வாராரு வாராரு கருப்பரு வாராரு!



12. காற்றுக்கும் கருப்பண்ணசாமிக்கும் இருக்கும் தொடர்பு என்ன?

இந்த வினாவுக்கான விடை முக்கியம். இதை அறிந்துகொள்ளாவிட்டால் கருப்பர் குறித்து எதிர்மறையாகவே எண்ணுவோம்.ஏனெனில் இன்றும் யாரேனும் பிரமை பிடித்ததுபோல் நின்றால், காணப்பட்டால், ‘காத்து கருப்பு அடிச்சிருக்கும்...’ என்கிறார்கள் மக்கள்.
இதில் ‘காத்து’ என்பது சர்வநிச்சயமாக நம் கருப்பரை... கருப்பண்ணசாமியைக் குறிக்கவில்லை.மாறாக ஆவிகள், அமானுஷ்ய சக்திகளைக் குறிப்பிடுகின்றன. மக்கள் இந்தப் பொருளிலேயே பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

எனில் தீய சக்திகளையும் ‘கருப்பு’ என்று அழைத்து, காக்கும் கடவுளையும் ‘கருப்பு’ என்று அழைப்பது சரியா?

சரியில்லை என மக்களே முடிவு செய்திருப்பதால்தான் ‘கருப்பனை வேண்டிக்கிட்டே போ... காத்து கருப்பு அடிக்காது’ என்கிறார்கள்.ஒரு மனிதனின் சித்தத்தை கலங்க வைக்கும் செயலை நம் கருப்பண்ணசாமி செய்ய மாட்டார். 

நியாயவான். தர்மவான். அதர்மத்தை அழிக்கும் தெய்வம். தர்மத்தை காக்கும் இறைவன். பெண்களின் காவலன். கஷ்டங்களைத் தீர்க்கும் கடவுள். வேண்டிய வரங்களை அள்ளித் தரும் சக்தி. பக்திக்கு கட்டுப்படும் மகாசக்தி.இதுதான் கருப்பர். 

இவர்தான் கருப்பண்ணசாமி.என்றாலும், ‘அங்க போகாத... காத்து கருப்பு அடிச்சுடும்’ என ஏன் குழந்தைகளிடம் சொல்கிறோம்? ‘கருப்பனை வேண்டிக்கிட்டே போ... காத்துக் கருப்பு அடிக்காது...’ என ஏன் நம்பிக்கையும் அளிக்கிறோம்?காற்றுக்கும் கண்கண்ட தெய்வமான கருப்பண்ணசாமிக்கும் என்ன தொடர்பு? 
அந்தக் கிராமத்தின் பெயர், நெல்லூர். 

ஏரிக்கரையில் இருக்கிறது. அம்மக்கள் மத்தியில் காலம் காலமாக ஒரு கதை கடத்தப்பட்டு வருகிறது. அதுதான் ‘காற்றைப் பிடித்த மனிதன்’. 

வேறொன்றுமில்லை. பழைய காலத்தில் நெல்லூரில் காற்று விசித்திரமாக வீசி... அல்ல அல்ல, ‘கத்திக்’ கொண்டிருந்தது. ஆம். வருடம் முழுக்க அந்த ஊரில் புயல் போல காற்று  ஊதியதால் மக்கள் அச்சத்தின் வசப்பட்டார்கள். ‘தேவதை கோச்சுக்கிட்டதா?’ 

அதே ஊரில் ஓர் இளைஞன் வாழ்ந்து வந்தான். அமைதியானவன். அதேநேரம் நுணுக்கமானவன். எந்த அளவுக்கு என்றால், காற்றின் ஓசையைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு. 

அவ்வப்போது, “இன்று கோயில்குளத்திலிருந்து மண்வாசனை வருது... ஏதோ சரியில்ல...’’, ‘‘இன்று ஏரி மேலயே காத்து நிக்குது... இது சரியில்ல...’’ என்பான்.

அமைதியான அவன், அவ்வப்போது இப்படிப் பேசுவது முதலில் மக்களைக் குழப்பியது. பைத்தியக்காரன் என்று நினைத்தார்கள். பிறகு ‘ஏதோ சொல்ல வர்றான்’ என ஏற்றார்கள்.
முக்கியமாக அவன் புன்னகை முகத்துடன் காணப்பட்டபோதெல்லாம் மழை பொழியவே, மக்கள் குதூகலித்தார்கள். ‘‘இவன்கிட்ட ஏதோ இருக்குப்பா...’’
ஒருநாள் காற்று, ‘கத்துவதை’ நிறுத்தியது. ஊர் மக்கள் அந்த இளைஞனிடம் சென்றார்கள். 

‘‘ஊருக்கு வடக்கால இருக்கிற குன்றுல ஒரு மந்திரவாதி இருக்கான். அவன் காத்தைக் கட்டிட்டான்...’’ மக்கள் அதிர்ந்தார்கள். காற்று கட்டப்பட்டால் என்னவாகும்? குளங்கள் காய்ந்து விடும். ஏரி நீர் வற்றிவிடும். பயிர்கள் வாடும். மக்கள் கஷ்டப்படுவார்கள். கஷ்டங்கள் தீர என்ன  செய்வார்கள்? மந்திரவாதியைத் தேடிச் செல்வார்கள்.

மந்திரவாதி இதை எதிர்பார்த்துதான் காற்றைப் பிடித்து வைத்திருக்கிறான் என்பதை அந்த இளைஞன் உணர்ந்தான். ஆனால், யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் நம்ப மாட்டார்கள் அல்லது மந்திரவாதியிடம் சண்டைக்குச் சென்று தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வார்கள்.

இப்படி நடக்கக் கூடாது... மக்களைக் காக்க வேண்டும் என்ற முடிவுடன் அந்த இளைஞன், அந்தக் குன்றுக்குச் சென்றான்.குன்றின் மேல் ஏறும்போது காற்று அவனை உரசியது. ‘‘கவலைப்படாத... உன்னை மீட்கத்தான் வந்திருக்கேன்...’’‘‘அப்படியா?’’ என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

நிமிர்ந்து பார்த்தான் இளைஞன். மந்திரவாதி அங்கு நின்றிருந்தான்.‘‘காத்தைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?’’ “காற்று இல்லாத உலகம் இறந்த உலகம்...” அமைதியாக இளைஞன் பதில் சொன்னான்.ஒரே வரியில் இப்படியொரு பதிலை மந்திரவாதி எதிர்பார்க்கவில்லை. திகைத்து நின்றான். அக்கணத்தைப் பயன்படுத்தி, காற்றை விடுவித்தான் அந்த இளைஞன்.
மறுநொடி மந்திரவாதி அங்கேயே ரத்தம் கக்கி மரணமடைந்தான்.

காற்றை விடுவித்த இளைஞனை நெல்லூர் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். விடுபட்ட காற்று கருமை நிறத்தில் வீசியதால்... காற்றை விடுவித்த இளைஞனை மக்கள் ‘கருப்பன்’ என ஆசையாக அழைத்தார்கள்.

 “இவன் மனிதனே இல்ல பா... காத்துக்கே காவல்காரன்...’’ மக்கள் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.சர்வநிச்சயமாக இது கற்பனைக் கதைதான். ஆனால், இப்படி ‘காற்றைக் கடத்தி கட்டிவைத்த’ மந்திரவாதி குறித்தும், ‘காற்றை விடுவித்த கருப்பன் என்னும் இளைஞன்’ குறித்தும் எல்லா ஊரிலும் கதை உண்டு.

ஏன்?

சங்க காலத்துக்கு முன் இன்றைய தமிழகத்தின் பெரும் பகுதிகள் அடர்ந்த காடுகளாக இருந்தன. காட்டைத் திருத்திதான் கிராமங்களை, நகரங்களை, அரசை அன்று மக்கள் உருவாக்கினார்கள்.

இப்படி உருவாக்கிய காலத்தில் கதைகள் பல பிறந்தன. காட்டை ஆட்சி செய்யும் அரக்கன்... காட்டு விலங்குகளைக் கொடுமைப்படுத்துகிறான்... ஒரு குழந்தை பிறக்கிறது... வளர்ந்து இளைஞனாகி அந்த அரக்கனை வதம் செய்து உயிர்களைக் காப்பாற்றுகிறான். அரக்கனின் கட்டுப்பாட்டில் இருந்த காட்டை மக்களுக்கு வழங்குகிறான்...

இப்படி தமிழகத்தில் புழங்கப்பட்ட கதைகளில் பிறந்த குழந்தைகள் எல்லாமே கருப்பண்ணசாமிதான். அரக்கனை அழித்து, மக்களுக்கு காவலாக கருப்பர் நிற்கிறார் என உளமார நம்பினார்கள்.

நம்பினார் கெடுவதில்லை. அதனால்தான் கருப்பரின் துணை இன்றும் என்றும் மக்களுக்குக் கிடைக்கிறது. மானுடவியல் குறித்து அறிந்த அனைவருமே இப்படிப்பட்ட தொல் கதைகளை மனிதகுல வளர்ச்சியின் முக்கியமான அடையாளமாகக் கொண்டாடுகிறார்கள்.இக்கதைகளில் அரக்கன் என்று இருப்பவன் காலப்போக்கில் தீய சக்தி... தீய ஆவி என்று உருமாறினான்/ள். 

இதை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொண்டால் காற்றுக்கும் கருப்பண்ணசாமிக்கும் இருக்கும் தொடர்பு, மலைக்க வைக்கும்.

தமிழர்கள் என்றுமே அறிவியல்பூர்வமானவர்கள். அவர்களது பரிணாம வளர்ச்சியே விஞ்ஞானபூர்வமானதுதான். இதற்கு ஒரே எடுத்துக்காட்டு திணை வாழ்வியல்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை... என ஐந்து திணைகளாக தமிழகத்தைப் பிரித்து, தான் வாழும் பகுதியை அதற்குள் இணைத்தான். மலையும்  மலை சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி. எனவே மலைகளில் வாழ்ந்த, மலையின் இயல்பை உணர்ந்த, புரிந்து கொண்ட மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள். 

அப்படித்தான் காடும் காடு சார்ந்த பகுதிகளிலும் முல்லைத் திணை மக்கள் வசித்தார்கள். வயலும் வயல் சார்ந்த இடங்களிலும் மருதத் திணை மக்கள் இருந்தார்கள். கடலும் கடல் சார்ந்த பிரதேசங்களிலும் நெய்தல் மக்கள் வாழ்ந்தார்கள். வறண்ட நிலப் பகுதிகளில் வசித்தவர்கள் பாலை இன மக்கள்.

இந்த ஐந்திணை மக்களுக்குமே காற்றைப்பற்றி தெரியும். வாழ்ந்து வாழ்ந்து காற்றின் இயல்பை, குணத்தை அறிந்தார்கள். அதற்குத் தக தங்கள் நடமாட்டத்தை அமைத்துக் கொண்டார்கள்.

கற்காலத்திலேயே கருப்பர் தோன்றிவிட்டார் என்னும்போது திணைகளின் காலத்தில் கருப்பரின் ஆகிருதி, நடமாட்டம் எந்தளவுக்கு விஸ்தாரமாக இருக்கும்?

அந்த கம்பீரத்தின் விளை பொருள்தான் ‘காத்து கருப்பு’. அன்றைய விளைச்சல்தான் இன்றைய டெக்னாலஜி காலத்திலும் எதிரொலித்தபடி இருக்கிறது.குழப்பமாக இருக்கிறதா? ஒரு குழப்பமும் இல்லை. வினா- விடையாக சிலவற்றைப் பார்த்தால் தெளிவு கிடைக்கும்.

காற்று கருப்பாக எப்பொழுது தோன்றும்?

வாயுவில் வெளிச்சத்தை உறிஞ்சும் கரும்பண்புடைய துகள்கள் அதிகரிக்கும்போது. அதாவது ஒரு பொருள் அதிக வெப்பத்தில் எரியும்போது அதனால் உண்டாகும் கரிய தூசிகள், காற்றில் கலந்து கறுப்பு நிற திரள்களை உருவாக்குகின்றன. 

இவை ஏன் ஆபத்து?

கரும் புகை நுரையீரலில் சேர்ந்தால் ஆஸ்துமாவில் ஆரம்பித்து புற்றுநோய் வரை நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இன்று அறிவியல்பூர்வமாக இவை நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால், அன்று - அக்காலத்தில் - இந்தளவுக்கு பரிசோதனை அடிப்படையில் முடிவுகளை மனிதன் எட்டவில்லை. 

தனது அனுபவத்தின் வாயிலாக வேண்டாதவற்றை விலக்கினான். அப்படி விலக்குவதற்கான காரணத்தைச் சொல்ல அவனுக்குத் தெரியவில்லை. எனவே நம்பிக்கையின் அடிப்படையில் தனது அனுபவங்களைத் தொகுத்தான்.அப்படி சாதாரண உழைக்கும் மக்கள் தங்கள் அனுபவத்தின் விளைவாக, காற்றை இனம் பிரித்தார்கள். 

‘காற்று கோபித்தது’ என்றால், காற்று மாசு அதிகரித்திருக்கிறது என்பது இன்றைய பொருள். ‘தெய்வம் கரும்பருவத்தில் வந்தது’ என்றால் புயல் வருகிறது என்று அர்த்தம். ‘காற்று அடைக்கப்பட்டது’ என்றால் வெப்பநிலை தலைகீழ் என்று பொருள். 

அதாவது தரைக்கு அருகில் குளிரான காற்றுக்கு மேலே வெப்பம். கதிர்வீச்சினால் இப்படி வளிமண்டலத்தில் நிகழும். அதேபோல் ‘காற்று விடுவிக்கப்பட்டது’ என்றால் வளிமண்டலம் இயல்பாக இருப்பதாக அர்த்தம்.  

இதை அடிப்படையாக வைத்துதான் ‘காத்து கருப்பு அடிச்சுடும்’ என தங்கள் அனுபவத்தை ஒற்றை வாக்கியமாக இளம் தலைமுறைக்கு சொன்னார்கள்.  
ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் கருப்பண்ணசாமி, தமிழின் முதல் காலநிலை விஞ்ஞானி!ஆம். 

கருப்பண்ணசாமி உருவாக்கப்பட்ட - உருவான - விதம், அவர் சார்ந்த கதை வழக்குகள், அவருக்கான வழிபாட்டு முறைகள் என்பதையெல்லாம் கவனமாகப் பாருங்கள். காலநிலை, காற்றோட்டம், பருவமழை, நிலக்காற்று, கடற்காற்று சுழற்சி, ஈரப்பதம், சூறாவளி சுழற்சி, வானிலை மாற்றங்களைப் பற்றிய ஆழ்ந்த உள்ளூர் அறிவை அவை பிரதிபலிப்பதைக் காணலாம். 

எனவேதான் கருப்பண்ணசாமி, ‘தமிழின் முதல் காலநிலை விஞ்ஞானி’ எனப்படுகிறார். காதில் பூ சுற்றவில்லை. கருப்பண்ணசாமி கோயில் கொண்டுள்ள இடங்களைப் பாருங்கள். அவை சர்வநிச்சயமாக காலநிலை மாற்றங்களை பிரதிபலிப்பவையாக இருக்கும். காற்றின் திசையை கணிக்க, கொடியஸ்தம்பம். விளக்கு காற்றால் அணைவது /அணையாததை வைத்து காற்றின் அடர்த்தியை அறிந்தார்கள். 

பொதுவாக காற்றோட்டத்தை கவனிக்கும் இடமாகவே கருப்பரின் கோயில் இருக்கும். அதாவது தாழ்வான இடம் அல்லது மலைப்பாங்கான பகுதி. இங்கிருக்கும் கருப்பண்ணசாமியால் காற்றோட்டத்தை கச்சிதமாக அறிய முடியும். 

நீர்சுழற்சியின் அறிவுக்கான எடுத்துக்காட்டுதான் ‘ஏரிக்கரை தெய்வம்’.  உண்மையில் நாம் இன்று கருப்பண்ணசாமியை மத ரீதியாக தெய்வமாக மட்டுமே குறுக்கிவிட்டோம். உண்மையில் கருப்பர் காலநிலை, காற்று, நீர், புயல், விவசாய பாதுகாப்பு என ஒட்டுமொத்த கிராம வாழ்வியலுக்கான ‘சமூக விஞ்ஞானி’. 

அவரது புராணம் என்பது உண்மையில் ஒரு நிலப்பரப்பு அறிவியல் பதிவேடு; காற்று - மழை முன்னறிவிப்பு குறித்த கைடு; சுற்றுச்சூழல் கண்காணிப்பின் அதிகாரி.
மொத்தத்தில் நம் கருப்பர்... நமது கருப்பண்ணசாமி, ‘பாதுகாப்பின் அறிவியல்’ முடிவு.  
(கருப்பர் வருவார்) 

- கே.என்.சிவராமன்