையலாமே தவிர... மனிதர் யாருமே சுயச் சார்பு பெற்றவர் அல்லர். பணியிடங்களிலும் பிறருடைய உதவி இல்லாமல், உங்கள் பணி வாழ்க்கை வெற்றிகரமாக அமையாது. அடுத்தவரின் உதவி எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம். இதெல்லாம் பொதுவான விஷயங்கள்.

ஆனால், அடுத்தவரின் உதவியை எந்த அளவு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கு சில வரையறைகள் உண்டு. உதவி பெறுவது என்பது வேறு... உதவியைப் பெற்றுக்கொண்டே இருப்பது என்பது வேறு. இது ஏமாற்றும் செயலாகும். உங்களது கடமையை நீங்கள் செய்யாமல் தப்பிக்க முயற்சிக்கிறீர்கள் என அர்த்தம்.

வேலையில் உங்களுக்கு எழும் சந்தேகம் நியாயமானது. அதைப் போக்கிக் கொள்ள நீங்கள் அடுத்தவரின் உதவியை ஒரு தடவை அல்ல, நூறு தடவை கூட கேட்கலாம். இதில் உங்களது முயற்சி உண்மைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்வதில் ஆர்வமும், உறுதியும் இருக்க வேண்டும். அடுத்த முறை இந்த விஷயத்திற்காக, இந்த நபரிடம் போய் நிற்கக் கூடாது என்கிற கற்கும் வெறி அவசியம் இருக்க வேண்டும்.

இப்படி எல்லாம் செய்யாமல், நீங்கள் உதவி கோருவது, சந்தேகத்தைப் போக்குவது என்ற பெயர்களில் அடுத்தவர்களை உங்களது வேலைக்குள் இழுத்தீர்கள் என்றால், நீங்கள் அடுத்தவரைச் சுரண்டுகிறீர்கள்... தொழில் தர்மத்தை மீறுகிறீர்கள்.
நீங்கள் உங்களது வேலையில் இருந்து தப்பிக்கும் நோக்கில், அடுத்தவரின் உதவியைக் கேட்பது சம்பந்தப்பட்டவருக்குத் தெரிந்துவிட்டால், அப்புறம் அவரிடமிருந்து கிடைக்கும் நியாயமான எந்த உதவியும் உங்களுக்கு கிடைக்காமலேயே போய்விடும்.

தேவையான நேரத்தில், தேவையான நபரின் உதவி கிடைக்காமல் போனால், அதனால் நஷ்டம் உங்களுக்கே. தொடர்ந்து அடுத்தவரின் உதவியைப் பெறும்போது, உங்களது வேலையில் அடுத்தவரின் தலையீட்டை அனுமதிக்கிறீர்கள். இதனால், நாளடைவில் உங்களது சுதந்திரம் பறிபோய்விடும். இது உங்களுக்குப் பெருமை சேர்ப்பதாக அமையாது. முதலில் உதவிக்காக உங்கள் வேலையில் தலையிடுபவர், நாளடைவில் உரிமையுடன் நீங்கள் கேட்காமலேயே உள்ளே நுழைந்து, உங்கள் வேலையை செய்யத் துவங்கி, உங்களது முக்கியத்துவத்தைக் குறைக்கப் பார்ப்பார்.
அடுத்தவரைச் சார்ந்து ஒருவர் இருக்கிறார் என்றால், அவரை அனைவரும் மறைமுகமாக மட்டம் தட்டியே தீருவார்கள். இரண்டாம் கட்ட பிரஜையாகவே நடத்துவார்கள்.

இந்தப் பிரச்னை எதுவும் இல்லை என்றாலும் கூட, இன்னொரு விஷயம் இருக்கிறது. இந்த உலகில் எதுவுமே இலவசம் கிடையாது. எனவே, அடுத்தவரின் அளவுக்கதிகமான உதவியை நீங்கள் பெறும்போது, அவருக்கு நீங்கள் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டி இருக்கும். இதுவும் உங்களது சுதந்திரத்தைப் பாதிக்கும்.
உதவி என்பது அருமையான வரம். அதை சாபமாக்கிவிடக் கூடாது. எனவே, உங்களுக்கு வழங்கப்பட்ட பணியைச் செய்வது நீங்களாக மட்டும் இருக்கட்டும். உங்கள் வேலையைச் செய்வதற்குத்தான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அளவுக்கதிகமாக உதவி பெறுவது உங்களது வளர்ச்சியைத் தடுத்துவிடும். எதையும் கற்காமல் தேங்கி விடுவீர்கள்!
(வேலை வரும்...)