மலை ஏற்றம் அல்ல... மலை ஓட்டம்!



மலையேற்றம் என்பது சாகசம் நிறைந்த செயல். அதை எல்லோரும் அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது. அதற்குப் போதுமான பயிற்சிகள் அவசியம். சிலர் ஆன்மிகப் பயணமாக கோயில்களில் மலையேறுவது என்பது வேறு விஷயம். 
ஆனால், இளைஞர் கோபாலகிருஷ்ணனின் மலையேற்றம் என்பது இதில் எதிலும் அடங்காது. அவரின் மலையேற்றத்தை, மலை ஓட்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அவர் அப்படித்தான் அந்தச் செங்குத்தான கொண்டரங்கி மலையில் தினமும் ஓடியே ஏறி இறங்குகிறார்.
அதுவும் ஓரிரு முறை அல்ல. நான்கு முறை. தன்னுடைய பெயர் சாதனை புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தச் சாதனை ஓட்டத்தை அவர் முன்னெடுத்து வருகிறார். 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கே.கீரனூர் கிராமம். இங்குள்ள கொண்டரங்கி மலை செங்குத்தான ஒன்று. சுமார் 4 ஆயிரம் படிகள் கொண்டது. முழுக்க பாறைகளால் ஆனது.  

இந்த மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனா சுவாமி என்ற பிரசித்தி பெற்ற சிவன் கோயிலும் இருக்கிறது. இந்த மலையில் ஒருமுறை ஏறி இறங்கினாலே நமக்கு ஒரு வாரத்திற்கு எழ முடியாத அளவுக்கு சோர்வு வந்திடும். 

ஆனால், சாதனைக்காக இதில் தொடர்ந்து அசால்ட்டாக ஏறி இறங்குகிறார் கோபாலகிருஷ்ணன். ‘‘என்னுடைய டார்கெட் ஆயிரம் நாட்கள். இப்போ, 720 நாட்கள் கடந்திருக்கேன். இன்னும் 280 நாட்கள் ஏறி இறங்கணும்...’’ என உற்சாகமாகப் பேசும் கோபாலகிருஷ்ணன் மழை, வெயில், காற்று என எதையும் பார்ப்பதில்லை. காலநிலை எப்படியிருந்தாலும் தன் சாதனையை தொடர்ந்தபடியே இருக்கிறார். 

‘‘சொந்த ஊர் தாராபுரம் அருகே புத்தூர்னு ஒரு கிராமம். அப்பா, அம்மா இருவருமே கூலி வேலை செய்றாங்க. நான் பி.எஸ்சி இயற்பியல் படிச்சிருக்கேன். போலீஸ் தேர்வுக்காக படிச்சிட்டு இருக்கேன். 

அதுக்காக ஜிம் போய் உடலை ஃபிட்டாக வச்சிட்டு இருந்தேன். இந்த ஜிம் ஃபிட்னஸ்ல கார்டியோ வொர்க்அவுட்னு இருக்கு. அதாவது வாரம் ஒருநாள் உடலையும், இதயத்தையும் பலப்படுத்த ரோட்டுல ஓடுவாங்க. அப்போ, நாம் புதுசா ஏதாவது செய்வோமேனு தோணுச்சு. 

அதனால், மலையேற்றத்தைத் தேர்ந்தெடுத்தேன். 2022ம் ஆண்டு இந்தக் கொண்டரங்கி மலைக்கு வந்தேன். அதுக்கு முன்னாடி எங்க ஊர் பக்கத்துல இருக்கிற சிறிய மலைகள்ல ஏறி இறங்கினேன். இந்தக் கொண்டரங்கி மலை எங்க ஊர்ல இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு. முதல்முறையா 2022ல் வந்தப்ப நல்லா மழை பெய்துட்டு இருந்துச்சு. சும்மா மேலே போய் பார்க்கலாம்னு ஓர் ஆர்வத்தில் ஏறினேன். உண்மையில் மேலே ஏறின காரணமே அருவிதான். 

ஆமா. மழை பெய்ததால் அங்க அருவி விழுற சத்தம் கேட்டுச்சு. அதைப் பார்க்கப் போனேன். பிறகு அப்படியே சிவன் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு மெதுவாக கீழிறங்கி வந்தேன். 
அப்புறம், 2023ம் ஆண்டு நாம் ஏதாவது சாதிக்கணும்னு தோணுச்சு. 

அப்போ, இந்த கொண்டரங்கி மலையில் தொடர்ந்து ஏறி இறங்கினால் என்னனு நினைச்சேன். அதனால், 108 நாட்கள்னு கணக்கு வச்சு ஓடினேன். ஆனா, எனக்குள் அது ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்துச்சு. அப்படியே ஆயிரம் நாட்கள்னு டார்கெட்டை அமைச்சேன்.   

ஆரம்பத்தில் இந்த மலையைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. முதல்முறையாக ஏறும்போது 25 நிமிடங்கள்ல ஏறினேன். இறங்க பத்து நிமிடங்கள் எடுத்தது. அப்புறம், சீக்கிரம் ஏறி நேரத்தைக் குறைக்கலாம்னு தோணுச்சு. ஏன்னா, அதுவும் ஒரு சாதனையாக மாறும் இல்லையா..? 

இதனால், வேகமாக ஓடி 20 நிமிடத்தில் மேலே ஏறினேன். கீழே பத்து நிமிடங்களில் வந்தேன். ஆரம்பத்துல முதல் பத்து நாட்கள் ஒருமுறைதான் ஏறி இறங்கினேன். அப்புறம், 2 முறைனு மாறுச்சு. ஒருமாதம் கழித்து மூன்று முறை ஏறி, இறங்க ஆரம்பிச்சேன். இப்ப தினமும் நான்கு முறை ஏறி இறங்கறேன். ஒருநாளைக்கு ரெண்டு மணிநேரமாகும். ஊர்ல இருந்து கிளம்பி சரியாக காலையில் 6.50 மணிக்கு மலை அடிவாரம் வந்திடுவேன்.

ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை ஏறி இறங்குவேன். எங்கேயும் உட்காரவோ, நிற்கவோ மாட்டேன். தண்ணீரும் குடிக்கமாட்டேன். இதனை வீடியோ எடுத்து என் இன்ஸ்டாவுல பதிவிடுவேன். அப்புறம், வீட்டுக்குப்போய் காவலர் தேர்வுக்குப் படிப்பேன். கடந்த ரெண்டு ஆண்டுகளாக என்னுடைய வேலை இப்படித்தான் போயிட்டு இருக்கு. 

இன்றுடன் 720 நாட்களாகிடுச்சு...’’ என சந்தோஷமாகச் சொல்கிற கோபாலகிருஷ்ணன், காலில் ஷூவோ, செருப்போ அணியாமல் வெறும் காலுடனே இந்தச் சாதனையைச் செய்கிறார். அதுமட்டுமில்லாமல் மேல்சட்டையும் அவர் அணிவதில்லை. 

‘‘வெறும் கால் ஏன்னா, இது மலைக்கோயில் என்பது முதல் காரணம். அப்புறம், கிரிப் கிடைக்கணும். இது செங்குத்தான மலை. படிக்கட்டுகளும் பாறைகளால் ஆனது. அதேபோல் மேலே ஏறுபவர்களின் பிடிமானத்திற்கு ஒருசில இடங்கள்லதான் கம்பிகள் போட்டிருக்காங்க. கொஞ்சம் கால் பிசகினாலும் அவ்வளவுதான். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் ஆகிடும். குறிப்பா, மலைக்காலத்தில் பாறைகள் ரொம்ப வழுக்கும். அதனால், வெறும் காலுடன் ஓட முடிவெத்தேன்.  

அப்புறம், முதல்ல ஓடும்போது பனியன் அணிந்துதான் ஓடினேன். ஆனா, வியர்வை நிறைய சேர்ந்து பனியன் ஈரமாகி, அது ஒரு வெயிட்டாக மாறுச்சு. இது என் வேகத்தைக் குறைக்குது. சோர்வையும் ஏற்படுத்துது. அதனால், மேல்சட்டை அணியாமல் ஓடறேன். இப்ப கொண்டரங்கி கீரனூர் மக்கள் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருக்காங்க. ‘தம்பி நீ நல்லா பண்ணு. உன்னால் சாதிக்க முடியும்’னு சொல்வாங்க. அது உத்வேகமாக இருக்குது. 

அதுமட்டுமில்லாமல் இப்படி ஓடுறதால் என் உடம்பும் நல்லாயிருக்கு. உடல் ஆற்றல் அதிகரிச்சிருப்பதை நானே பார்க்கிறேன். அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கமுடியுது...’’ என்கிற கோபாலகிருஷ்ணன், தொடர்ந்து பேசினார்.  ‘‘இப்ப இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இந்தச் சாதனையை எடுத்துக்கிறோம்னு சொல்லியிருக்காங்க. இதில் நான் ஆயிரம் நாட்கள் ஏறினது சாதனையாக மாறுமானு தெரியல. 

ஆனா, 2 மணி நேரத்தில் நான்குமுறை ஏறி இறங்குறேன் இல்லையா... அது சாதனையாக மாறும். அந்த அங்கீகாரமே எனக்குப் போதும். அடுத்து காவலர் தேர்வில் வெற்றி பெறணும். அப்புறம், விளையாட்டுத் துறையில் அதலெட்டிக்ஸில் வாய்ப்பு கிடைத்தால் சாதிக்கணும்னு ஆசையிருக்கு. 

கோவையில் நிறைய பயிற்சி கிளப்கள் இருக்கு. அங்கே நிறைய பயிற்சியாளர்களும் இருக்காங்க. ஆனா, சேர்ந்து படிக்க வசதியில்ல. இப்பகூட இந்த மலையேற்றத்துக்கு வீட்டில் எதிர்ப்புதான். சாதனை எல்லாம் தேவையானு கேட்கறாங்க. எல்லோரையும் போல் வேலைக்குப் போனு சொல்றாங்க. ஆனா, என்னால் சும்மா இருக்க முடியல. ஏதாவது சாதிக்கணும்னு தோணுது.

இப்போ, எனக்கு ஒரு அண்ணன் அதலெட்டிக்ஸ்ல கோச்சிங் தர்றேன்னு சொல்லியிருக்காங்க. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதியுடன் இந்த மலையேற்றம் ஆயிரம் நாட்களைத் தொடும். 

அப்புறம் அதலெட்டிக்ஸ்ல பயிற்சி எடுக்கணும்னு நினைச்சிருக்கேன். நிச்சயம் சாதிப்பேன்...’’ என நம்பிக்கை  பொங்க  சொல்கிறார் கோபால கிருஷ்ணன்.

பேராச்சி கண்ணன்