சினிமா எப்போது என்னை கைவிடும் என்று தெரியவில்லை...நான் எப்போது சினிமாவை கைவிடுவேன் என்றும் தெரியவில்லை...



‘விருமாண்டி’யில் மீசையை முறுக்கும் வில்லன் கதாபாத்திரம், ‘குசேலன்’ படத்தில் கண்களில் தேக்கி வைக்கும் தோழமை, ‘சார்பட்டா பரம்பரை’யில்  ரங்கன் வாத்தியார், ‘பைசன்’ படத்தில் மகனை சாதனை படைக்க வைக்கும் பாசக்கார அப்பா என எந்தக் கதாபாத்திரம் செய்தாலும் அதற்கு நேர்மை செய்து தனக்கு மட்டுமல்லாமல், படத்துக்கும் சேர்த்து பலம் சேர்ப்பவர் பசுபதி.
‘கூத்துப்பட்டறை’யில்  பட்டை தீட்டப்பட்ட இந்த வைரம் பணத்துக்காக படம் செய்யாமல் கலைக்காக படம் செய்பவர் என்பது கோலிவுட் கணிப்பு.‘பைசன்’ வெற்றியைத் தொடர்ந்து இவர் நடித்துள்ள ‘குற்றம் புரிந்தவன்’ வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு. கொட்டும் மழைக்கு நடுவே பசுபதியிடம் பேசினோம்.

வெப் சீரிஸ் அனுபவம் எப்படி?

ஏற்கனவே சில வெப் சீரிஸ் செய்துள்ளேன். இயக்குநர்‌ செல்வமணி சொன்ன கதை பிடிச்சிருந்துச்சு. கதையை தெரிஞ்சுக்கணும்னா நீங்க வெப் சீரிஸ் பாருங்க.
இதுல ஹைலைட், குழந்தைகளின் உலகத்தில் உள்ள யதார்த்தத்தை மிக அழகாக டைரக்டர் சொல்லியிருப்பதுதான். ஏனெனில், பெற்றோர் தங்கள் லட்சியம், பிரச்னைகள் எல்லாவற்றையும் குழந்தைகள் மீது வைக்கிறார்கள். ஆனால், குழந்தைகள் மனநிலை, அவர்களுடைய புரிதல் வேறு.

என் அனுபவத்தில் சொல்வதாக இருந்தால், வெளியூர்களுக்கு செல்லும்போது நான்தான் கார் ஓட்டுவேன். அந்த மாதிரி சமயங்களில் என் குழந்தையிடம்,  ‘உங்க அப்பா என்ன செய்கிறார்’ என்று கேட்டால், ‘கார் டிரைவர்’ என்று சொல்வதுண்டு. மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது நான்தான் சமைப்பேன். அப்பொழுது என் குழந்தையிடம் அதே கேள்வியை கேட்கும்போது, ‘சமையல்காரர்’ என்று சொல்வது உண்டு.
குழந்தையைப் பொறுத்த வரை அந்தப் புரிதல் சரி. குழந்தைக்கு ஒரு கட்டத்தில் அப்பாவுடைய தொழில் என்ன என்று தெரிய வரும். அதுவரை அதற்கான ஸ்பேஸ் பெற்றோர் கொடுக்க வேண்டும்.வெப் சீரிஸில் ‘த கில்டி ஒன்’ என்று விளம்பரம் செய்து இருந்தீர்கள். குற்ற உணர்வை வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்லவே..?

படப்பிடிப்பு நடக்கும்போது நடக்கும் மேஜிக் அது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணர்வுகள் உண்டு. அந்த வகையில் சோகத்தை 45 டிகிரியில்தான் வெளிப்படுத்த வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை.

காட்சியின் தன்மையே எந்த மீட்டரில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துவிடும். அத்துடன் பல வருடங்களாக இத்துறையில் இருப்பதால் அதை அப்சர்வ் பண்ண முடிகிறது.
உடல், மனம் பற்றிய புரிதல் என எல்லாம் ஒரே அலை வரிசையில் இருக்கும்போது காட்சிக்குத் தேவையான உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். அது ‘திங்க் பிராசஸ்’.
பொதுவாக உங்கள் படத்தேர்வு எப்படி இருக்கும்?

எந்தப் படமாக இருந்தாலும் அதில் எனக்கு என்ன ஸ்பேஸ் இருக்கிறது என்று பார்ப்பேன். கேரக்டர், படத்துக்கு எப்படி யூஸ் ஆகப்போகிறது என்பது முக்கியம்.அதாவது கதைக்கும், கேரக்டருக்கும் ஒத்துப்போகிறதா, அதற்கான ஸ்பேஸ் தரப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பேன். அப்படி நான் நினைக்கும் விஷயத்துக்கு வந்தால் அந்தப் படத்தை செய்கிறேன்.
அடுத்து, இயல்பாகவே  கதை, கேரக்டரில் உள்ள வலுவான அம்சங்கள், கேரக்டரை சரியாக செய்ய வேண்டும் என்ற என்னுடைய எண்ணம். இவையிரண்டும் சேரும்போது அது பேசப்
படுகிறது.

மற்றபடி, படம் பண்ண வேண்டும் என்பதற்காக நடிக்க மாட்டேன். நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் படம் செய்கிறேன்.
நீங்கள் அனுபவ நடிகர். தற்போது நிறைய இளம் இயக்குநர்களுடன் படங்கள் செய்கிறீர்கள். அவர்களுடன் பணிபுரியும் அனுபவம் எப்படி?

சிறப்பான அனுபவம்‌. எல்லோருமே நேர்த்தியான படைப்பு செய்கிறவர்கள். நடிகர், இயக்குநர் ஆகிய இருவருமே கலந்தாலோசிக்கும்போதுதான் படம் கவனிக்கப்படும். இல்லையெனில் அது படமாக இருக்காது.ஏனெனில், ஒரு படம் என்று வரும்போது பெர்ஃபாமன்ஸ் மட்டுமே மேலோங்கி இருக்கக் கூடாது.‌ ஒட்டுமொத்த குழுவினரின் பங்களிப்பும் இருந்தால்தான் சிறந்த படைப்பைத் தர முடியும். இல்லையெனில் தனி நபர் ஒருவரின் படைப்பாகவே அது இருக்கும்.

‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடரில் விதார்த், ஜெயக்குமார், லட்சுமி பிரியா என எல்லோரும் தேர்ந்த நடிகர்கள். எல்லோருமே தியேட்டர் பேக்ரவுண்ட் உள்ளவர்கள். தயாரிப்பாளர்கள் ஹாப்பி யூனிகான் - ஆக்புல்ஸ் என அனைவரும் கதையைப் பற்றிய புரிதல் கொண்டவர்கள். இப்படி மொத்தக் குழுவும் இருந்தால் படைப்பு பேசப்படும்.அழுத்தமான கதாபாத்திரங்களில்தான் உங்களை அதிகம் பார்க்க முடிகிறது. ஜனரஞ்சகமான கதாபாத்திரங்கள் வருகிறதா, வாழ்வியல் சார்ந்த கதைகளில் உண்மையாக ஈர்க்கப்படுகிறீர்களா?

தேர்வு செய்யும் இடத்தில் நான் இல்லை. ஆனால், என்னைத் தேடி பல கதைகள் வருகின்றன. எனக்கு வரும் கதைகளில் தேர்வு செய்து பண்ணுகிறேன்.எனக்குப் பிடிச்ச விஷயங்களை பண்ணலாம் என்றால் அதற்கு இங்கு வாய்ப்பில்லை.காமெடி கதைகளும் என்னிடம் வந்துள்ளன. அது எனக்கு பொருத்தமாக இருக்குமா என்று பார்ப்பேன். அந்த வகையில் எனக்கு வந்த படங்களில் எனக்கு பிடித்த படங்களை பண்ணுகிறேன்.

மற்றபடி, இந்த கேரக்டர் பண்ண மாட்டேன் என்று எந்த நடிகரும் சொல்லமாட்டார்கள். நானும் சொல்வதில்லை. கதைக்குள் என்னை ஃபிட் பண்ண முடியுமா என்றுதான் பார்க்கிறேன்.
நான் செய்யாத பல கேரக்டர்கள் உண்டு. ஆனால், அதை செய்ய வேண்டும் என்றால் இந்த யுகம் போதாது. ஒரு நடிகனாக சப்-கான்ஷியஸ் நிலையில் பல விஷயங்களை சேகரித்து வைத்துள்ளேன். அதுதான் எனது கேரக்டரில் வெளிப்படுகிறது.

‘பைசன்’ படத்தில் துருவ் அப்பாவாக என்னுடைய கதாபாத்திரம் பேசப்படுகிறது என்றால் அது நான் கவனித்த விஷயங்களில் ஒரு பகுதி. அதுபோல் இன்னும் நான் செய்யாத கதாபாத்திரங்கள் உண்டு.பொதுவெளியில் உங்களை அதிகம் பார்க்க முடிவதில்லையே?

சென்னை, புறநகரில் வசிக்கிறேன். விவசாயம், புத்தக வாசிப்பு, உடற்பயிற்சி என மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு வருடம் முழுவதும் படம் இல்லாமலும் இருந்திருக்கிறேன்.
தற்போதைய இளைய தலைமுறை உயர்கல்வி படித்திருந்தாலும் தங்களுக்குப் பிடித்த விஷயத்தை செய்கிறார்கள். அதை நான் 20 வருஷங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டேன். 

நாடகங்களுக்கு ஒத்திகை முக்கியம். அந்தப் பின்னணியில் இருந்து வந்துள்ள நீங்கள் இப்போதும் ஒத்திகை செய்கிறீர்களா?

கதை கேட்கும் போது அந்த கேரக்டரின் தன்மை, அட்மாஸ் ஃபியர் என ஒவ்வொரு விஷயத்தையும் யோசிப்பேன். கேரக்டர் எவ்வளவு ரியாக்‌ஷனை வெளிப்படுத்த முடியும் என்று மனதளவில் யோசிப்பேன்.பிறகு முன்பே சொன்னபடி படப்பிடிப்பில் இயக்குநருடன் சேர்ந்து ஆலோசனை செய்வேன். 

என்னுடைய வெர்ஷன் என்று சொல்லி அதைச் செய்வேன். இல்லை என்றால் இயக்குநரின் வெர்ஷனை செய்து காண்பிப்பேன். ஃபைனலாக ஒரு ரிசல்ட் கிடைக்கும். அதுதான் கேரக்டரின் தன்மையாக இருக்கும்.இதுவரை நான் செய்துள்ள படங்களில் 90 சதவீதம் இயக்குநரின் நடிகராகத்தான் என்னை வெளிப்படுத்தி உள்ளேன்.

எந்த ஒரு விஷயத்துக்காக உங்களை கட்டுப்பாடாக வைத்துக் கொள்கிறீர்கள்?

மனதை ஒருமுகப்படுத்த பயிற்சி எடுக்கிறேன். அதற்கு எனக்கு உதவுவது புத்தகங்கள். மன அழுத்தம் இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் புத்தகம் எனக்கு உதவுகிறது.
அரசியல், வரலாறு என பல புத்தகங்களை படிக்கிறேன். படிக்கும்போது என்னை சமநிலை செய்துகொள்ள முடிகிறது. அழுதாலும், சிரித்தாலும் புத்தகங்கள் என் மனநிலையை மாற்றுகிறது. அந்த வகையில் வாசிப்பு அனுபவம்தான் என்னை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை என்று சொல்வார்கள். ‘பசு பதி’ என்ற பிராண்டை உருவாக்க என்ன தியாகம் செய்தீர்கள்?

தியாகம் என எதைக் குறித்து சொல்கிறோம் என்பதை பொறுத்து அது மனிதர்களுக்கு மனிதர் மாறும். தியாகம் என்பது பல விதங்களில் வித்தியாசப்படும். உடலை கட்டுக்கோப்பாக வைக்க காலை உணவை சாப்பிடுவதில்லை. அது தியாகமா என்று என்னால் சொல்ல முடியாது.ஒரு படத்துக்காக நிறைய சாப்பிட்டேன். உடல் பருமனானது. அதை குறைக்க நிறைய போராடினேன். இது எல்லாமே வாழ்க்கையின் ஒரு பகுதி.

அடுத்து, பசுபதி ஒரு பிராண்டா என்ற கேள்வி எனக்கே இருக்கிறது. பிராண்ட் என்ற ஃபார்மேட்டுக்குள் என் வாழ்க்கையை என்றைக்குமே  செட் பண்ண மாட்டேன். கிடைத்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறேன்.

தொழில் ரீதியாக பயணிக்கும்போது சில விஷயங்கள் தேவைப்படும். சில விஷயங்களை தூக்கி எறிய வேண்டும். அதை மனதுக்குள் கொண்டு போகக் கூடாது.நீங்கள் இந்தத் துறைக்கு முழுமையாகச் சொந்தமானவரா..? எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?

அது தெரிந்தால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுவேன் அல்லது வேறு நபராக மாறிவிடுவேன். இப்பொழுது நடிகனாக ஓடிக் கொண்டே இருக்கிறேன். எனக்குத் தெரிந்து இக்கணம் வரை சினிமா என்னைக் கைவிடவில்லை, நானும் சினிமாவை விடவில்லை.சினிமா எப்போது என்னை கைவிடும் என்று தெரியவில்லை. நான் எப்போது சினிமாவை கைவிடுவேன் என்றும் எனக்குத் தெரியவில்லை.

உங்கள் வாழ்க்கையில் புதிதாக ஏதாவது சேர்க்க வேண்டும் என்றால், என்ன சேர்ப்பீர்கள்?

கற்றல் மீது எனக்கு எப்போதும் ஆசை உண்டு. மியூசிக், ஸ்கூபா டைவிங்,  மலையேற்றம் என நிறைய கற்றுக்கொள்ள ஆசை.தற்போது தினமும் காலை 5 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பதுதான் முக்கிய அஜெண்டாவாக உள்ளது.

எஸ்.ராஜா