மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி?



பெண்கள், குறிப்பாக பொண்டாட்டி அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு ஒரு பொது குணம் உண்டு. அதாகப்பட்டது நன்றாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். திடீரென ஏன், எதற்கு என எதுவுமே புரியாத வண்ணம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வார்கள். புருஷன் கேட்டகிரி ஆட்களின் நிலை அச்சமயத்தில் அந்தோ பரிதாபம். காரணம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பூகம்பம் கன்ஃபார்ம். 

அந்த மாதிரி நேரத்தில் கணவனானவன் மௌனமாய் இருந்தால், அவனின் மௌனத்தைக் கலைத்து, ‘இப்போ என்னான்னு நீ கேட்கணும்... நான் பொங்கணும்’ என்பதைக் குறியீடாகக் கொண்ட சில சம்பவங்கள் நடந்தேறும். அவற்றில் முக்கியமானது பாத்திரம் துலக்கும் போது துலக்கிய பாத்திரங்களைப் பாத்திரக் கூடையில் வைப்பதற்குப் பதிலாக பறந்து போய் விழச் செய்தல். 

அப்போதான பாத்திர இரைச்சல் கொடுக்கும் இரிட்டேட்டிங்கில், அவர்கள் எதிர் பார்க்கும் ‘‘இப்போ என்னடி உன் பிரச்னை’’ அனிச்சையாய் கணவன் கேட்டகிரியிடம் எட்டிப்பார்க்கும். பிறகென்ன, ‘‘நான் என் வேலையப் பாத்துக்கிட்டு இருக்கேன், மரியாதையா போயிடு...’’ என ஓர் உரையாடல் தொடங்கும். 

அந்த இடத்தில் ‘மரியாதையா போயிடு’வை மதித்து கணவனானவன் அமைதி காத்தல் சிறப்பு. அதாவது அமைதி காப்பதால் உரையாடல் அத்துடன் முடிந்துவிடுமா என்றால் இல்லை. 

கல்யாணமான காலத்தில் இருந்து நாள், மாதம், நொடி இம்மி பிசகாது நேரக் குறிப்பு வாரியாக கணவனானவனின் வரலாற்றினை அலசி காய வைத்த பிறகே ஆத்தா மலையேறும். பதிலுக்கு கணவனானவனுக்கு ஏதேனும் வாயிலிருந்து வந்தது எனில் பொண்டாட்டியின் ஞாபகக் கிடங்கென்னும் டேட்டா பேஸில் புதிய என்ட்ரி ஒன்றை போட்டு வைக்கிறீர்கள் என்று பொருள். 

பின் அந்த சண்டைக்குப் பிறகான நாட்களில் அந்தப் புதிய டேட்டாவை அடிக்கடி கால் செய்யும் கொயரி ஒன்று லூப்பில் எக்ஸிக்யூட் ஆகிக்கொண்டே இருக்கும். ஆக அந்த நேரத்தில் நவ துவாரங்களையும் மூடிக் கொண்டிருப்பது உத்தமம். 

சரி, இந்தச் சூழலை எப்படி கையாளலாம்?

வெளியில் சென்று விடுவது ஒரு சிறந்த வழி. ஆனாலும் இந்தப் பாத்திரப் பறத்தலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடையாதா? 

இருக்கு. அதாவது அவர்கள் பாத்திரங்களை நங் நங்கென்ற ஓசையுடன் வீசும் சமயத்தில், கணவனானவர்கள் தங்கள் பங்கிற்கு தங்களின் வீட்டம்மணி ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் கலர்ஃபுல்லான பிளாஸ்டிக் ஐட்டங்களில் இரண்டினை எடுத்து பறக்க விடலாம். பிறகென்ன, அமைதி அமைதி அமைதியோ அமைதி.பி.கு: விலை குறைந்த சிறிய ரகங்களை பறக்க விடவும். எப்படியாகினும் நம்ம பர்சுக்குத்தான் பங்கம்.

அ.பாரி