ஹேய் நெஞ்சாத்தியே !



மலையாளம், கன்னடம் என ‘யு-டர்னில்’ சுற்றிக்கொண்டிருந்த காஷ்மீர் ஆழகி. சட்டென ‘காற்று வெளியிடை’ மூலம் தமிழ்ப் பக்கம் வீசத் தொடங்கி, ‘விக்ரம் வேதா’, ‘இவன் தந்திரன்’ என தமிழிலும் பிஸியாகி தமிழ் நெஞ்சங்களை ‘ஹேய் நெஞ்சாத்தியே... நீதானடி’ (‘விக்ரம் வேதா’ - யாஞ்சி பாடல்) என உருக வைத்து ‘நேர் கொண்ட பார்வை’, ‘கலியுகம்’ போன்ற தில்லான பாத்திரங்கள், படங்கள் என தனித்துவமான இடம் பிடித்த நடிகையாக மாறியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.  

வித்யாசமான கதாபாத்திரங்களைத்தான் தேர்வு செய்யணும் என ஏதும் தீர்மானமா இருக்கீங்களா?

வெளிப்படையா சொல்லணும்னா... ஆமா. எனக்கு இந்த டூயட் பாடிகிட்டு, சும்மா கலர்ஃபுல் கண்காட்சிக்காக படம் செய்யக் கூடாது. குறிப்பா என்னை வெறுமனே ஹீரோயின் மெட்டீரியலா பார்க்கக் கூடாது. பார்த்ததும் என் கதாபாத்திரங்கள் நினைவு வரணும். 

‘The Game: You Never Play Alone ’..?

புது வெப் சீரீஸ்! என் கேரக்டர் ரொம்ப வித்யாசமா இருந்துச்சு. கேம் கிரியேட்டரா, டெக்கி கேர்ள் ரோல்ல நடிச்சதில்ல. மேலும் ராஜேஷ் எம் செல்வா, கமல் சாருடைய ஆஸ்தான சீடர். அவர் புராஜெக்ட் என்றதும் உடனே ஓகே சொல்லிட்டேன். 
கதை என்னை சுத்திதான் பயணிக்கும். இன்னமும் பெண்கள் பெரிதா வேலை செய்யாத சில துறைகள் இருக்கு. அதிலே மொபைல் கேம், வீடியோ கேம் துறையும் ஒண்ணு. ஏன்... ஆண்கள் விளையாடுகிற சில கேம்ஸை பெண்கள் அதிகம் விளையாட மாட்டாங்க. கேமர் கேர்ள் பொண்ணுங்க குறைவு. 

இங்க ஒரு பொண்ணு சக்ஸஸானா இந்த ஆண் உலகம் என்ன செய்யும் என்பதுதான் கதை. சந்தோஷ் பிரதாப், நல்ல டேலன்டான ஆர்டிஸ்ட். அருகே யார் இருந்தாலும் நம்மை பார்க்க விடாம ஸ்கோர் செய்துடுவார். டீமாகவே நிறைய ஜாலியான மொமெண்ட்ஸ் இருந்துச்சு. 

நீங்க கேம் விளையாடுவதுண்டா?

வன்முறையான கேம்ஸ் ஒண்ணு ரெண்டு ஆரம்பிச்சிட்டு விட்டுட்டேன். ஆனா, இந்த கேம்தான்னு இல்லாம அப்பப்ப எதாவது ஒரு கேம் இன்ஸ்டால் செய்து விளையாடுவேன். குறிப்பா மூளைக்கு வேலைகொடுக்கற புதிர் விளையாட்டுகள் ரொம்பப் பிடிக்கும். 

வழக்கறிஞர் பின்னணி சினிமாவில் உதவியாக இருக்கிறதா?

என்னுடைய அக்ரிமெண்ட் பேப்பர்களை நானே ஒரு பாயிண்ட் விடாம படிச்சிடுவேன்! கொஞ்சம் ஸ்ட்ரிக்டா பாயிண்ட்ஸ் வைப்பேன். கதைகள் சொல்ல வருகிற இயக்குநர்களிடம் லாஜிக் கூட கேட்டிருக்கேன். 

நான் கேட்ட லாஜிக் கேள்விகள் காரணமாக சில காட்சிகள் கூட படங்களில் மாறியிருக்கு. கிசுகிசு, சர்ச்சைகள்ல சிக்காத காரணமும் அதுவே. எனக்கான உலகத்தை நானே உருவாக்கி, அதற்குள் இருப்பேன். பெரிதா ஃப்ரண்ட்ஸ் கேங் கிடையாது. ஷூட்டிங் முடிஞ்சா வீடு, எனக்குன்னு இருக்க ஒருசில நண்பர்கள் அவ்வளவுதான். 

சட்டம் படித்தவராக உங்கள் பார்வையில் பெண்ணியம், பெண் சுதந்திரம் என்றால் என்ன?

முன்பெல்லாம் என்னுடைய பாட்டி, அம்மா காலம் வரையிலுமே எல்லா இடங்களிலும் பெண்கள் சகிச்சுக்கிட்டு வாழ்ந்தாங்க. இன்னைக்கு வாயைத் திறந்து பேசத் தொடங்கிட்டாங்க.
குறைந்தபட்சமா ‘நோ’ சொல்கிற அளவுக்கு பெண்கள் மாற்றம் அடைஞ்சிருக்காங்க. சந்தோஷமாதான் இருக்கு. இந்த ‘நோ’ ஏன் சொல்றாங்கன்னு முழுமையா ஆண்களும், குடும்பங்களும் புரிஞ்சுக்கும் போது பெரிய அளவில் மாற்றங்களும், சமநிலையும் உண்டாகும். 

பெண்கள் படிக்கணும். அப்பதான் அவர்களுடைய உரிமை என்னன்னு புரியும். எல்லா துறையிலும் முதலில் ஆண் - பெண் சமமான உழைப்புக்கான ஊதியம் கிடைக்கணும். கல்வி, வேலை, சம்பளம் இதில் எல்லாம் சமமான நிலை உருவாக்குவதுதான் பெண்ணியம்.

பொதுவாகவே உங்கள் பாத்திரங்களில் தனித்துவம் மீறிய ஒரு தைரியமும் இருப்பதன் நோக்கம் என்ன? 

நானே அப்படியான கேரக்டர்கள்தான் தேர்வு செய்யறேன். குறிப்பா என்னை பொது இடத்தில் யாரும் அடையாளம் கண்டுபிடிக்கக் கூடாது என்பதில் தெளிவா இருக்கேன். மூக்கில் வளையம், பொட்டு, காட்டன் புடவை... எல்லாம் இருந்தால்தான் வக்கீல் பிரியா விக்ரம் (‘விக்ரம் வேதா’). அப்படி நான் நடிக்கிற கேரக்டர்களில் ஷ்ரத்தா தெரியவே கூடாது, அந்தக் கேரக்டர்கள்தான் தெரியணும். 

என்னை ஆச்சர்யப்படுத்தி உட்கார வைக்கும் அளவுக்கு கதை சொன்னால் உடனே ஓகே சொல்லிடுவேன். மேலும் டீம், அவர்களின் ஆர்வம், இதெல்லாம் முக்கியம். 
பொதுவாக எந்தக் குணம் ஓர் ஆணிடம் இருக்கக் கூடாதென நினைக்கிறீர்கள்?

பெண்ணியவாதியாகவும் இருக்கக் கூடாது, பெண்ணியவாதத்தை புரிஞ்சிக்காத மனுஷனாகவும் இருக்கக் கூடாது. ஏமாற்றக் கூடாது, ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவராக இருக்கவே கூடாது. காரணம், தன்னைப் பற்றிய அக்கறையே இல்லாதவர் எப்படி மத்தவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். 

அடுத்தடுத்து உங்கள் படங்கள்..?

தமிழில் விஷ்ணு விஷால் கூட ‘ஆர்யன்’, ரவி மோகன் கூட ‘புரோ கோட்’. கன்னடத்தில் ‘ருத்ரபிரயாக்’. இப்ப ‘த கேம்’ வெப் சீரீஸ் ரிலீஸாகி நல்ல விமர்சனங்கள் கிடைச்சிருக்கு.l

ஷாலினி நியூட்டன்