தல போல வருமா?!



இந்த வருடம் முழுக்கவே அஜித்தின் ஆண்டுதான்.திரைத்துறையில் இவரது நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ பாக்ஸ் ஆபீசை புரட்டிப் போட்டது என்றால், தனக்கு விருப்பமான கார் ரேஸிங்கில் சர்வதேச சாம்பியனாக முத்திரை பதித்து வருகிறார்.50 வயதுக்குப் பிறகு, தான் விரும்பும் துறையில் நுழைந்து சாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அதனாலேயே பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.

இவை எல்லாம் எதற்கு..? எங்களுக்குத்தான் தெரியுமே என்கிறீர்களா?

காரணமாகத்தான் இந்த இன்ட்ரோ.துபாய், இத்தாலி, பெல்ஜியம் நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் மூன்றாவது மற்றும் இரண்டாவது இடத்தை அஜித்குமார் ரேஸிங் அணி பிடித்தது நாம் அறிந்த செய்திதான். 
ஹார்ட்டின் விட்டு இதை பாராட்டித் தள்ளினோம்.இந்த ஈரம் அல்லது சூடு தணிவதற்குள் தற்போது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்த போட்டியிலும் அஜித் ரேஸிங் அணி மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது.
மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திய அஜித், அதே சந்தோஷத்துடன் ‘இந்தியா டுடே’ இணையதளத்துக்கு சின்னதாக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.‘‘என் மனைவி ஷாலினியோட ஆதரவு இல்லேன்னா இது எதுவுமே சாத்தியம் ஆகியிருக்காது. 

அவங்க பண்ண எல்லாத்தையும் என்னால பண்ண முடியுமான்னு தெரியலை. நான் வீட்டில் இல்லாதபோது குழந்தைகளை அவங்கதான் பார்த்துக்கறாங்க. சில தியாகங்களை எனக்காக அவங்க பண்றாங்க.

என்னை குழந்தைகள் எந்தளவுக்கு மிஸ் பண்றாங்களோ, அதே அளவுக்கு நானும் அவங்களை மிஸ் பண்றேன். உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை பண்றப்போ, இது போன்ற தியாகங்களை தவிர்க்க முடியாது...” என்று சொன்ன அஜித், 2002ம் ஆண்டு திருமணம் முடிந்த காலகட்டத்தில், தான் ரேஸில் கலந்துகொள்வதாகச் சொன்னபோதும் மனைவி ஆதரவாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.‘‘அப்போ இருந்து இப்போ வரைக்கும் என்னோட ரேஸிங் ஆர்வத்துக்கு அவங்க ஆதரவாக இருக்காங்க. 

இப்போ மகனுக்கும் இதுல ஆர்வம் வந்திருக்குது. உண்மையிலேயே அவருக்கு இதுல ஆர்வம் இருக்குதான்னு அவரை அவரே அறிய அவருக்கு அவகாசம் கொடுத்திருக்கேன். ஏன்னா பார்த்ததும் பிடிக்கும். சாதிக்கணும்னு தோணும். இதே எண்ணம் மாசக்கணக்குல நீடிச்சாதான் அது வருடக்கணக்கா கனலா எரிஞ்சுகிட்டு இருக்கும். அதனால அவரை நிதானமா யோசிச்சு சொல்லச் சொல்லியிருக்கேன். 

நடிப்பு, ரேஸ் உட்பட எதுவானாலும் என்னோட எண்ணங்களை குழந்தைகள் மேல திணிக்க நான் விரும்பமாட்டேன். அவங்களா முடிவெடுத்து எது பண்ணாலும், அதுக்கு நான் ஆதரவாக நிற்பேன்...” அஜித்குமாரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

குடும்பமாக வாழ்வது, குடும்பத்துடன் மகிழ்வது, தொழிலுக்கு முக்கியத்துவம் தரும் அதே நேரம் விரும்பும் துறையில் சாதனை புரியவும் மெனக்கெடுவது, மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தாலும் ‘நல்லா படிங்க... குடும்பத்தை பார்த்துக்குங்க... உங்களுக்குப் பிடிச்சதை பிடிச்சா மாதிரி செய்யுங்க... 

நான் உட்பட எந்த நடிகர் பின்னாடியும் சுத்தாதீங்க...’ என அட்வைஸ் செய்வது...என அஜித்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இன்று பேசு பொருளாகியிருக்கிறது. ‘நடிகர் என்றால் சுயநலத்துக்காக தன் ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ளாமல் அஜித்தைப் போல் இருக்க வேண்டும்...’ என நெட்டிசன்ஸ் கையைத் தட்டுகிறார்கள்.தல... நீங்க கலக்குங்க!

ஜேக் சிவா