இந்தியா... இண்டிகோ... என்ன பிரச்னை



பேருந்து வரவில்லை என்றால் சாதாரண மக்கள் எப்படி கொந்தளிக்கிறார்களோ அப்படி இந்திய விமான சேவையை பயன்படுத்தும் நடுத்தர, உயர் நடுத்தர இந்தியர்கள் கடந்த சில நாட்களாக கொந்தளிக்கிறார்கள். விமான நிலையத்தில் இருந்தபடி ஒன்றிய அரசுக்கு எதிராக ஆவேசமாகக் குரல் கொடுக்கிறார்கள்.

என்ன விஷயம்?

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ நிறுவனம். நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 2200க்கும் மேற்பட்ட விமானங்களை இந்நிறுவனம் இயக்கி வருகிறது. 
குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியாவுக்குள் பயணிக்க, இண்டிகோ விமானங்களையே பயன்படுத்த வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது.இந்நிலையில்தான் அடிக்கடி விமானம் வருவதில் தாமதம், திடீரென விமானப் பயணம் ரத்து என இண்டிகோவின் போக்கு பயணிகளை டென்ஷன்படுத்தி வருகிறது.  

கடந்த நவம்பர் மாதம் மட்டுமே 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமானத்தை நம்பி தங்கள் வேலையை, அப்பாயின்ட் மென்ட்டை, திருமணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களை திட்டமிட்ட மக்கள் நிலைகுலைந்தார்கள்.

இவற்றுக்கெல்லாம் சிகரமாக கடந்த டிசம்பர் 2ம் தேதி அன்று 1400 இண்டிகோ விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. மறுநாள், டிசம்பர் 3 அன்று பிற்பகல் தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் 200க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் கூட்டாக ரத்து செய்யப்பட்டன. 

வேலை நாள் என்பதால் முன்பதிவு செய்து விமானத்துக்காக காத்திருந்த பயணிகள் பதறினார்கள். என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்த விமானம் ஏற்பாடு செய்யப்படுமா இல்லையா என்பதில் தொடங்கி எது குறித்தும் சரியான பதில் கிடைக்காமல் அங்கும் இங்கும் ஓடினார்கள்.

திருமண ரிசப்ஷனுக்காக வரவிருந்த புதுமணத் தம்பதி, விமானம் ரத்தானதால் காணொளி வழியாக, தங்கள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார்கள் என வைரலான வீடியோ ஒரு சோறு பதம் என்றால் -மெடிக்கல் எமர்ஜென்சிக்காக ஊருக்கு வரவிருந்த பயணிகள் தங்கள் தலையில் அடித்துக் கொண்டு அழுதது உள்ளத்தை அறுக்கும் மறு சோறு பதம்.
‘கடந்த இரண்டு நாள்களாக இண்டிகோவின் செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க்  முழுவதும் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறோம்.  இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு எங்கள் வாடிக்கையாளர்களிடம் மனதார  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

சிறிய தொழில்நுட்பக் கோளாறுகள்,  குளிர்காலத்துடன் தொடர்புடைய அட்டவணை மாற்றங்கள், பாதகமான வானிலை,  திருத்தப்பட்ட விமான கடமை நேர வரம்பு விதிமுறைகளைச் செயல்படுத்துதல்  உள்ளிட்ட பல எதிர்பாராத செயல்பாட்டுச் சவால்கள், எங்கள் செயல்பாடுகளில்  எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.

இடையூறுகளைக் கட்டுப்படுத்தவும்,  நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை நாங்கள்  தொடங்கியுள்ளோம். வாடிக்கையாளர்களின் அசௌகரியத்தைக் குறைக்கவும்,  செயல்பாடுகள் விரைவாக நிலைபெறுவதை உறுதி செய்யவும் எங்கள் குழுக்கள் 24 மணி  நேரமும் உழைத்து வருகின்றன...’ என்றெல்லாம் இண்டிகோ நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்தாலும் மக்கள் இதை ஏற்கத் தயாராக இல்லை.

ஒன்றிய பாஜக அரசின் போக்குதான் இதற்குக் காரணம் என அரசியல் பார்வையாளர்கள் ஆணித்தரமாகச் சொல்கிறார்கள்.  கடந்த ஜூலை மாதம் அகமதாபாத் விமான விபத்து இந்தியாவையே உலுக்கியது. இதனையடுத்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடந்த மாதம் திருத்தப்பட்ட விமான கடமை நேர வரம்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

இந்தப் புதிய விதி, விமானிகள் மற்றும் கேபின் குழுவில் உள்ளவர்களின் வேலை நேரத்தை நிர்ணயித்தது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம், வாரத்திற்கு 35 மணிநேரம், மாதத்திற்கு 125 மணிநேரம், வருடத்திற்கு 1,000 மணிநேரம் என வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தியது.

அதேபோல் கட்டாய ஓய்வு நேரங்களையும் அதிகரித்துள்ளது. விமானிகள் மற்றும் கேபின் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் விமான நேரத்தின் இரு மடங்கு ஓய்வு நேரத்தைப் பெறவேண்டும். எந்தவொரு 24 மணி நேர பயணத்திலும் குறைந்தபட்சம் 10 மணி நேர ஓய்வு இருக்க வேண்டும்.

விமானிகள் மற்றும் கேபின் குழுவினர் போதுமான ஓய்வு பெறுவதை உறுதி செய்வதற்கும், பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பதற்கும் DGCA கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு ஏற்றபடி இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதாக ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

மறுதரப்போ, ஒன்றிய அரசின் இந்தப் புதிய விதிகளை ஏற்க இண்டிகோ தயாராக இல்லை. எனவே அரசை மிரட்டும் விதமாக போதுமான விமானிகள் மற்றும் பணியாளர்களை அமர்த்தாமல், விமானங்களை இயக்காமல், பயணிகளை ஆத்திரப்பட வைத்து, அந்தக் கோபத்தை அரசுக்கு எதிராகத் திருப்பி, ஒன்றிய அரசை அடிபணிய வைத்து புதிய விதிகளை வாபஸ் பெறச் செய்யவே திட்டமிட்டு விமானங்களை கேன்சல் செய்கிறது.

இது வெறும் தொழில்நுட்பக் கோளாறோ, பனிப் பொழிவோ அல்ல. இது மோடி அரசின் கீழ் உருவாக்கப்பட்ட இரட்டையர் ஆதிக்கம் என்ற தவறான கொள்கையின் நேரடி விளைவு. 
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையை இண்டிகோவும் இன்னொரு நிறுவனமும் மட்டுமே ஆளும் நிலையை மோடி அரசு உருவாக்கியுள்ளது. போட்டி இல்லாத சந்தையில், ஒரு நிறுவனம் நினைத்தால் எப்படிப்பட்ட நெருக்கடியையும் உருவாக்க முடியும் என்பதற்கு இதுவே சாட்சி. 

முறையாகத் திட்டமிடாத கார்ப்பரேட் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு பயணிகளின் பாதுகாப்பை விட கார்ப்பரேட் லாபமே முக்கியம் என இண்டிகோவிற்கு மட்டும் இப்பொழுது புதிய விதிகளிலிருந்து பிப்ரவரி வரை விலக்கு அளித்துச் சரணடைந்துள்ளது.

விமானிகள் சோர்வடையாமல் இருக்கக் கொண்டுவரப்பட்ட விதியை, ஒரு நிறுவனம் அமல்படுத்த மறுக்கிறது என்பதற்காக அரசே தளர்த்துவது எவ்வளவு பெரிய அவலம்..? என மறுதரப்பு சரமாரியாக வினாக்களைத் தொடுக்கிறது.விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளும் இதே கேள்விகளை எழுப்புகிறார்கள். இவை ஒன்றிய அரசின் செவியில் விழுமா?

என்.ஆனந்தி