சூட்கேஸில் ரஷ்யாவுக்கே எடுத்துச் செல்லப்பட்ட புடினின் நம்பர் 2!
இல்லை. கடந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தந்த ரஷ்ய அதிபரான புடின் குறித்தோ, அப்பொழுது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒப்பந்தமான விவரங்கள் குறித்தோ இந்தக் கட்டுரை சொல்லப் போவதில்லை. மாறாக, இயற்கை உபாதையால், தான் வெளியேற்றிய கழிவை, மிக மிக பாதுகாப்பாக சூட்கேசில் அடைத்து ரஷ்யாவுக்கே மீண்டும் எடுத்துச் சென்றிருக்கிறாரே புடின்... அது மேட்டர்.
 மனிதக் கழிவு எனப்படும் நம்பர் 2வுக்குள் அப்படியென்ன ரகசியம் இருக்கிறது?
அரசியல் சார்ந்து நிறையவே இருக்கிறது. இதை உலகுக்கு தெரிவித்ததும் அதே ரஷ்யாதான்.இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ரஷ்யாவுக்கு வருகை தந்த பிறநாட்டுத் தலைவர்களின் மனிதக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டன. அதாவது ஒருவரது நம்பர் 2வில் ட்ரிப்டோ ஃபேன் அதிகமாக வந்தால் அவர் அமைதியான நபர்; பொட்டாசியம் குறைவாக இருந்தால் முறையாக தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்... இப்படி குறிப்பிட்ட தலைவரின் குணம் முதல் அவரது உடல் நோய் வரை கண்டறியலாம்; இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இப்படித்தான் அரசியல் தலைவர்களின் இயல்புகளைத் துல்லியமாக கண்டறிந்தார்கள்; இன்றும் அப்படி கண்டறிகிறார்கள்.
ரஷ்ய உளவுத் துறையில் பணிபுரிந்த புடினுக்கு இது நன்றாகவே தெரியும். அவரே தனது பணிக் காலத்தில் இப்படி எதிரிகள் அல்லது தலைவர்களின் நம்பர் 2வை சேகரித்து பரிசோதித்து ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார்.
அப்படியிருக்க ரஷ்யாவின் அதிபராக, தானே பொறுப்பேற்றதும் தனது நம்பர் 2வை மற்றவர்கள் சேகரித்து ஆராய விட்டுவிடுவாரா? எனவேதான், இன்றுவரை தனிநபர் பாதுகாப்புக்கு பெயர் பெற்றவராக புடின் திகழ்கிறார். தனது டிஎன்ஏ, தனது நம்பர் 2 வழியாகக் கூட மற்றவர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என எச்சரிக்கையாக இருக்கிறார்.
மிகையில்லை. புடினின் உடல் சார்ந்து இருக்கும் பந்தோபஸ்துக்கு ‘புதின் பயாலஜிகல் ஷீல்டு’ என்று பெயர். இதன் மூலம் அவர் உண்பது, பருகுவது, கழிப்பது என அனைத்துமே பாதுகாக்கப்படுகின்றன.
இப்பொழுது புடின், அரசியல் தலைவர்களை உளவு பார்ப்பது, அவர்களது டிஎன்ஏ சேகரிக்கப்படுவதை எல்லாம் விட்டுவிடலாம். சாதாரண மக்களின் நம்பர் 2வை வைத்து அவர்களது உடல் நோய்களை கண்டறிய முடியுமா?
முடியும் என உடனே பதில் சொல்வோம். மருத்துவமனைக்கு சென்றதுமே ‘மோஷன் டெஸ்ட்’ எடுக்கப்படுவதால் இதுகுறித்து நாம் அறிவோம்.அறியாதது, அப்படி ஒருவரின் நம்பர் 2வை வைத்து என்னென்ன கண்டறிய முடியும்?ஆட்டுப் புழுக்கை போல தனித்தனி கடினமான புழுக்கையாக நம்பர் 2 வெளியேறினால், அவருக்கு தீவிரமான மலச்சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்.
பெரிய கடினமான நீர்த்தன்மையற்ற கட்டி போல் இருந்தால் மிதமான மலச்சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம். இதைவிட சற்று பெரிதாக அதே சமயம் இலகுவாக நீர்ச்சத்துடனும் சில வெடிப்புகளுடனும் வெளியேறுவது நார்மல். பாம்பு போல இலகுவாக நீர்ச்சத்துடன் வருவதும் நார்மல்தான்.
மிருதுவான தன்னந்தனி கட்டிகளாக வந்தால் உணவில் நார்ச்சத்து பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம். தனித்தனி கட்டிகளாக இல்லாமல் ஒன்றோடு ஒன்று பிணைந்து பேஸ்ட் போன்று வெளியேறினால் குடலில் ஏதோ உள்காயம் / அழற்சி / தொற்று / புண் இருப்பதாக அர்த்தம். வயிற்றுப்போக்கு குறித்து அனைவருக்கும் தெரியும். எனவே அது குறித்த விளக்கம் தேவையில்லை.
ஆக, தொற்றுநோய்கள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள், புழுக்கள்... என எவையெல்லாம் நம் உடலில் இருக்கின்றன... உடல் உறுப்புகளை அவை எப்படி பாதிக்கின்றன என்பதை அறிவதற்கான வாசலாக நம்பர் 2வே இருக்கிறது.
இன்று மருத்துவ தொழில்நுட்பம் பெருமளவு வளர்ந்துள்ளது. அந்தவகையில் ஃபீக்கல் ப்ரோடியோமிக்ஸ் எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம்பர் 2வில் இருந்து ஒருவரது டிஎன்ஏ, புரதம் மற்றும் வளர்சிதை மாற்ற காரணிகளை வைத்து அந்தக் குறிப்பிட்ட நபரின் நோய்க்குத் தேவையான மருந்துகளை உருவாக்க முடியும். அவ்வளவு ஏன்... மலம் சார்ந்த மருத்துவ அறிவியல், அடிக்கடி அபாயகரமான க்ளாஸ்ட்ரிடியம் டிஃபிசில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே வேறொருவர் மலத்திலிருந்து நல்ல பாக்டீரியாக்களை மாற்றும் சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது புரிகிறதா... புடினின் நம்பர் 2 ஏன் பாதுகாக்கப்படுகிறது என்று!
நிரஞ்சனா சூர்யா
|