அறிமுகமான படத்திலேயே நம்பிக்கை மிளிர ‘வம்ச’ப் பெருமையைக் காப்பாற்றிய ஹீரோ அருள்நிதி, இப்போது தன் மூன்றாவது படத்தில் எதிர்பார்ப்பை இன்னும் சில அங்குலங்கள் அதிகரித்திருக்கிறார். அவர் நடித்து வெளியாகவிருக்கும் மோகனா மூவீஸின் ‘மௌனகுரு’ டிரெய்லர் தியேட்டர்களை அதிரடியாக ஆக்கிரமிக்க, படம் பற்றி மௌனம் கலைந்தார் அருள்நிதி.
‘‘என் முதல்படம் ‘வம்ச’த்துல வெயில், மழை, கம்மாய், கரை எல்லாமே எனக்கு ஒண்ணு மாதிரிதான் தோணிச்சு. நடிப்பு எனக்கு புதுசுங்கிறதால எல்லாமே எனக்குப் புதுசா இருந்தது.
சொன்னதை செய்யற வேலை மட்டும்தான் என்னோடதா இருந்தது. அந்தப் படத்து உழைப்பு பாராட்டப்பட்டதுல அடுத்த படமான ‘உதயன்’ல எனக்கே என்மீதான நம்பிக்கை அதிகமாச்சு. அதனால இந்தப்படம்தான் என்னை நிரூபிக்கப் போற படமா இருக்கப்போகுது. அந்த அளவுக்கு ஒரு நடிகனா எனக்கான வாய்ப்பு அதிகம் உள்ள ஸ்கிரிப்ட் ‘மௌனகுரு’...’’ என்று ஆரம்பித்தவர் தொடர்ந்தார்.
‘‘மௌனகுருன்னா பேசாம இருக்கிறவன்னு அர்த்தப்படுத்திக்கக் கூடாது. இதுல நான் ஏற்கிற கல்லூரி மாணவன் ‘கருணாகரன்’ங்கிற கேரக்டர் பேசுவான்; ஆனா அது கேட்கப்படற கேள்விகளுக்கான ஒற்றை வார்த்தை பதிலாதான் இருக்கும். பாசமோ, காதலோ எதுக்காகவும் ஒற்றை வார்த்தைதான். அதிகமா பேசற மதுரையில, அதிகமா பேசாத கருணாகரனோட கேரக்டர் ஒரு புதிர். அப்பா இல்லாம அம்மாவோட வளர்ப்பிலயும், அண்ணனோட கண்காணிப்பிலும் இருக்கும் அவனுக்கு, அந்த அதீத கவனிப்பே சுமையா மாறி மன நெருக்கடியைக் கொடுத்து படிக்க விடாம செய்யுது. அதன் விளைவா சென்னை வந்து படிப்பைத் தொடரும்போது செய்யாத குற்றத்தில மாட்டிக்க நேருது. அதிலிருந்து எப்படி மீண்டு வர்றான்ங்கிறதை க்ரைம் த்ரில்லரா சொல்லியிருக்கார் டைரக்டர் சாந்தகுமார்.
டைரக்டர் தரணியோட ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’யில சினிமாவைக் கத்துக்கிட்ட சாந்தகுமார், பரபரப்பு கொஞ்சமும் குறையாம இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட்டை அமைச்சிருக்கார். ஆனா எதுவுமே கற்பனை அதிகமுள்ள காட்சிகளா இல்லாம, இயல்பா கண்முன் நடக்கிற நிகழ்வுகளா விரியும். கோடம்பாக்கம் பாலத்துக்கு அடியில இருக்கிற மார்க்கெட்டுல நான் இயல்பா போட்ட சண்டைக்காட்சியே அதுக்கு சாட்சி. செய்யாத தப்புக்காக போலீஸ்ல சிக்கி நான் சந்திக்கிற அனுபவங்கள் படத்துக்கு உயிர்நாடியா இருக்கும். இது தொடர்பா ஒரு சீனுக்கு கேரளா காட்டுக்குள்ள அஞ்சுநாள் ஷூட் பண்ணினோம். கதைப்படி போலீஸ் காவல்ல இருக்கிறப்ப நான் கொஞ்சம் ஒல்லியா தெரியணும். அதுக்காக நான் இளைக்க வேண்டியிருந்தது. ஆனா கேரளக் காட்டுக்குள்ள எடுத்த சீன்கள்ல பெரும்பாலும் முழங்கால் போட்டேதான் நடிக்க வேண்டியிருந்தது. காட்டுப்பயணம், முட்டி போட்ட வலின்னு எல்லாம் சேர்ந்தே படத்துக்குத் தேவையான அளவுக்கு இளைச்சுட்டேன்.

என் நடிப்புக்கான அடையாளமா இந்தப்படம் இருக்கும். என்னை கஸ்டடியில வச்சிருக்க போலீஸ் அதிகாரிகளான ஜான் விஜய், மது, பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தியோட நான் வர்ற காட்சிகள் முக்கியமான எபிஸோடா இருக்கும். அவங்களோட தவறுகள் புரிஞ்சு எனக்கு ஆதரவா இருக்கிற அதிகாரியா நடிச்சிருக்க உமா ரியாஸ்கானுக்கும் இந்தப்படம் நல்ல பேரைத் தரும்.
என்னோட ஜோடியா இனியா. ‘வாகை சூட வா’வில நல்ல பேரெடுத்துட்ட இனியா, இதுல அதிகமா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அதை நிறைவா செய்வாங்க. கமர்ஷியலான ஹீரோயினா இல்லாம, இயல்பான மருத்துவக்கல்லூரி மாணவியா வர்ற அவங்கதான் என்மேல அக்கறை காட்டி, என்னை அதிகமா புரிஞ்சு வச்சிருக்கவங்களா இருப்பாங்க. ‘தேவைக்கேத்த சம்பாத்தியத்துல மன நிறைவான வாழ்க்கை வாழ விரும்பற’ என் மனதை அவங்ககிட்டதான் நான் வெளிப்படுத்தியிருப்பேன். இனியாவோட சொந்தக்குரலை இந்தப்படத்துல கேட்கலாம்.
கவிஞர் வாலி எனக்கான அறிமுகப்பாடலை எழுதியிருக்கார். ‘புதுப்புனல் என பாய்கிறான்...’னு தொடங்கற அந்தப்பாடல்ல என்னோட கேரக்டர் காட்சிகளா விரியும். அதுக்காக பாம்பைக் கையில பிடிச்சேன். ஹீரோ கைல பாம்பு வச்சிருந்தா அது வெற்றிக்கான சென்டிமென்ட்டுன்னு பிறகு சொன்னாங்க. ஆனா அதுக்காக அதைச் செய்யாம கதைக்காக செய்தேன். அதே வாலி சார் பல வருஷங்களுக்கு முன்னால எழுதிய ‘ஜம்புலிங்கமே ஜடாதரா...’ பாடல் வரிகளும் அதே பாடல்ல மிக்ஸ் ஆகி வர்றதுபோல எஸ்.தமன் இசைச்சிருக்கார். நா.முத்துக்குமார், மதன்கார்க்கி எழுதி அவர் இசைச்சிருக்க பாடல்களைத் தாண்டி பின்னணி இசைலயும் அவர் பின்னி எடுத்திருக்கார். மகேஷ் முத்துசாமியோட திறமை ‘அஞ்சாதே’, ‘நந்தலாலா’, ‘வம்சம்’ படங்களைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் பாராட்டப்படும்.
படத்தோட டைட்டில் தான் ‘மௌனகுரு’வே தவிர, ரசிகர்களைப் ‘பேச வைக்கிற’ படமா நிச்சயம் இது இருக்கும்..!’’
வேணுஜி