சிறுகதை - பாக்யா அபார்ட்மென்ட்



ராஜாவுக்கு உள்ளூர ‘திக்’ என்றிருந்தது. கடந்த மாதம்தான் போய்விட்டு வந்திருந்தான். இப்பொழுது மீண்டும் கிளம்பவேண்டும் என்று சொன்னால் ஆஷா கோவித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. 
அதுவும் மூன்று நாள் ஆபிஸ் விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும் என்பதை அவளிடம் பொறுமையாக சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும். கடந்த முறையும் தகராறு ஆகிவிட்டது. இந்த முறையாவது பிழைப்போமா என்று  ஒரு வித குழப்பத்திலிருந்தான்.

அந்த சௌபாக்யா அபார்ட்மெண்டின் மூன்றாவது மாடியில் கொஞ்சமே கொஞ்சம் வெயில் படுமாறு இருந்தது அவனது வீடு. படியேறும்போது என்ன பேச வேண்டும் என்று ஒரு முறை சொல்லிப்பார்த்துக் கொண்டான். 

காலிங் பெல் அடிக்கலாமா என்று யோசிக்கும் வேளையில் ஆஷாவே கதவை திறந்துவிட்டாள். ஆஷா அவனுடைய இளம் மனைவி. இருபத்தைந்து வயது மதிப்பிடலாம். ஒருவேளை வீட்டில் அனுமதி கிடைத்திருந்தால் மாடலிங் துறையில் சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் போல ஒரு  பிரபலமான பெர்ஸனாலிட்டியாக வந்திருப்பாள் என நினைக்கும் வனப்பு அவளிடமிருந்தது. 

பாலு மகேந்திரா, சந்தோஷ் சிவன் போன்ற ஒளிப்பதிவாளர்களின் கேமராவுக்குள் அழகாக தஞ்சமடையவேண்டியவள். கடந்து செல்லும் ஆடவர்களை ஒரு முறையேனும் கண்டிப்பாக திரும்பிப் பார்க்க வைக்கும் சுந்தர ரூபம் அவளுடையது. ‘அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்’ என்பது போல ராஜா அவளை திருமணம் செய்து எட்டு மாதங்கள் முன்பு கூட்டி வந்துவிட்டான்.  
ஆஷா, ‘‘என்னங்க, இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க. அதிசயமாயிருக்கு. எப்பவும் ஆறு மணியாகும்...’’ என்றாள்.

‘‘ஆமா செல்லம். ஆபீஸ்ல இன்னைக்கு கொஞ்சம் பிரச்னையாயிடுச்சு. அதான் அப்சட் ஆயிட்டேன். என்ன பண்றதுன்னே தெரியாம முழிச்சிட்ருக்கேன்...’’
‘‘என்ன பெரிய பிரச்னை? நீங்கதான் எல்லாத்தையும் அசாதாரணமா டீல் பண்ற ஆளாச்சே. அப்புறம் என்ன அப்படி கவலை?’’‘‘ஆபீஸ்ல என்னோட ஒருத்தன் இருக்கானே... பேரு கூட ஆனந்த். ஞாபகம் இருக்கா?’’

‘‘ஆமா... சொல்லிருக்கீங்க. டைவர்ஸ் ஆக போதுனு சொல்லிருக்கீங்க...’’‘‘எக்ஸாக்ட்லி. அவனேதான். அவனுக்கு கோர்ட்ல ஹியரிங். அதனால அவன் மதுரைக்கு போறமாதிரி ஒரு நிர்பந்தம். கிளம்பி போய்ட்டான். மூணு நாள் ஆகிடும்...’’‘‘அவன் இல்லனா என்ன இப்போ..? போயிட்டுதான் வரட்டுமே. அதனால என்ன பிரச்னை உங்களுக்கு?’’

‘‘அதுதான் பிரச்னையே குட்டி. அவன் ஊருக்கு போய்ட்டானா... அந்த ப்ராஜெக்ட்ல நாங்க ரெண்டு பேருதான். இப்போ கிளையண்ட் வேற அவசரமா ஒரு மீட்டிங் கூப்பிட்றாங்க. கண்டிப்பா அட்டெண்ட் பண்ணியே ஆகணும். அவன் இல்லாததுனால என்னைய போகச்சொல்றாரு மேனேஜர்...’’ சொல்லிவிட்டு ஒரு தயக்கத்துடன் ஆஷாவை ஏறிட்டு பார்த்தான். 

செயற்கை அறிவு தொழில் நுட்பத்தில் இளங்கலை பொறியியல் முடித்த ஆஷா, அவனுக்கு ஸ்ட்ராங்கான ஏலக்காய் டீ போட்டுக்கொண்டிருந்தாள். இவன் கூறிய விஷயத்தை கேட்டதும் இவனை ஒரு முறை திரும்பி பார்த்தாள்.

‘‘அப்போ... நீங்க வெளியூர் போகனும்னு சொல்றீங்களா?’’

‘‘ஆமா ஆஷா, ஒரு மூணு நாள்தான். வேலை முடிஞ்சிடுச்சுனா ரெண்டே நாள்ல திரும்பி வந்துடுவேன். நான் இல்லன்னா இந்த மீட்டிங் கரெக்ட்டா கன்வெர்ஜ் ஆகாது. ப்ராஜெக்ட் டிலே ஆயிடும...’’‘‘நீங்க வேல பார்க்கறத பத்தி எனக்கு ஒண்ணுமில்லைங்க. ஆனா, அடிக்கடி இதே மாதிரி போறீங்க. போன மாசம் கூட போய்ட்டு வந்தீங்க. அதுக்கப்பறம் ஆறு மாசம் வெளியூர் போற மாதிரி இருக்காதுன்னுதானே சொன்னீங்க? இப்போ திரும்பவும் போறேன்னு சொல்றீங்க...’’‘‘நான் என்ன பண்ணுவேன் செல்லம்... இந்த ஒரு தடவ கொஞ்சம் அட்ஜெஸ்ட் செஞ்சுக்கோயேன். நான் போயிட்டு உடனே வந்துடுவேன். 

இதுக்கப்றம் வெளியூர் ட்ரிப் ஒரு வருஷத்துக்கு இருக்காது...’’ராஜா கெஞ்சினான். ஆஷா அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டாள். கொதித்துக்கொண்டிருக்கும் ஏலக்காய் டீயை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து அவளை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான். காதோரமாக ‘‘ஸாரி...’’ என்று கிசுகிசுத்தான். 

தன் இடுப்பை வளைத்திருந்த ராஜாவின் கையை இருக்க பற்றிக்கொண்டே கொஞ்சும் குரலில் ஆஷா பேசினாள்.‘‘நீங்களே யோசிச்சு பாருங்க... ரோபோடிக்ஸ் படிச்சிட்டு வேலைக்கு போணும் என்பது என்னோட ரொம்ப நாள் ஆசை. ஆனா, வீட்ல பெர்மிஷன் கிடைக்காததுனால நான் வேலைக்கு போக முடியல. நீங்க வந்து என்ன கொத்திட்டு வந்துட்டீங்க. 

அபார்ட்மெண்ட் நல்லா இருந்தாலும், நீங்க காலைலே போனீங்கன்னா ராத்திரிதான் வர்றீங்க. துணைக்கு இருக்கட்டுமேனு ஒரு மெக்காவ் பறவைய அவ்ளோ காசு கொடுத்து வாங்கி வச்சிருக்கீங்க. அது கிட்ட நான் எவ்ளோதான் பேசுறது? அது எப்படி கூண்டுல அடைஞ்சி கிடைக்குதோ அதே மாதிரி நான் இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கிறேன். 

இந்த மாதிரி லோன்லியா ஃபீல் பண்ற டைம்ல நீங்க வேற இதேமாதிரி அடிக்கடி ஊருக்கு போறேன்னு சொல்றது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலங்க...’’ 
ஆஷா அவளின் குறைகளை ஒரேடியாக கொட்டி தீர்த்தாள். ராஜாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளை முதலில் சமாளித்தால் போதும் என்று நினைத்தான். பின்புறமாக கட்டிக் கொண்டிருந்தவன் கையை விடுவித்து மெதுவாக அவளின் முன்னால் வந்து நின்றுகொண்டான். 

அவளின் பஞ்சு போன்ற தாடையை தன் இரு விரல்களால் தூக்கி கோலிக்குண்டு போலிருந்த அவள் இரு கண்களை நேராக பார்த்தான். செர்ரி பழத்தின் சிவப்பை ஒத்திருந்த அவளது இதழ்களை இரு விரல்களால் நீவி விட்டுக்கொண்டே மற்றொரு கையால் அவளை இழுத்து தன் பக்கம் அணைத்து கொண்டான். கொஞ்சம் வெட்கம் வந்து சிரித்தவளின் கண்ணா குழிகளை பார்த்து ‘‘இங்கே ஒரு ஸ்ட்ராபெரி நட்டு வைக்கலாமா ஸ்வீட்டி?’’ என்று கொஞ்சவும் தேநீர் பொங்கி ஸ்டவ்வை அணைத்துவிட்டது.

ஆஷா அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டே ‘‘கொஞ்சம் விட்டா இந்த சமையலறையை, பெட்ரூமா மாத்திடுவீங்க போலேயே...’’ என்று சிணுங்கிக் கொண்டாள். 
‘‘ஆஷா, நீயே எனக்கு கொஞ்சம் டிரெஸ்லாம் எடுத்து வச்சிடேன்... நீ போனதடவ செலெக்ட் பண்ணிகொடுத்த மெரூன் ஷர்ட் ரொம்ப நல்லா இருந்துச்சின்னு க்ளையண்ட் சொன்னாங்க தெரியுமா?’’‘‘அப்போ இந்த தடவையும் அதே மெரூன் எடுத்து வச்சிடவா?’’  

அவள் ஆசுவாசமாகிவிட்டாள் என்பதை தெரிந்துகொண்டவன் சற்றே பெருமூச்சு விட்டான். குளியலறையை நோக்கி நகர்ந்தான். ஆஷா அவனது உடைமைகளை சூட்கேசில் பேக் செய்ய ஆரம்பித்து கொண்டே இரவு உணவுக்கு தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். பாக்கெட் பெர்பியும், லேப்டாப், பவர் பேங்க் என ஒவ்வொன்றாக எடுத்து வைத்தாள். அடுத்த அரை மணி நேரத்தில் வெளியே வந்தான் ராஜா. 

வெகுவேகமாக உடலை காயவைத்துவிட்டு ஆஷா எடுத்து வைத்திருந்த உடைகளை உடுத்திக்கொண்டான். ஆஷாவும் கொஞ்சமே கொஞ்சமாக ரெஃபிரஷ் செய்திருந்தாள். இவன் வருவதற்குள் இரவு உணவை உணவு மேஜையில் எடுத்து வைத்திருந்தாள். ‘‘ஏங்க... சாப்பிட வர்றீங்களா? டைம் ஆகுதுல. கார்லதான் போறீங்க. சீக்கிரமா கிளம்பினாதான் நேரத்தோட போக முடியும்...’’‘‘வந்துட்டேன் மை டியர். இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? தினம்தினம் நீ புதுசா ஏதாவது செஞ்சு அசத்துவியே... இன்னைக்கு என்ன செஞ்சிருக்க?’’

‘‘இன்னைக்கு ஒண்ணும் ஸ்பெஷலா செய்யலைங்க. கோதுமை தோசையும் தக்காளி சட்டினியும். மனசு சரியில்ல. நீங்க ஊருக்கு போறத நினச்சு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குங்க...’’‘‘நீ எது செஞ்சாலும் ஸ்பெஷல்தான் எனக்கு. ரொம்ப வருத்தப்படாத கண்ணு. இன்னைக்கு போய்ட்டு ரெண்டே நாள்தான். 

திரும்பி வந்துடுவேன். ஒரு பெரிய டெட்டி பியர் இருக்குல்ல... அதை நான்தான்னு நினைச்சு கட்டிப் பிடிச்சு தூங்கிடு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ போன்ல பேசுறேன். கவலைப்படாத ஆஷா...’’ ஏதேதோ சொல்லி தேற்றினான்.அரை மணி நேரத்தில் சாப்பிட்டு, எல்லாம் சூட்கேசில் சரியாக இருக்கிறதா என்று செக் செய்துவிட்டு கிளம்ப யத்தனித்தான். 

‘‘என்னங்க, போயே ஆகனுமா?’’ என்ற ஆஷாவை ஒரு முறை இறுக அணைத்து இதழோடு இதழ் சேர்த்து ஊமையாக்கினான். மூன்றாவது மாடியிலிருந்து படியிலேயே இருவரும் இறங்கி வந்தனர். பார்க்கிங்கில் இருந்த காரின் டிக்கியில் சூட்கேஸை வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்துவிட்டு ஒருமுறை ஆஷாவிடம் ‘‘லவ் யூ...’’ என்றான். ஆஷா கையசைத்து வழியனுப்பினாள். கார் அபார்ட்மெண்டை விட்டு வெளியேறி அந்த தெருவை கடந்து திரும்பியபின் நின்றது. மேனேஜரை அழைத்தான்.
 
‘‘என்ன ராஜா... ஆபீஸ்லேந்து சீக்கிரம் கிளம்பிட்டீங்க. ஒண்ணும் ப்ராபளம் இல்லையே..?’’

‘‘ஊர்ல தாய் மாமாக்கு உடம்பு சரியில்ல சார். அதான் உடனே கிளம்புறமாதிரி ஆகிடுச்சு. ஒரு ரெண்டு நாள்ல வந்துடுவேன். எல்லா விஷயத்தையும் ஆனந்த்ட்ட சொல்லிருக்கேன். அவரு மேனேஜ் பண்ணிப்பார் சார்...’’‘‘ஓகே ராஜா. யூ ப்ளீஸ் டேக் கேர். நான் இங்க பாத்துக்குறேன்...’’ ராஜா பெருமூச்சுவிட்டான். போனை எடுத்து அடுத்த கால் செய்தான். எதிர் முனையில் மீனா. ‘‘ரெண்டே நிமிஷத்துல வந்துடறேன்...’’ என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

மூன்று தெரு தள்ளி தனித்திருந்த வீட்டில் காரை நிறுத்தினான். தயாராக இருந்த மீனா வந்து ஏறிக்கொண்டாள். மீனா அவனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவள்.  
‘‘என்ன ராஜா இவ்வளவு நேரம்?’’ ‘‘அதை ஏன் கேக்குற மீனா? நான் என் பொண்டாட்டிய சமாளிச்சுட்டு வெளிய வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. 

ஓரளவு சமாளிச்சுட்டேன். டோன்ட் ஒரி...’’ என்றான்.மீனாவை ஏற்றிக் கொண்ட அந்த கார் கொடைக்கானல் செல்லும் ரோட்டை நோக்கி வேகமாக ஓடியது. ராஜா ஒரு முறை ஆஷாவை நினைத்துக் கொண்டான். மனசாட்சி கொஞ்சம் அவனை பிராண்டியது. என்னதான் இருந்தாலும் தன்னையே நினைத்து உருகும் ஆஷாவிற்கு துரோகம் செய்வது அவனுக்கு நெருடலாயிருந்தது. 

எனினும் அந்த எண்ணங்களை தவிர்த்துவிட்டு மீனாவின் கையை தனது மடியில் எடுத்து வைத்து கொண்டு காரின் வேகத்தை அதிகரித்தான். அதே வேளையில் சௌபாக்கியா அபார்ட்மெண்டில் ராஜாவை வழியனுப்பிவிட்டு படியேறும் முன் ஆஷா, எதிர் வீட்டு கார்த்தியை எதிர்கொண்டாள். ‘‘அவர் மூன்று நாள் வெளியூர் போயிருக்கிறார்...’’ என்று சொல்லிவிட்டு வேகமாக படியேறத்தொடங்கினாள்.    

 - ஸ்ரீருத்