சமுத்திரக்கனி Vs கெளதம் வாசுதேவ் = ஃபைனான்ஸ்!
‘‘சாந்தீ... பணம் சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா? பணக்காரனாகணும்னா பணக்காரனா வாழ கத்துக்கணும், காசு இல்லையா கடன் வாங்கி செலவு பண்ணு...’’ என பல சுவாரஸ்யங்களுடன் வெளியாகியுள்ள ‘கார்மேனி செல்வம்’ படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ்மேனன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை ராம் சக்ரி இயக்கியுள்ளார்.
 டைட்டிலுக்கு என்ன காரணம் வெச்சிருக்கீங்க?
டீசரில் சொன்ன மாதிரி வாழ்க்கையில் பணத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரணும் என்பதை டீல் செய்திருக்கோம்.செல்வம் என்று சொல்லும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதே மாதிரி படத்தோட மெயின் கேரக்டர் பேர் செல்வம். அவர் தேடி ஓடுவதும் அந்த செல்வத்தை நோக்கித்தான். அதனால் செல்வம் என்ற டைட்டில். கார்மேனி என்பது படத்துல கார் முக்கியமான கதாபாத்திரத்துல வரும் என்பதால்.  ஃபேமிலி ஜானர் படமா?
ஆமாம். ஹீரோ, கிடைக்கும் வருமானத்துல மனைவி, குழந்தை என நிம்மதியாக குடும்பம் நடத்துகிறார். அந்த சூழ்நிலையில் பணம் சம்பாதித்தால் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற எண்ணம் அவருக்கு உருவாகிறது.
அந்த மைண்ட் செட்டுக்குள் போனபிறகு அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் வருகிறது, பணத்தைத் தேடிச் செல்லும் அந்த ஓட்டத்தில் சந்திக்கும் அனுபவங்கள் என்ன, எது உண்மையான செல்வம் என்று ஹீரோ தெரிந்துகொள்வதுதான் படம். சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன் என இரண்டு இயக்குநர்களுடன் வேலை செய்த அனுபவம் எப்படியிருந்தது?
சமுத்திரக்கனி சார் ஸ்கிரிப்ட் படிச்சதும் கதையோடு தன்னை கனெக்ட் பண்ணியதோடு இது சொல்லவேண்டிய கதை என்று ஆர்வத்தோடு உள்ளே வந்தார்.
கெளதம் மேனன் சார் தமிழில் மட்டுமல்ல, மலையாளத்திலும் பிசியாக இருக்கிறார். நாங்கள் கேட்டபோது ‘பண்ண முடியுமா என்று தெரியவில்லை’ என்றுதான் சொன்னார்.
‘ஒருவேளை கதை பிடிச்சிருந்தால் பண்ணுகிறேன்’ என்றார். கதை இம்ப்ரஸ் பண்ணியதால் அவரும் கமிட்டாகிறேன்னு சொன்னார். இந்தக் கதைக்கு இரண்டு எக்ஸ்ட்ரீம்ல இருக்கிற ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டுச்சு. இந்த காம்பினேஷன் பிரமாதமா வந்திருக்கு.
இருவருக்கும் வேலையைப் பற்றி சொல்லணும்னு கிடையாது. அரிதாக சில சஜஷன்ஸ் சொல்வார்கள். கேரக்டர் பற்றி சில கேள்விகள் இருக்கும். அதற்கு தெளிவான பதில் சொன்னால் போதும். அதன் பிறகு அவர்கள் புரிதல் பிரமாதமாக இருக்கும். இயக்குநராக அவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.
இருவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பவர்கள். ஷாட் வைப்பதாக இருந்தால் ‘முதலில் கெளதம் சாருக்கு வையுங்க’ என்று கனி சாரும், ‘கனி சார் போர்ஷனை ஷூட் பண்ணுங்க’னு கெளதம் சாரும் சொல்வார்கள். பழைய நண்பர்கள் போல் எப்போதும் சகஜமாக பேசிக்கொள்வார்கள்.
கனி சாரிடம் பிடிச்சது அவருடைய பெர்ஃபாமன்ஸ் டயலாக் டெலிவரி. ஒருநாளும் டயலாக்கை மறந்து ரீடேக் போனதில்லை. கிராஃப்ட் தெரிஞ்சாலும் இயக்குநர் என்ற முறையில் என்னிடம் விளக்கம் கேட்பார். ஸ்பாட்டுக்கு ஆயத்தமாக வரணும் என்பதை அவரிடம் பார்க்கலாம்.
கெளதம் மேனன் சாரைப் பொறுத்தவரை அவர் நின்றாலே ஸ்டைலாக இருக்கும். அவருடைய பர்சனாலிட்டி காந்தம் மாதிரி. கொஞ்ச நேரம் பேசினாலே அருகில் இருப்பவரை ஈர்த்துடுவார். கிராஃப்ட் விஷயத்தில் டயலாக்கை எளிமையாக மாத்துவார். சில இடங்களில் ரிப்பீட் இருந்திருக்கும். அதையெல்லாம் மாத்தி அமைச்சுடுவார். லட்சுமி ப்ரியா, அபிநயா என அழகாக இரண்டு நாயகிகள்..?
லட்சுமி பிரியா, தேசிய விருது நடிகை. ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு அழைக்க நினைச்சோம். தேசிய விருது வாங்கியவரிடம் எப்படி கேட்பது என்ற தயக்கத்துடன் ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு அழைத்தோம்.
சினிமாவை ப்ரஃரொஃபஷனாக பார்ப்பவர் என்பதால் எந்தவித பந்தாவும் இல்லாமல் வந்தார். நினைச்ச மாதிரியே ஸ்கிரீன் டெஸ்ட் பக்காவா அமைந்தது.
கேரக்டரின் தன்மையை வெகு சுலபமாக கேட்ச் பண்ணக்கூடியவர். அவருடைய திறமைக்கு சிறிய உதாரணம்... க்ளைமாக்ஸ் காட்சியைத்தான் முதலில் எடுத்தோம். அந்த உணர்வுகளை முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஈசியாகக் கொண்டு வந்தார்.
‘நாடோடிகள்’ அபிநயா, கெளதம் சாருக்கு ஜோடியாக வர்றார். கனி சார் இருந்ததால் அபிநயாவிடம் எப்படி வேலை வாங்கணும் என்ற இன்புட்ஸ் கொடுத்தார். திறமையான நடிகை. கட் பண்ணி கட் பண்ணி போகலாம்னு இருந்தேன். எதிரில் நடிப்பவர்களின் லிப் மூவ்மெண்ட்டை கவனிச்சு சிறப்பாக செய்தார். இவர்களுடன் கார்த்திக்குமார், கோதண்டம், படவா கோபி முக்கியமான கதாபாத்திரத்துல வர்றாங்க.
பாடல்கள் எப்படி வந்துள்ளன?
மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் இசை அமைக்கும் பணியை செய்துள்ளது. இசை அமைப்பில் இது தமிழ் சினிமாவுக்கு புதியது. வழக்கமாக மியூசிக் டைரக்டரிடம் பேக்கேஜ் அடிப்படையில் சம்பளம் பேசப்படும். இந்த சிஸ்டத்தில் தயாரிப்பாளர், மியூசிக் டைரக்டர், இசைக் கலைஞர்கள் என அனைவருக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீத வருமானம் பகிர்ந்து தரப்படும்.
இதன் நேர்மறை அம்சம் இசைக்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரியும். புரொடியூசர் ஃபிரெண்ட்லி, இளம் இசையமைப்பாளர்கள் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு, டீம்ல இருக்கிறவர்களுக்கு வருமான பலன்கள் போன்றவை இதன் சிறப்பம் சங்கள்.
கேமராமேன் யுவராஜ் என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவருக்கு ஸ்கிரிப்ட் முழுசாகத் தெரியும். தயாரிப்பு பாத்வே புரொடக்ஷன்ஸ் அருண் ரங்கராஜுலு. பிரம்மாண்டமாக செலவு செய்துள்ளார்.வாழ்க்கையில் எல்லோரும் சேஃப்டி, செக்யூரிட்டியை தேடிப் போகிறோம். அந்த சேஃப்டி, செக்யூரிட்டியை அடைந்ததும் - பணம் சேர்த்ததும் - அதுதான் உண்மையான செல்வம் என்று நினைக்கிறார்கள்.
சேஃப்டி பண்ணணும்னு ஓடக்கூடியவர்கள், வாழ்க்கையில் என்ன மாதிரி விஷயங்களை இழக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லியுள்ளோம்.ஃபைனான்ஸ் விஷயத்தில் மக்களுடைய புரிதல் பற்றிய படம் இது.
எஸ்.ராஜா
|