3 வயது சதுரங்க ஜாம்பவான்!
மீண்டும் இந்தியாவிலிருந்து இன்னொரு சதுரங்க ஜாம்பவான் உருவாகியுள்ளார். அவரது பெயர், சர்வாக்யா சிங் குஸ்வாஹா. சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் வரலாற்றில், அதனுடைய ரேட்டிங்கை பெற்ற இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சர்வாக்யா. ஆம்; சர்வாக்யாவின் வயது 3தான். அவர் பிறந்து 3 வருடங்கள், 7 மாதங்கள், 20 நாட்கள் ஆகின்றன. இதற்கு முன்பு இந்தச் சாதனையை கொல்கத்தாவைச் சேர்ந்த அனிஸ் சர்க்கார் வைத்திருந்தார். அனிஸ் பிறந்து 3 வருடங்கள், 8 மாதங்கள், 19 நாட்களில் இந்தச் சாதனையைச் செய்திருந்தார்.
அனிஸின் சாதனையை இன்னொரு இந்தியக் குழந்தையே முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், சர்வாக்யா. சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் ரேட்டிங்கை பெற வேண்டுமானால், இந்த ரேட்டிங்கைப் பெற்ற ஒரு வீரரையாவது தோற்கடிக்க வேண்டும்.
சர்வாக்யாவோ ரேட்டிங் பெற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்களைத் தோற்கடித்து, சாதனையைப் படைத்திருக்கிறார். சர்வாக்யாவின் பெற்றோரான சித்தார்த்தும், ஸ்ருதி சிங்கும் தங்களின் மகன் விரைவிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆவான் என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.
த.சக்திவேல்
|