நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்கள் கூடவே இருக்கும் நம்பர் 2 அமைதியா இருந்தாலே சினிமா உருப்படும்!
‘‘வெறித்தனமான காதல் அழகுதான். ஆனால், நாம் காதலிக்கும் நபர் தகுதியானவரா என்பதும் அவசியம்...’’ இக்கால இளைஞர்களின் மனநிலையை படம்பிடித்து காண்பிப்பது போல் பேசத் தொடங்கினார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். ‘மான் கராத்தே’, ‘கெத்து’ படங்களுக்குப் பிறகு தனது மூன்றாவது படமாக ஆக்ஷன் கமர்ஷியல் படத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்.
 ‘ரெட்ட தல’..?
டபுள் ஆக்ஷன் அருண் விஜய்... இதை நான் மறைச்சு வைக்கலை. கதைப்படி ரெண்டு அருண் விஜய். தவிர டபுள் ஆக்ஷன் கதையை நாம் நினைத்தாலும் ரிலீஸ் வரை மறைத்து வைக்க முடியாது.
 அப்படிப்பட்ட ஒரு கதைக்கு பொருத்தமா ‘ரெட்ட தல’ டைட்டில் அமைஞ்சது. ‘தமிழ்ச் சினிமா துவங்கிய காலத்தில் இருந்து எத்தனையோ விதமான டபுள் ஆக்ஷன் கதைகளை பார்த்திருக்கோம். இதுவரையிலும் யாரும் பார்க்காத கதை’னு எல்லாம் சொல்லி எந்த எதிர்பார்ப்பும் கொடுக்க விரும்பலை. படம் பாருங்க. நிச்சயம் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.
என்ன கதை..?
காதலும் பணமும் ஒண்ணு சேர்கிற இடத்தில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதுதான் கரு. காதலிக்கும் பெண்ணிற்காக எந்த எல்லை வரையிலும் போகலாம் என நினைக்கிற ஓர் ஆண், அதற்கு அந்தப் பெண் தகுதியானவரா இருக்காங்களா இல்லையா என்பதைச் சுற்றி படம் நகரும்.
அதாவது வெறித்தனமான காதல் கொண்ட ஓர் இளைஞன், தான் காதலிக்கும் பெண்ணிற்காக எதையும் செய்யத் துணிந்த மனநிலை கொண்டவன். அதில் அவனுக்கு நிறைய பாடங்கள், பயிற்சிகள் கிடைக்குது. அது என்ன என்கிறதுதான் கதை. இதில் இரண்டு அருண் விஜய்... மூன்று கதாநாயகிகள்... இவங்க எல்லாம் சேர்ந்து கதைக்குள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் ‘ரெட்ட தல’.  அருண் விஜய் அவ்வளவு சுலபமாக ஒரு கதையில் திருப்தி அடைய மாட்டாரே?
அவருடைய கதை கேட்கும் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கும். முதலில் கதை கேட்பார். பிறகு தன்னுடைய கேரக்டர் பற்றி முழுமையாக விளக்கமாக கேட்பார். பிறகு ஒருசில முக்கியமான காட்சிகள், பாயிண்டுகளை மட்டும் கேட்டு அதில் என்னென்ன செய்யலாம், தான் எப்படித் தயாராகணும் என்பதை எல்லாம் பேசிட்டுதான் கதைக்குள் வருவார். இந்தக் கதை அவருக்கு எந்த அளவுக்கு பிடிச்சிருக்குன்னா, தன்னுடைய சொந்த ஊருக்கு என்னையும் என் அசிஸ்டென்ட் டைரக்டர் குழுவையும் கூட்டிட்டு போய் விருந்து வைக்கும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாக மாறி இருக்கு.
 இதுவரையிலும் அந்த வீட்டிற்கு வெளி ஆட்கள் யாரையும் அவர் கூட்டிட்டு போனதில்லை. இதுதான் முதல் முறை அப்படின்னு அவருடைய அப்பா விஜயகுமார் சார் உட்பட பலரும் சொன்னாங்க. ரொம்ப பெருமையான ஒரு விருந்தா நான் இப்ப வரைக்கும் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்படறேன். என்ன கதாபாத்திரம் சொன்னாலும் அதற்கு உடலாலும் மனதாலும் அப்படியே தயாராகி நிற்கக்கூடிய ஒரு நடிகர். நிச்சயம் ஒரு கதையில் திருப்தி அடைய மாட்டார். ஆனால், தான் திருப்தி அடையும் வரையிலும் அந்தக் கதைக்கு என்ன வேணுமோ அதை செய்வார். மூன்று கதாநாயகிகள்... யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்?
எந்த நடிகை, என்ன கதாபாத்திரம்னு சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும். ஆனால், மூன்று கதாநாயகிகளும் முப்பெரும் தேவியரான சரஸ்வதி, மகாலட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் குணங்களையும் பிரதிபலிக்கிற மாதிரி அவங்க கேரக்டர்ஸை டிசைன் செய்திருக்கேன். சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், மூன்றாவது பெண் ஒரு சின்ன சர்ப்ரைஸா வச்சிருக்கேன். இவங்க இல்லாம ஹரிஷ் பேராடி, ஜான் விஜய், யோக் ஜப்பீ, பாலாஜி முருகதாஸ், வின்சென்ட் அசோகன் அத்தனை பேரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்காங்க.
படத்தின் தொழில்நுட்ப வேலைகள் எல்லாம் எப்படி இருக்கு அப்படின்னு நானே சொல்லக்கூடாது. பார்த்து எனக்கு சொல்லுங்கள். படத்துக்கு சினிமாட்டோகிராபி
டிஜோ டாமி. புது ஒளிப்பதிவாளர்.
‘துருவங்கள் 16’, ‘டாக்ஸிவாலா’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் சீனியர் அசிஸ்டென்ட் ஒளிப்பதிவாளராக வேலை செய்தவர். இந்தப் படம் மூலமாக அறிமுகம். படத்துக்கு இசை சாம் சி எஸ். அவர் இசை பற்றி நான் சொல்ல என்ன இருக்கு? ஆக்ஷன் கதைக்கு அட்டகாசமான பேக்ரவுண்ட் ஸ்கோர் கொடுத்திருக்கார். பாடல்களும் வெளியாகி டிரெண்டில் இருக்கு. இந்தக் கதைக்கு மிகப்பெரிய சப்போர்ட் எடிட்டர் ஆண்டனி சார். நிறைய இடங்களில் எடிட்டரா மட்டுமில்லாமல், ஒரு சீனியர் டெக்னீசியனா நிறைய ஆலோசனைகளும் கொடுத்தார். கதை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை விறுவிறுப்பாக இருக்க ஆண்டனி சார் மிக முக்கிய காரணம். ‘மான் கராத்தே’, ‘கெத்து’ உள்ளிட்ட படங்கள் வரும்போது இருந்த பார்வையாளர்கள் இப்போது இன்னும் புத்திசாலியாக மாறி இருக்கிறார்கள்... இந்த வேளையில் உங்கள் படம் ரிலீஸ்..?
நானும் நிறைய இடைவேளை எடுத்துக்கிட்டேன். மற்ற மொழிகளில் இருக்கும் பலமும் நம் தமிழ் மொழியில் இருக்கும் பலவீனமும் ஒன்றுதான். கதை மாந்தர்கள். ஓர் இயக்குநர் நல்ல கதை கொடுப்பார் என சொல்ல முடியாது. கதாசிரியர் அவர் வேலையை பார்த்தால் நல்ல கதைகளை, திரைக்கதையாக இயக்குநர் மாற்றுவார். ஒரு காலத்தில் அவ்வளவு கதாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இருந்த தமிழ் சினிமாவில் இப்போது அப்படியான ஒரு குழு இல்லாமல் போயிடுச்சு.
எனக்குத் தெரிந்து ஒரு படம் வெற்றி பெற கதாசிரியர்கள் கதை எழுதணும். காரணம், கதாசிரியர்கள்தான் கற்பனையாளர்களாக மாறி அவ்வளவு கதை சொல்வாங்க. அதனால்தான் இன்னைக்கு வெளியாகும் நிறைய படங்கள் நல்ல மேக்கிங் இருந்தும் எதிர்மறை விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்ள வேண்டியதா இருக்கு. நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க. அவர்களுக்குரிய ஊதியம் கொடுத்து ஒவ்வொரு இயக்குநரும் உடன் வைத்திருந்தாலே நிறைய நல்ல கதைகள் கிடைக்கும்.
ஆடியன்ஸ் இன்னைக்கு இல்லை, என்னைக்குமே புத்திசாலிதான். இப்போ பல மொழி படங்கள், வெப் தொடர்கள் பார்க்கறதால் டெக்னிக்கலாகவும் டெவலப் ஆகியிருக்காங்க. அப்ப அவர்களை விடவும் நாம புத்திசாலியா கதை சொல்லணும். அல்லது மேஜிக் மொமெண்ட்களையாவது கொடுக்கணும். மலையாளம், தெலுங்கு சினிமா இப்போது கதை மாந்தர்களை நம்பி படமெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால், நமக்கு அடிநாதமாக இருந்த கதாசிரியர்களை நாம் இழந்துட்டோம்.
அதேபோல் இன்னொரு விஷயம், ‘நம்பர் 2’... ஒரு நடிகருக்கு அருகில் இருக்கும் நம்பர் 2, ஒரு தயாரிப்பாளருக்கு பக்கத்தில் இருக்கும் நம்பர் 2, என்னைப் போன்ற இயக்குநருக்கு அருகில் இருக்கும் நம்பர்2...இவர்களைப் பேசவிடாமல் அமைதியாக இருக்க வச்சாலே சினிமா ஆரோக்கியமா மாறும். பெரும்பாலும் நமக்கருகில் இருக்கும் யாரோ ஒருவர்தான் நம்மை குழப்பிக்கிட்டே இருப்பாங்க. சொந்தமா முடிவெடுக்க ஆரம்பிச்சிட்டாலே நாமும் உருப்படுவோம்; நாம் இருக்கும் துறையும் ஆரோக்கியமான பாதைக்கு மாறும்.
எப்படிப்பட்ட அனுபவம் கொடுக்கப் போகிறார்கள் இந்த ‘ரெட்ட தல’?
‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ இதுதான் படத்தின் சாராம்சம். நாம் கொடுக்கும் அன்புக்கு ஒருவர் தகுதியானவரா என்பதை மையக் கருவாக வைத்துதான் இந்தப் படம். அதைத் தாண்டி நல்ல கமர்ஷியல் தியேட்டர் அனுபவம் கொடுக்கும் திரைப்படம். கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைகளுக்கு சிறப்பாக இந்த படம் இருக்கும்.
ஷாலினி நியூட்டன்
|