வாராரு வாராரு கருப்பரு வாராரு
3. மகாபாரதமும் கருப்பண்ணசாமியும்
அதிர்ந்து போனார் ரேணுகா தேவி.நர்மதா நதி சலனமற்று ஓடிக் கொண்டிருந்தது. ஆதித்தன் இன்னும் உதிக்கவில்லை. உதிப்பதற்குள் நதி நீரை சுமந்து செல்ல வேண்டும். கூப்பிடும் தொலைவில், நர்மதா நதிக்கரையை ஒட்டிய வனத்தில் பர்ணசாலை அமைந்திருக்கிறது. ரேணுகா தேவியின் கணவரும் மாபெரும் முனிவருமான ஜமதக்னி, அந்த பர்ணசாலையில்தான் தியானத்தில் இருக்கிறார். தியானம் முடிந்ததும் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதற்கு நதி நீர் வேண்டும். ஆனால்...? பிருகு முனிவர் தன்னைக் காப்பாற்றுவாரா? தெரியவில்லை. புரியவில்லை.
ரேணுகா தேவிக்கு அழுகை வந்தது. கல்வியிலும் ஞானத்திலும் சிறந்தவர் பிருகு முனிவர். ஒரு சுபயோக சுபதினத்தில் அரசகுமாரியை மணந்தார். கணவருக்கு ஏற்ற மனைவியாக அரசகுமாரி திகழ்ந்தார்.ஒருநாள் மகிழ்ச்சியுடன் இருந்தபோது ‘‘என்ன வரம் வேண்டுமென்று கேள்...’’ என்றார் பிருகு முனிவர். ‘‘குறையிருந்தால்தானே நாதா முறையிட முடியும்? நிறைவாக வாழ்கிறேன்...’’‘‘உணர்கிறேன்.
என்றாலும் ஆசை என ஒன்று இருக்குமல்லவா..? கேள்...’’‘‘சுவாமி...’’ தயங்கிய அரசகுமாரி, ‘‘எனக்கும் கன்னியாகுப்ஜத்தை ஆண்டு வரும் காதி மன்னரின் மனைவியான என் தங்கைக்கும் நல்ல முறையில் பிள்ளைப்பேறு வாய்க்க வேண்டும். தாங்கள் அதற்கு அருள் புரியவேண்டும்...’’‘‘நல்லது! ஆசி வழங்குகிறோம்...’’ என்ற பிருகு முனிவர், இருவருக்கும் தனித்தனியே வழிபாடுகளை எடுத்துரைத்தார். ஆனால், அக்காவுக்கு உரிய வழிபாட்டை தங்கையும்; தங்கைக்குரிய வழிபாட்டை அக்காவும் மாற்றி செய்துவிட்டார்கள்.அறிந்த பிருகு முனிவர், தன் மனைவியிடம் ‘‘வழிபாட்டை மாற்றி செய்துவிட்டீர்கள். எனவே உன் வயிற்றில் அரசனுக்குரிய சத்திரிய குணத்துடன் மகன் பிறப்பான்... உன் தங்கைக்கு அன்பும் இரக்கமும் கொண்ட மகன் பிறப்பான்...’’ என்றார்.
‘‘நாதா... சத்திரிய குணமாக இருந்தாலும் நம் மகன் உங்களைப் போல் ஞானியாக வாழ வேண்டும்...’’ என அரசகுமாரி வேண்டினாள்.‘‘அவ்வண்ணமே ஆகுக...’’ என்றார் பிருகு முனிவர்.அப்படி பிருகு முனிவருக்கும் அரசகுமாரிக்கும் ஜனித்தவர்தான் ஜமதக்னி முனிவர்.அரசகுமாரியின் தங்கைக்கும் காதி மன்னருக்கும் பிறந்தவர்தான் கெளசிகன். இந்த கெளசிகனே பின்னாளில் ‘விஸ்வாமித்திரர்’ என விஸ்வரூபம் எடுத்து வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம் பெறப் போகிறவர்.
ஜமதக்னி, தன் தந்தை பிருகு முனிவரிடமே கல்வி கற்றார். ஞானவானாக உயர்ந்தார். பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இட்சுவாகு குலத்தை சேர்ந்த ரேணுகா தேவியை மணந்தார். குறைவில்லாத இல்லறம். குறைவற்ற செல்வமாக ருமணவான், ஸஷேணன், வஸீ, விசுவாஸீ, ராம பத்திரன் என ஐந்து பிள்ளைகள். மணி மணியான தங்கங்கள். வீரத்திலும் விவேகத்திலும் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்தவர்கள்.
இறுதியாகப் பிறந்த ராம பத்திரனை கையில் ஏந்தியபடி, பிரசவம் முடிந்த களைப்பில் படுத்திருந்த தன்னை நோக்கி ஜமதக்னி முனிவர் சொன்னது இப்பொழுதும் ரேணுகா தேவியின் செவியில் எதிரொலித்தது.‘‘ரேணுகா... நம்மால் இந்தப் பூமியில் பிறந்திருக்கும் இந்த சிசுவுக்கு ராம பத்திரன் என பெயர் சூட்டுகிறேன். பின்னாளில் நடக்கவிருப்பவை இக்கணம் என் கண்முன்னே காட்சிகளாக விரிகின்றன. அதை அப்படியே சொல்கிறேன்... கேள்!
பகவான் விஷ்ணு பத்து அவதாரங்களை எடுக்கப் போகிறார். அவதாரம் என்றால் ‘கீழே இறங்கி வருதல்’ என்று பொருள். மனிதர்களுக்குப் பிறந்து, மனிதனாக வாழ்வதும் அவதாரங்களில் ஒருவகைதான். திருப்பாற்கடலில் இருந்து சட்டென்று மனிதர்களைக் காக்க பூமியில் இறங்கி, தன் பணியை ஸ்ரீமன் நாராயணன் முடிப்பதும் அவதாரம்தான். இப்படி இருவேறு அவதாரங்களையும் எம்பெருமான் எடுக்கிறார்; எடுக்கப் போகிறார்; ஏற்கனவே அதில் ஐந்து அவதாரங்களை பல்வேறு காலகட்டங்களில் எடுத்தும்விட்டார்.
ஏதோவொரு தாய்க்கும் தந்தைக்கும் மகனாகப் பிறந்து, வளர்ந்து வாழும் அவதாரம், அம்சா அவதாரம் எனப்படும். இதற்கு எடுத்துக்காட்டு இனிவரும் காலங்களில் நிகழவிருக்கும் ராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும்.திடீரென்று அதிசயமாகத் தோன்றி, தான் வந்த காரியத்தை நிறைவேற்றிவிட்டு வைகுண்டம் திரும்பிவிடும் அவதாரம், ஆவேச அவதாரம். இதற்கு உதாரணம் நரசிம்மர்.
இதோ... பிறந்திருக்கும் இந்த மகன் - நம் மகன், அம்சா அவதாரமும், ஆவேச அவதாரமும் இரண்டற கலந்து ஜனித்திருப்பவன். இவனே பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். அதேநேரம் ராம அவதாரங்களில் இவனே முதன்மையானவன். ஆம்... மொத்தம் மூன்று ராம அவதாரங்கள் நிகழப் போகின்றன. இதோ... இன்று ராம பத்திரனாக இருப்பவன் ஒரு கட்டத்தில், பரசுராமன் என அழைக்கப்படுவான்.
அதேபோல் ராம அவதாரங்களில், இரண்டாவது அயோத்தியிலும், மூன்றாவது கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணனாக பலராமராகவும் அரங்கேறப் போகிறது.முதல் ராம அவதாரமான, நம் மகன், ‘பரசுராமன்’ என அழைக்கப்பட நமது மூன்றாவது மகனான விசுவாஸீ காரணமாகப் போகிறான். அந்தக் காரணமும் உன் பொருட்டே நிகழப் போகிறது...’’ ரேணுகா தேவியின் உடல் உதறியது.
அப்படியானால்... அப்படியானால்... அன்று நம் கணவர் சொன்ன தருணம் இன்று வந்துவிட்டதா..? ஏனெனில் சிவபெருமானிடம் போர்க் கலைகளைப் பயின்று சமீபத்தில்தான் ராம பத்திரன், பர்ணசாலைக்கு திரும்பியிருந்தார்.அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்த ரேணுகா தேவிக்கு தலைசுற்றியது.
தினமும் பிரும்ம முகூர்த்தத்தில் எழுந்து நர்மதை ஆற்றில் நீராடுவது ரேணுகா தேவியின் வழக்கம். குளித்து முடித்ததும் நர்மதை ஆற்றின் நதிக்கரையோர மணலினால் புதியதாக பானை செய்து, அதில் நதி நீரை நிரப்பி, ஆதவன் உதிப்பதற்குள் பர்ணசாலைக்கு செல்வாள். தியானம் முடித்த ஜமதக்னி முனிவர், அந்தப் பானை நீரால் அபிஷேகம் செய்யத் தொடங்குவார்.பல வருடங்களாகத் தொடரும் இந்த வழக்கம், இன்று தடைப்பட்டிருக்கிறது.
என்றும் போல் இன்றும் ரேணுகா தேவியால் பானை செய்ய முடியவில்லை. ஏன் என்று யோசித்தபோது, நதியில், தான் நீராடிய கணம் நிழலாடியது.பளிங்கு போன்ற நர்மதையின், அடியாழம் நட்சத்திர ஒளியிலும் துல்லியமாகத் தெரியும். அப்படி இன்று தெரிந்த நதியின் ஆழத்தில், கந்தர்வன் ஒருவனின் வதனம் பிரதிபலித்தது.
வானத்தில் பறந்து கொண்டிருந்தவனின் பிம்பம் அது. அப்பிம்பமே மன்மதனைப் போல் அழகாக இருக்கிறதே... என்று, ஒரு கணம், தான் நினைத்ததால்தான் இன்று பானை செய்ய முடியவில்லையா? ரேணுகா தேவிக்கு புரியவில்லை. எவ்வளவு முயன்றும் பானையை மட்டும் உருவாக்க முடியவில்லை.
கதிரவனின் கதிர்கள் தன் மேனியில் படத் தொடங்கியதும் கால்கள் துவள பர்ணசாலையை நோக்கி வெறும் கையுடன் ரேணுகா தேவி வந்தாள்.‘‘அங்கேயே நில்...’’ ஜமதக்னி முனிவரின் குரல் ஓங்கி ஒலித்தது. தன் ஞான திருஷ்டியால் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார் என்பது ரேணுகா தேவிக்கு புரிந்தது.‘‘இன்று அபிஷேகத்துக்குத் தேவையான நீரை உன்னால் கொண்டுவர முடியவில்லை.
காரணம், கணத்தில் பிறந்த சலனம்...’’ ஜமதக்னி கர்ஜித்தார்.தந்தையின் ஆவேசத்தைக் கண்டு ருமணவான், ஸஷேணன், வஸீ, விசுவாஸீ, ராம பத்திரன் எகிற பரசுராமர் ஆகிய ஐந்து பிள்ளைகளும் வெளியே வந்தார்கள்.வளர்ந்த பிள்ளைகள் முன்பு ரேணுகா தேவி கையறு நிலையில் நின்றாள். ‘‘என் அருமைச் செல்வங்களே! உங்கள் தாய் இன்று யுக தர்மத்தை மீறி விட்டாள். இனி அவளுக்கு இங்கு மட்டுமல்ல... எங்கும் இடமில்லை. தந்தைக்குத் தந்தையாக... குருவுக்கு குருவாக ஆணையிடுகிறேன்... உங்கள் தாயின் சிரசை வெட்டி எறியுங்கள்...’’ ஜமதக்னி முனிவரின் குரல் ஓங்கி ஒலித்தது.ருமணவான், ஸஷேணன், வஸீ ஆகிய மூவரும் மவுனமாக தலைகுனிந்தபடி பின்னால் நகர்ந்தார்கள்.
விசுவாஸீ, முன்னால் வந்தான். ‘‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்றாலும் தாயிற் சிறந்த கோயில் இல்லை. இதைக் கற்றுத் தந்தவர் நீங்கள்தான். இதை மீற மாட்டேன். தாயைக் கொல்வது பாவம். ஒருபோதும் அதை செய்ய மாட்டேன்...’’ என நெஞ்சை நிமிர்த்தி சொன்னான்.
‘‘என்னை எதிர்த்துப் பேசிய நீ... இந்த இடத்திலேயே எரிந்து சாம்பலாவாய்...’’ ஜமதக்னி முனிவர் சாபமிட்டார்.விசுவாஸீ, எரிந்து பஸ்மமானான்.‘‘தந்தையே... என்னை ஆசிர்வதியுங்கள்...’’ ஜமதக்னியின் பாதத்தைத் தொட்டு வணங்கிய ராம பத்திரன், மறுகணமே தன் கையிலிருந்த கோடரியால் தன் தாய் ரேணுகா தேவியின் தலையை வெட்டினான். ஜமதக்னி மகிழ்ந்தார். ‘‘மகனாக என் பேச்சைக் கேட்டாய்... குருவாக எனக்கு நான் விரும்பிய காணிக்கையை செலுத்தியிருக்கிறாய்... உனக்கு என்ன வேண்டும் கேள்...’’ ‘‘தந்தையே... என் தாய் மீண்டும் உயிருடன் எங்கள் அனைவருக்கும் அன்னையாக வர வேண்டும். தாய்க்காக உங்களை எதிர்த்த என் அண்ணன் விசுவாஸீ, சாம்பலில் இருந்து உயிர்த்தெழ வேண்டும்...’’ ராம பத்திரனின் குரல் நிதானமாக ஒலித்தது.ஜமதக்னி முனிவர் புன்னகைத்தார். ‘‘அவ்வண்ணமே ஆகட்டும்...’’ அருள்பாலித்தார்.வெட்டுப்பட்ட ரேணுகா தேவியின் சிரசு, மீண்டும் இணைந்தது. கண்விழித்தாள்.
சாம்பலான விசுவாஸீ, மீண்டும் ஆஜானுபாகுவாக, ரத்தமும் சதையுமாக உயிர் பெற்றான்.ஆனால், எரிந்த உடல் என்பதற்கு அடையாளமாக அவன் சருமம் கருமை நிறமாக காட்சியளித்தது.
‘‘சுவாமி...’’ ரேணுகா தேவி தழுதழுத்தாள்.‘‘தேவி... நீ எதுவும் சொல்ல வேண்டாம். எந்தப் பிழையும் நீ செய்யவில்லை. அப்படி நான் நினைக்கவும் இல்லை...’’ ‘‘அப்படியானால் எதற்காக தந்தையே ‘தாயை வெட்டும்படி’ ஆணையிட்டீர்கள்?’’ விசுவாஸீயின் குரல் கரகரத்தது.
‘‘உனது இந்த தோற்றத்துக்கான வேளை வந்துவிட்டது மகனே... பல வருடங்களுக்கு முன் உன் தாயிடம் இதை கோடிட்டு காட்டியிருக்கிறேன். அந்தத் தருணம் அரங்கேற வேண்டுமென்றால் இந்த நாடகம் நிகழ வேண்டும்...’’‘‘புரியவில்லை தந்தையே..?’’ ராம பத்திரன் பவ்யமாக வினா எழுப்பினான்.ஜமதக்னி முனிவர் சிரித்தார். ‘‘குழந்தாய்... மூன்று ராம அவதாரத்தில்... முதல் ராம அவதாரத்தின் ஜனனம் மட்டுமல்ல இன்று...
நம் தேசத்தின் பெண்களை எல்லாம் அன்னையாக மதித்து அவர்களுக்கு துன்பம் நேரும்போதெல்லாம் அரணாக இருந்து, காவலனாக காத்து நிற்கப் போகும் கருப்பனின் பிறப்பும் இன்றுதான்... இந்த முகூர்த்தத்தில்தான் நடந்தாக வேண்டும். அதன்படியே, ராம பத்திரனான நீ பரசுராமராக மாறினாய்... உன் அண்ணன், விசுவாஸீ, கருப்பண்ணசாமியாக உருவெடுத்திருக்கிறான்...’’
இமைகளை மூடித் திறந்த ஜமதக்னி முனிவர், தன் அன்பு மனைவியை ஏறிட்டார். ‘‘இல்லற கடமைகளை குறைவில்லாமல் நிறைவேற்றுகிறாய். அருமை வாய்ந்த பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாய். எனவே இனி நீ உலகுக்கே அன்னையாக, தாயாக, ரேணுகா அம்பாளாக, ரேணுகா அம்மனாக அருள்பாலிப்பாயாக. உன்னுடன் எப்பொழுதும் நானிருப்பேன்... துணையாக...’’ ஆசிர்வதித்தார்.
இப்படி மகாபாரதத்துக்கு முற்பட்ட காலத்திலேயே கருப்பண்ணசாமி ஜனித்துவிட்டார் என்கிறார்கள்.இருக்கட்டும். நம் கருப்பர் இப்படித்தான் தோன்றினாரா?
(கருப்பர் வருவார்)
- கே.என்.சிவராமன்
|