திருப்பரங்குன்றமும் திருக்கார்த்திகையும் தீர்ப்பும்!
முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் முதல்படை என்ற பெயர் கொண்டது, மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில். குடவரைக் கோயிலான இதில் முருகக் கடவுளின் கருவறைக்கு நேராக மலையின் மேலே உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்குதான் காலம் காலமாக கார்த்திகை அன்று தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு உயர்நீதிமன்றத் தீர்ப்பிலும் உச்சிப் பிள்ளையார் கோயிலில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரச்னை பெரிதாகி இருக்கிறது.  இதுகுறித்து, இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலிருந்து கவனித்து வரும் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான மருதுவிடம் பேசினோம்.
‘‘நான்கைந்து முறைக்குமேல் அந்த மலைக்குப் போய் வந்திருக்கேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக்கேன். அதனால் அந்த மலையைப் பத்தி முதல்ல தெரிஞ்சுக்கணும்.திருப்பரங்குன்றம் மலையானது கந்தன் மலை, சிக்கந்தர் மலை, சமணர் மலைனு மூன்றாக பிரிக்கப்பட்ட ஒன்று. இதில் கந்தன் மலையில் முருகன் கோயில், உச்சிப் பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் ஆலயம் எல்லாம் வரும்.
முருகன் கோயிலின் வலதுபுறம் சிக்கந்தர் அவுலியா தர்காவும், நெல்லித்தோப்பும், சமணர் படுகைகளும் வருது. இதில் சிக்கந்தர் தர்கா பாரம்பரியம் கொண்டது. சிக்கந்தர் என்பவர் ஒரு சூஃபி ஞானி. அவருக்கு அங்க சமாதி வச்சிருக்காங்க. நீங்க மேலே போய் பார்த்தால் அந்த இடம் ஒரு மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருப்பது புரியும்.
இந்த தர்கா ஐநூறு ஆண்டுகளாக இருக்குது. பொதுவாக தர்காவில் இஸ்லாமியர்களைவிட இந்துக்கள்தான் அதிகம் வழிபாடு செய்வாங்க. நூறு பேரில் 90 பேர் இந்துக்கள்தான். இது இங்கனு இல்ல. இந்தியா முழுவதும் அப்படிதான்.
இவங்க அங்க வேண்டுதல் வச்சு அது நிறைவேறியதும் நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகள் அறுப்பாங்க. இந்த மலைக்கு ஒரு வரலாறும் சொல்லப்படுது. அதாவது பாண்டிய மன்னன் ஒருவருக்கு திடீர்னு கண்கள் தெரியாம போனதாகவும், எங்க போயும் தீராததால் சிக்கந்தர் தர்காவில செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார் என்றும், அதன்பிறகு சரியானதாகவும் அந்தக் கதை இருக்குது. அதுக்கு பிறகே மக்கள் அதிகமாக போறதா சொல்றாங்க.
அப்புறம், மதுரையில் உசிலம்பட்டிக்கு பக்கத்துல வாகைக் குளம்னு ஒரு கிராமம் இருக்கு. அதைத்தாண்டி நீங்க பல கிராமங்களுக்கு போனீங்கன்னா சிக்கந்தர் வகையறானே ஒரு உட் பிரிவு இருப்பதைப் பார்க்கலாம். இவங்க யாருன்னா, அந்த மூன்று மலைகளையும் காப்பாற்றியவர்கள். அதாவது திருப்பரங்குன்றம் மலைக்குக் காவலாளிகளாக இருந்தவர்கள். அவர்களுக்குக் கொடுக்கிற பட்டமே சிக்கந்தர். அப்ப மத நல்லிணக்கம் எப்படி இருந்திருக்குனு பாருங்க.
கந்தன்மலையைக் காப்பாற்றுகின்றவர்களுக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர், சிக்கந்தர் மலையாங்கிற பிரிவு. இதெல்லாம் சிக்கந்தர் தர்காவின் பாரம்பரியத்தையும் நம் மத நல்லிணக்கத்தையும் சொல்லக்கூடியது.இதில் கோயில் இருக்கக்கூடிய இடத்திற்கும் தர்காவிற்குமான இடைவெளி வெறும் 50 மீட்டர் கிடையாது. கிட்டத்தட்ட முக்கால் கிலோமீட்டர் வரும்.
இந்நிலையில் கோயில் கருவறைக்கு மேல் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏத்தப்பட்டு வந்தது. இதுவும் நூற்றாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கம்.
இதில் முதலில் பிரச்னை பிரிட்டிஷ் காலத்தில் தொடங்குது. அப்போ, 1924ம் ஆண்டு சிவிக் கோர்ட் தீர்ப்பு வருது. அதுல நெல்லித்தோப்பும், அதுக்குமேல் இருக்கிற பகுதிகளும் தர்காவுக்கு சொந்தம்னும், கீழ இருக்கிற பகுதிகள் குறிப்பா சுப்பிரமணிய ஆண்டவர் சந்நிதி அறங்காவலர் கோயில் குழுவுக்கு சொந்தம்னும் தீர்ப்பு வழங்கப்படுது.
அதுக்குப் பிறகு எந்தப் பிரச்சனையும் கிடையாது. 2014ம் ஆண்டு சுப்ரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்துல வழக்குத் தொடர்ந்தார். அவர் ஆகமப்படி உச்சிப்பிள்ளையார் கோயில் இல்லாமல் மலையின் உச்சியில்தான் தீபம் ஏத்தணும்னு சொன்னார்.
அது சம்பந்தமா விசாரிச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ள முடியாதுனு சொல்லி தீர்ப்பு வழங்கியது. உடனே அவர் அதே உயர்நீதிமன்றத்துல மேல்முறையீடு செய்தார். 2017ம் ஆண்டு பவானி சுப்பராயன், கல்யாணசுந்தரம் அடங்கிய இரு நீதிபதிகள் பெஞ்சும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டிய அவசியம் கிடையாதுனு தீர்ப்பு கொடுத்தாங்க.
அதாவது 2014ல் கொடுத்த தீர்ப்பு சரிதான்னு சொன்னாங்க. இதன்படி காலம் காலமாக தீபம் ஏத்தப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில்லதான் கார்த்திகை தீபம் ஏத்தணும் என்பதுதான். அங்க எங்கேயுமே தீபத்தூண்ல ஏத்தணும் என்பது பத்தி அவங்க பேசவே இல்லை. ஏன்னா, அப்போ தீபத்தூண் என்கிற பிரச்னையே கிடையாது.
இப்ப என்ன செய்றாங்கன்னா கொஞ்சம் அதை மாத்தி, நீதிமன்றத்தை ஏமாத்தி நாங்க தீபத்தூண்ல ஏத்தணும்னு வழக்கை தாக்கல் செய்திருக்காங்க. இப்படி வழக்கைத் தாக்கல் செய்யும்போதே நீதிபதி, ‘ஏற்கனவே தீர்ப்பு இருக்கு.
அப்பீல் பண்ணினதிலும் தீர்ப்பு வந்திருக்கு. நீங்க மேற்கொண்டு உச்சநீதிமன்றம் போங்க’னு சொல்லியிருக்கலாம். அதுக்குப் பதிலா, இதைப் புதிய வழக்காக எடுத்து விசாரிக்கத் தொடங்கி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முன் தீர்ப்புகளுக்கு மாறாகத் தீர்ப்பு வழங்கறார்.
இதில் இன்னொரு விஷயம், இவர்கள் குறிப்பிடுகிற தீபத்தூண் என்பது தீபத்தூண் கிடையாது. அது நில அளவைக் கல்னு ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சொல்றார். ஆய்வாளர்களும் அது பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்னு சொல்றாங்க.
அதுமட்டுமல்ல, நூற்றாண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயில்லதான் தீபம் ஏத்தியிருக்காங்க. பிரிட்டிஷ் ஆட்சியில்கூட தர்காவுக்கு அருகிலே ஏத்தப்பட்டதாக எங்கேயும் சொல்லப்படவில்லை. 1981ம் ஆண்டு போஸ் என்கிற தொல்லியல் துறை பேராசிரியர் வெளியிட்ட புத்தகத்திலும் உச்சிப்பிள்ளையார் கோயில்லதான்னு இருக்கு.
கோயில் அர்ச்சகர்கள், பட்டர்கள்னு எல்லோரும் உச்சிப்பிள்ளையார் கோயில்லதான் பாரம்பரியமாக கார்த்திகை தீபம் ஏத்தப்படுதுனு சொல்றாங்க. தீபம் எங்கே ஏத்தப்படணும் என்பது தொடர்பான ஆகம விதிகளும் இருக்குது. அதாவது கோயிலின் கருவறை எங்கே இருக்குதோ அதற்கு நேராக மேலே மலை உச்சிலதான் ஏத்தணுமே தவிர தங்கள் விருப்பம்போல் ஏத்தக் கூடாது.
எல்லா கோயில்களிலும் இதுவே பின்பற்றப்படுது. ஆனா, இப்போ, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுல ‘ஆல்சோ லிட் இன் தீபம்’னு - அதாவது ரெண்டு இடத்துல ஏத்துங்கனு சொல்றார். ரெண்டு இடத்துல தீபம் ஏத்தலாமா என்கிற கேள்வி எழுது.
தமிழ்நாடு முழுவதுமே எல்லா கோயில்கள்லயும் கருவறைக்கு மேலதான் தீபம் ஏத்துவாங்களே தவிர சம்பந்தமில்லாமல் வலது பக்கம் ரொம்ப தூரம் தள்ளி ஏத்த மாட்டாங்க. அப்புறம், கார்த்திகை தீபம் அன்றைக்குதான் ஏத்தணுமே தவிர வேற ஒரு நாள்ல தீபம் ஏத்தக் கூடாது.இப்ப பாஜகவினர், தர்காவுல நாங்க ஏத்தணும்னு சொல்லல.
அதுக்கு பக்கத்துல 50 மீட்டர் தள்ளிதான் தீபத்தூண்ல ஏத்தணும்னு சொல்றோம்னு சொல்றாங்க. தீபத்தூண்னு சொல்லக்கூடிய அந்த நில அளவைக்கல்லுக்கு தர்கா வழியில்தான் செல்லமுடியும். அங்க பத்து பேர் போனா என்னனு கேட்குறாங்க. அப்படி போறவங்க எல்லாம் எந்த தவறும் செய்ய மாட்டாங்க, எந்த பிரச்சனையும் ஆகாது என்பதற்கு யார் பொறுப்பெடுத்துக் கொள்வதுனு அடுத்து பிரச்னை இருக்குது.
இது தனிப்பட்ட விவகாரம் கிடையாது. கடந்த ஆண்டே கந்தூரி கொடுப்பதற்காக சென்றவர்கள் தடுக்கப்பட்டாங்க. இதை இரு மதங்களுக்கு இடையிலான பிரச்னை மாதிரி பார்க்கிறாங்க.
ஆனால் உண்மையில் இது முன்னோர் வழிபாட்டையும், தமிழர்கள் தெய்வங்களையும் ஒழித்துக் கட்டும் செயலோனு எண்ண வைக்குது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துக்கிட்டால் பக்தி இலக்கியங்கள்லகூட சாதி மறுப்பும், தீண்டாமை தப்புனும் பேசப்பட்டிருக்கு. இங்க 63 நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்களைப் போல எங்கயுமே நீங்க வட இந்தியால பார்க்க முடியாது. குலத்தால் தாழ்ந்தவர்னு சொல்லப்படுற 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனுக்குக்கூட நம் கோயில்கள்ல இடம் இருக்கு. தமிழ்நாடு ஜனநாயகமான வழிபாட்டுத் தலம் கொண்ட ஒரு மாநிலம். அதை நாம் மறந்திடக்கூடாது...’’ என்கிறார் வழக்கறிஞர் மருது.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: வெற்றி
|