ஜனநாயகப் புரட்சியாளர்களால் சமீபத்தில் கொல்லப்பட்ட லிபிய அதிபர் கடாபி தனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு பெண் பாடிகார்டுகளையே வைத்திருந்தார். ஆண்களுக்கு சற்றும் குறைவில்லாத போர்த்திறமையும் தற்காப்புக் கலைகளும் பயின்ற பாடிகார்டுகள் இவர்கள். இதேபோன்ற பெண் பாடிகார்டுகளுக்கு சீனாவில் திடீரென டிமாண்ட் அதிகரித்துவிட, பாடிகார்டுகளை உருவாக்கும் பயிற்சி நிலையங்களும் நிறைய முளைக்க ஆரம்பித்திருக்கின்றன.
சமீபகாலத்தில் நிகழ்ந்த பொருளாதார வளர்ச்சியால் சீனாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து இருக்கிறது. இவர்களில் பலருக்கு தங்கள் பாதுகாப்பு குறித்த கவலையும் வந்திருக்கிறது. சொல்லி வைத்தமாதிரி இவர்களில் பலரும் பெண் பாடிகார்டுகளையே கேட்கிறார்கள். இதற்குக் காரணங்கள் உண்டு.
வாட்டசாட்டமான ஆண் பாடிகார்டுகளை கூடவே வைத்துக் கொள்வது மற்றவர் கண்களை உறுத்தும். ‘இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார் என்றால், இவரிடம் நிச்சயம் நிறைய சொத்து இருக்கும்’ என மற்றவர்களுக்கு அதுவே காட்டிக் கொடுத்துவிடும். பாடிகார்டுகள் அசந்த நேரத்தில் தாக்குதல் நிகழ்த்த எப்போதும், யாரும் தயாராக இருப்பார்கள்.
பெண்கள் என்றால் பிரச்னையே இல்லை. செக்ரட்டரி என்ற போர்வையில் பாடி கார்டை கூடவே வைத்துக் கொள்ளலாம். ‘செக்ரட்டரி கூடத் தானே இருக்கிறார்’ என எதிரிகள் நெருங்குவார்கள். தாக்குதல், கடத்தல் என எந்த ஆபத்து இருந்தாலும் உடனே தெரிந்து விடும். இதேபோல பெண் தொழிலதிபர்களும் தங்களுக்கு பெண் பாடிகார்டுதான் தேவை என்கிறார்கள். ஆண்களை எல்லா இடங்களுக்கும் கூடவே அழைத்துச் செல்வதன் அசௌகரியங்களை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இதனால் ஆண் பாடிகார்டுகளைவிட பெண்களுக்கு டிமாண்ட் அதிகம்; சம்பளமும் அதிகம். திறமையான ஒரு பெண் பாடிகார்டு, மாதத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்க முடியுமாம். இதனால் டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் இந்த வேலைக்கு திடீர் மவுசு. துப்பாக்கியால்
சுடுதல், கடுமையான பணிச் சூழலை தாங்கிக் கொள்ளுதல், தற்காப்புக் கலை என எல்லாம் கலந்த 10 மாதப் பயிற்சிக்குப் பிறகே பாடிகார்டுகள் தயாராகிறார்கள்.
- ரெமோ