ரூ.100க்கு டிக்கெட் இருந்தாதான் ஹவுஸ்ஃபுல்லா படங்கள் ஓடும்!



எல்லா ‘wood’டிலும் இதைப்பற்றிதான் பேசுகிறார்கள். எந்த மொழிப் படமும் பெரிதாக ஓடவில்லை. மக்கள் திரையரங்குக்கு வருவதில்லை. காரணம் டிக்கெட் விலை. 
கூடவே பார்க்கிங், ஸ்நாக்ஸ் அயிட்டங்கள்.எனவே ‘மலிவான சினிமா சாத்தியமா’ என்ற கேள்வி முன்னிலைக்கு வந்திருக்கிறது.  ‘‘மாலில் ஒரு சினிமா பார்க்க வேண்டுமென்றால் காரில் அல்லது ஆட்டோவில் நான்கு பேர் பயணம், டிக்கெட், பார்க்கிங், ஸ்நாக்ஸ்... இவையெல்லாம் சேர்த்து ரூ.5000 முதல் ரூ.7000 வரை செலவாகும் நிலை இருக்கு. 
இதில் டின்னர், லன்ச் என திட்டமிட்டால் இன்னும் எகிறும். இதுதான் இன்னைக்கு குடும்பமா சினிமா போக நினைத்தால் ஆகும் செலவு. இதில் மாதத்துக்கு ஓரிரு படத்தை விடுங்க... மூணு மாதங்களுக்கு ஒரு படம் கூட யோசிக்க வேண்டிய நிலை இருக்கு...’’ என்று ஆரம்பித்தார் சந்திரசேகரன். 

 தொழிலதிபரான இவர், இதற்கு ஓடிடியிலேயே பார்க்கலாம் என முடிவெடுத்து விடுகிறோம் என்கிறார். ‘‘ரூ.100 - ரூ.150 ப்ளஸ் ஸ்நாக்ஸ் விலை... இப்படியிருந்தா குடும்பமா தியேட்டர் போய் சினிமா பார்க்கும் கூட்டம் அதிகரிக்கும். மக்களுக்கு பொழுதுபோக்கு சினிமாதான். மக்களை நம்பிதான் சினிமா தொழிலும் இருக்கு. அப்ப ஒருவருக்கு ஒருவர் சப்போர்ட் செய்தாதானே சினிமா சிஸ்டம் சீராகும்...’’ என்று கேட்கிறார். 

தலைமை டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் இருக்கும் காயத்ரி ஜெசி, தன் தரப்பை முன்வைக்கிறார். ‘‘AI காலத்திலும் கூட மாறாத ஓர் இடம் சினிமா தியேட்டர்கள்தான். இன்னமும் அந்த உட்காரும் சேர்கள் கூட மாறவே இல்லை. பலருக்கும் சினிமா பார்ப்பது தியானத்துக்கு சமம். அந்தளவுக்கு சினிமா நம்ம கூட கலந்திருக்கு. அப்படிப்பட்ட சினிமா இன்னைக்கு ரொம்ப தள்ளிப் போயிடுச்சு. 

ரூ.100க்கு டிக்கெட் இருந்தா நிச்சயமா நானே மாசத்துக்கு மூணு படமாவது பார்ப்பேன். ஆனா, இப்போதைய ரேட்ல மாசத்துல ஒரு படம் பார்க்கக் கூட யோசிக்க வேண்டியிருக்கு. அதுவும் மெட்ரோ நகரங்கள்ல ஸ்நாக்ஸ் + பார்க்கிங் + டிக்கெட் சேர்த்து ஒருத்தருக்கே ரூ.1000 ஆகிடும். சாதாரண ஒரு பாப்கார்ன் + ஒரு சாஃப்ட் டிரிங் வாங்கினாலே ரூ.500 ஆகுது. எப்படி தியேட்டருக்கு போக முடியும்?’’ என்று கேட்கிறார் காயத்ரி ஜெசி.  

‘‘கோயில்களை விட தியேட்டர்கள்தான் எல்லோரையும் சமமா மதிக்கும் ஒரே இடம்...’’ என்று ஆரம்பித்தார் அக்குபஞ்சர் நிபுணரும் ஃபிட்னஸ் பயிற்சியாளருமான ஹேமலதா. 
‘‘குழந்தைங்க மனசுல சமத்துவம் வர கண்டிப்பா தியேட்டர்ஸ் அவசியம். முன்னாடி திரையரங்குக்கு குடும்பம் குடும்பமா மக்கள் வர காரணம், வீட்டிலிருந்தே ஸ்நாக்ஸ் கொண்டு வரலாம் என்பதுதான். அப்புறம் தியேட்டர் போனதும் 3 அல்லது 4 பிரிவுகள்ல டிக்கெட் விலை இருக்கும். நம்ம வசதிக்கு ஏற்ற பிரிவுல டிக்கெட் வாங்கலாம். 

இப்ப அப்படியா இருக்கு? குறைந்தபட்சம் ஸ்நாக்ஸ் குறைஞ்ச விலைல கிடைச்சா கூட பரவால. இதெல்லாம் செய்யாம மக்கள் வர்றதில்லைனு சொல்றது எந்த வகைல நியாயம்?’’ என்று கேட்கிறார் ஹேமலதா.‘‘எப்ப பாப்கார்ன் தியேட்டருக்குள்ள வந்துச்சோ அப்பவே மக்களை விட்டு சினிமா விலகிடுச்சு...’’ என்கிறார் வாசுதேவன். சுயதொழில் செய்து வரும் இவர், மணப்பாறையைச் சேர்ந்தவர். 

‘‘ரொம்ப எல்லாம் வேண்டாம். வெறும் 15 வருஷங்களுக்கு முன்னாடி ரூ.20ல நான் படம் பார்த்தேன். இது ஐந்து மடங்கா இப்ப ஆனா கூட பரவால. ஒரேயடியா 20 மடங்கானா எப்படி தியேட்டருக்கு வர முடியும்?

டிக்கெட் விலை ரூ.100 என்பதே அதிகம்தான். இதுக்கு கீழ இன்னும் இரண்டு பிரிவுகள்ல டிக்கெட் தரலாம்...’’ என்கிறார் வாசுதேவன்.இதை ஆமோதிக்கிறார் ஜும்பா மற்றும் ஃபிட்னஸ் பயிற்சியாளரான பிரியா. ‘‘பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகிற நடுத்தர மக்களால நிச்சயம் மாசத்துக்கு இரண்டு படங்கள் கூட இப்ப பார்க்க முடியாது. ரூ.170க்கு ஒரு டிக்கெட்... ஸ்நாக்ஸ் சாப்பிடாமயே இருந்தாலும் இந்த ஒரு டிக்கெட் விலைல எத்தனை கிலோ அரிசி வாங்கலாம்னு பாருங்க.  

முன்னாடி குடும்பமா ஊருக்குப் போனா அல்லது சொந்தக்காரங்க வந்தா படத்துக்குப் போகலாம்னு நினைப்போம். இப்ப அப்படி நினைக்கவே கூடாதுனு நினைக்கறோம்...’’ என்கிறார் பிரியா.

பொது மக்களின் கருத்து இப்படியாக இருக்க, திரையுலகைச் சேர்ந்தவர்களும் இதை ஆமோதிப்பதுதான் ஹைலைட்.‘‘இதை நான் பல வருடங்களா பல பேட்டிகள்ல சொல்லிட்டு இருக்கேன்...’’ என்கிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான சி.வி.குமார். ‘‘தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் மட்டும் குறைந்த டிக்கெட்னு முடிவெடுக்க முடியாது. ஒன்றிய அரசும் சில அனுமதிகளை சுலபமாக்கணும்.

ஒரு மல்டி குஷன் ரெஸ்டாரன்ட் திறக்க கூட ஒன்று அல்லது இரண்டு லைசன்ஸ் பெற்றா போதும். ஆனா, ஒரு தியேட்டர் ஆரம்பிக்க 22 முதல் 27 அனுமதிகள் வாங்கணும். 
ஜப்பான், சீனாவுல எல்லாம் 40,000 திரையரங்குகள் இருக்கு. அத்தனையும் மினி பிளக்ஸ். மினி பிளக்ஸ் கலாசாரம் அதிகரிச்சா மட்டும்தான் மக்கள் தியேட்டருக்கு வருவாங்க. மலிவு மட்டுமில்ல... சுலபமான அணுகலும் அவசியம். 

ஒரு தியேட்டருக்கு நான் போகணும்னா குறைஞ்சது 5 கிமீ பயணிக்கணும். இதுவே ஃபேமிலியை சோர்வுக்கு தள்ளிடும். போக்குவரத்தை நினைச்சு சினிமா ஆசையை ஸ்கிப் 
செய்துடுவாங்க. 

பிராக்டிக்கலா பார்த்தா மல்டி பிளக்ஸ்ல ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படம் பார்க்கும் பணத்துல வார இறுதில அந்தக் குடும்பம் மினி டூரே போயிட்டு வரலாம் என்பதுதான் நிஜம். அரசு ஆதரவு தெரிவிச்சா நூறு ரூபாய்க்கு டிக்கெட் சாத்தியம். அதேபோல மினி பிளக்ஸ் அதிகரிக்கணும். மலிவான விலையுடன், ஏரியாவுக்கு ஒரு திரையரங்கம் வரணும்...’’ என்கிறார் சி.வி.குமார்.  

‘‘நிச்சயம் ரூ.100க்கு டிக்கெட் தர முடியும்...’’ என்கிறார் மதுரை திரையரங்க உரிமையாளரான ராஜா செல்லதுரை. ‘‘எங்க தியேட்டர்ல அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி ரூ.50க்கு நான் டிக்கெட் கொடுத்திருக்கேன். இப்பவும் என் தியேட்டர்ல ரூ.20க்கு ஸ்நாக்ஸ் உண்டு. சில நேரம் கையைக் கடிக்கும். 

ஆனா, பல நேரம் அரங்கம் நிறைந்த சூழல் நிலவுதே... மின்சார பில், வரி எல்லாம் இதை வைச்சே ஈடு கட்ட முடியுது. ஏரியாவுக்கு நான்கு திரையரங்குகளாவது இப்படி இருந்தா படங்கள் ஓடும். எனக்குத் தெரிஞ்சு பல கிராமப்புற தியேட்டர்ஸ் இப்பவும் லாபத்துலதான் இயங்குது. இப்போதைய விமர்சனம், திட்டு எல்லாமே டிக்கெட் + ஸ்நாக்ஸ் + பார்க்கிங் விலையாலதான்...’’ என்கிறார் ராஜா செல்லதுரை. 

ஷாலினி நியூட்டன்