உலகில் பத்தில் ஒரு குழந்தை குண்டாக இருக்கிறது!
ஐநா சபை எச்சரிக்கை
ஒருகாலத்தில் எத்தியோப்பிய நாடு பற்றி தொலைக்காட்சிகளில் அடிக்கடி செய்திகள் வரும். எல்லாமே பசி, பஞ்சம், பட்டினி குறித்த செய்திகள். ஆனால், இன்று பட்டினியினால் பாதிக்கப்படும் நாடுகளில் உள்ள குழந்தைகள்கூட ‘ஒபிசிட்டி’ எனும் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கிறது அண்மையில் வெளிவந்த ஐநா சபையின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப்பின் அறிக்கை.
 உலக குழந்தைகள் தொடர்பாக யுனிசெஃப் அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும். அப்படி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை பல நாடுகளில் உள்ள பெற்றோரையும், ஆட்சியாளர்களையும் அதிர வைத்திருக்கிறது.
 அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
யுனிசெஃப் அமைப்பானது சுமார் 190 நாடுகளில் உள்ள குழந்தைகளை இந்தமுறை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. அந்தக் குழந்தைகளின் வயதையும் 5 முதல் அடலசன்ஸ் எனப்படும் 19 வயது வரை என நிர்ணயித்துக்கொண்டது. இந்த வயதினரின் உடல்பருமனை ஆய்வு செய்தபோதுதான் அந்த அமைப்புக்கு அதிர்ச்சியான பல முடிவுகள் தெரியவந்தன.அதாவது உலகளவில் சுமார் 10 குழந்தைகளில் ஒரு குழந்தை உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறது.
இதை கடந்த பல வருடத்திலான கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டபோதுதான், இந்த ஆண்டு பட்டினியைவிட பல நாடுகளில் போதுமான உணவு கிடைத்தாலும் அந்த உணவும் ஊட்டச்சத்தில்லாத சக்கையான உணவாக இருப்பதால் குழந்தைகளும் சிறார்களும் உடல்பருமன் எனும் பிரச்னைக்கு உள்ளாகி இருப்பதாக அலாரம் அடித்திருக்கிறது.இது எதிர்காலத்தில் பல்வேறு விதமான நோய்களுக்குக் காரணமாகிடும் எனவும் எச்சரித்திருக்கிறது.
சரி. உடல்பருமன் கடந்தகாலங்களில் எப்படி இருந்தது?
2000ம் ஆண்டுகளில் பட்டினியாலும், அதனால் கிடைக்காத ஊட்டச்சத்தாலும் ‘அண்டர்வெயிட்’ எனப்படும் குறை எடையால் பல நாடுகளில் உள்ள குழந்தைகள் பிரச்னைக்குள்ளானார்கள்.
இதற்குச் சரியான உதாரணம் எத்தியோப்பிய குழந்தைகள். ஆனாலும் உலகளவிலும் இந்த பட்டினி பிரச்னை இருந்தது. உதாரணமாக 2000ம் ஆண்டுகளில் பட்டினி பிரச்னை உலகளவிலான குழந்தைகளில் சுமார் 13 சதவீதம் இருந்தது. அதேபோல இந்தக் காலங்களில் உடல்பருமனும் கட்டுக்குள் இருந்தது. ஆம். இந்தக் காலத்தில் உடல்பருமனின் சதவீதம் வெறும் 11தான்.
இன்று உலகளவில் பட்டினியால் வாடும் குழந்தைகள் மற்றும் சிறாரின் சதவீதம் 9.2. ஆனால், உடல்பருமன் 9.4 சதவீதம். அதாவது சரிக்குச் சமமாக இருக்கிறது.
இதுதான் பட்டினியையும் தாண்டி உலகளவில் உடல்பருமன் என்பது குழந்தைகளை, சிறாரை விரைவில் பீடிக்கப்போகும் அபாய நோய் என்று எச்சரிக்கிறது யுனிசெஃப் நிறுவனம்.
இந்த உடல்பருமனும், எடைக் குறைவு பிரச்னையும் நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்கு பிரதேசம் மாறுபாட்டுடன் இருப்பதாகவும் யுனிசெஃப் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது. ஒருகாலத்தில் பணக்கார நாடுகளில்தான் உடல்பருமன் பிரச்னை கொடிகட்டிப் பறந்தது. இதை வைத்து யுனிசெஃப்பும் பணம், செல்வம் அடிப்படையில் நாடுகளைப் பிரித்து உடல்பருமனை இந்தமுறை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.
உதாரணமாக செல்வத்தின் உச்சியில் இருக்கும் நாடுகளை உயர் வருமானமுள்ள நாடுகள் என வகைப்படுத்தியது. இடையில் உள்ள நாடுகளை ‘மிடில்’ எனும் அடிப்படையில் நடுத்தர நாடுகள் என வகைப்படுத்தியது.
கடைசியாக ‘லோயர்’ எனும் அடிப்படையில் கீழ்மட்டத்தில் உள்ளவற்றை ஏழை நாடுகள் என வகைப்படுத்தியது. முன்பே குறிப்பிட்டபடி உயர் வருமான நாடுகளில்தான் ஆரம்பத்தில் உடல்பருமன் ஒரு சிக்கலாக உருவெடுத்தது. ஏழை நாடுகளில் பட்டினியால் குறை எடையுள்ள குழந்தைகளே பிரச்னையானார்கள்.
ஆனால், இன்று இது எல்லாமே தலைகீழாக மாறியிருக்கிறது. உதாரணமாக பசிபிக் ஓஷன் எனும் தீவுகள் நிறைந்த ஏழை நாடுகள் பலவற்றில் இன்று உடல்பருமன் 33 சதவீதத்திலிருந்து சுமார் 38 சதவீதம் வரை உச்சாணிக்கொம்பில் இருப்பதாக சொல்கிறது யுனிசெஃப்.
ஆனால், பணக்கார நாடான அமெரிக்காவில் ஒருகாலத்தில் கோலோச்சிய உடல்பருமன் இன்று வெறும் 21 சதவீதமாகவும், அதே வகைக்குள் வரும் சிலி நாட்டில் 27 சதவீதமும், ஐக்கிய அரேபிய அமீரகத்தில் 21 சதவீதமாகவும் குறைந்திருக்க... இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இந்தப் பிரச்னை உச்சத்தில் இருப்பதாகவும் ஆய்வு சொல்கிறது. ஆசியாவும், அதில் அடங்கும் இந்தியாவும் எந்த நிலையில் இருக்கிறது?
ஆசியாவில், அதுவும் இந்தியா உட்பட்ட தென் ஆசியாவில் உடல்பருமன் 2000ம் ஆண்டைவிட 5 மடங்கு அதிகரித்திருப்பதாக ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறது யுனிசெஃப் ஆய்வு.
ஆசிய, தென் ஆசிய நாடுகளில் பல நடுத்தர மற்றும் குறைந்த வருமானமுள்ள நாடுகள் பட்டியலில் வருகின்றன. இதுபோன்று இரண்டு பிரிவுக்குள்ளும் வரும் நாடுகளில் இரண்டு பிரச்னைகள் கோலோச்சுகிறது. ஒன்று அண்டர்வெயிட் எனப்படும் குறைந்தளவு எடையுள்ள குழந்தைகள். மற்றது உடல்பருமன்.
இந்த நாடுகளில் ஏற்றத்தாழ்வான சமூகங்களே நிலவுகின்றன. உதாரணமாக வசதியுள்ள குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றால் ஏழைக் குழந்தைகள் தொழில்களில் ஈடுபடுவார்கள். பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு உடல்பருமன் பிரச்னை என்றால் ஏழைக் குழந்தைகளுக்கு எடைப் பிரச்னை வரும்.
இதனால்தான் நடுத்தர மற்றும் குறை வருமானமுள்ள நாடுகளில் இரண்டு பிரச்னைகளுமே தீர்க்கப்படாமல் இருக்கின்றன. ஆனாலும் உடல்பருமன் பிரச்னை இந்த நாடுகளில் எடைப் பிரச்னையைவிடவும் அதிகரித்துக்கொண்டே போவதைத்தான் யுனிசெஃப்பின் அண்மைய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஏழைக் குழந்தைகளோ பணக்காரக் குழந்தைகளோ... உணவு கிடைப்பதில் சிக்கல் எல்லாம் இல்லை. கிடைக்கும் உணவுகள் சத்தில்லாத உணவுகள் என்பதுதான் பிரச்னை. இதுதான் உடல்பருமனையும் அதிகப்படுத்தியிருக்கிறது. இதுதான் ஆசியா என்றில்லாமல் உலகளவில் உடல்பருமன் எனும் வில்லனை இந்த ஆண்டு முதல் அதிகப்படுத்தியிருக்கிறது.
அதுவும் இந்தியாவையும் உள்ளடக்கிய நடுத்தர மற்றும் ஏழை நாடுகளில் இந்தப் பிரச்னை எதிர்காலத்தில் பெரிதாக உருவெடுக்கும் எனவும் யுனிசெஃப் எச்சரிக்கிறது.
உதாரணமாக அமெரிக்காவில் உடல்பருமனின் சதவீதம் 21 என இருந்தால் இந்தியா உட்பட்ட தென் ஆசியாவில் இது 30 சதவீதமாக இருப்பதே இதற்கு சான்று என கண்டிக்கிறது.
இந்நிலையில் குப்பை உணவு எனும் ஜங்க் ஃபுட் குறித்து ‘மோகன் டயாபட்டிஸ் சென்ட’ரின் ஊட்டச்சத்து நிபுணரான தங்கமணியிடம் பேசினோம். ‘‘உணவில் உள்ள ஊட்டச்சத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ‘மேக்ரோ நியூட்ரியண்ட்’ எனப்படும் அதிகளவிலான ஊட்டச்சத்து, இரண்டாவது ‘மைக்ரோ நியூட்ரியண்ட்’ எனப்படும் நுண் ஊட்டச்சத்து.
முதல் வகை ஊட்டச்சத்தில் கார்போ ஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து, ப்ரோட்டீன் மற்றும் கொழுப்பை சொல்லலாம். இரண்டாவது வகையில் வருவது வைட்டமின், மினரல் மற்றும் இன்னபிற ஊட்டச்சத்துகள்.
இந்த இரண்டு உணவுகளிலும் அதிகளவில் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது அதை சமைக்கும் முறையில் ஏற்படும் குறைபாடுகள்தான் உடல்பருமனை ஏற்படுத்துகிறது...’’ என்று சொல்லும் தங்கமணி அதையும் விளக்கினார்.
‘‘பொதுவாக சமைத்து உண்ணும் எல்லா உணவுகளிலுமே அதிகளவிலான ஊட்டச்சத்து இருக்கும். இந்த அதிகளவிலான ஊட்டச்சத்திலுமே ஒவ்வொன்றிலும் அது கொடுக்கும் கலோரிகளில் வித்தியாசம் இருக்கும். கலோரி என்பதை நாம் எனர்ஜி என்று எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு நாளில் எவ்வளவு கலோரி தேவை என்பது பற்றி எல்லாம் பலருக்கும் தெரியும்.
பழங்களில் ஊட்டச்சத்தைவிட அதிகளவிலான வைட்டமின், மினரல் போன்ற நுண் ஊட்டச்சத்துகள் இருப்பதை பலரும் அறிவார்கள்.
ஆனால், சமைத்து உண்ணும் அதிகளவிலான ஊட்டச்சத்தில் பிரச்னை ஏற்படும்போதுதான் நமக்கு உடல்பருமன் எனும் சிக்கல் ஏற்படுகிறது. உதாரணமாக சமைத்து உண்ணும் உணவுகளில் ஒரு கிராம் மாவுச்சத்து உணவில் 4 கலோரி இருக்கும்.
ஒரு கிராம் புரோட்டீனில் 4 கலோரி இருக்கும். ஆனால், கொழுப்பில் 9 கிராம் கலோரி இருக்கும். சமைக்கும் உணவுகளை வீட்டில் அவித்து அல்லது குழம்பாக்கி சாப்பிட்டால் இந்தக் கலோரிகளில் பெரிய மாற்றம் இருக்காது.
ஆனால் ‘டீப்’ ஃப்ரை எனும் வகையில் நன்றாகக் கொதிக்க வைப்பதும், அதில் நிறங்கள் கெடாமல் இருக்க இரசாயனங்களை கலக்கும்போதும்தான் பிரச்னை உண்டாகும்...’’ எனச் சொல்லும் தங்கமணி அதையும் விவரித்தார்.‘‘கடையில் விற்கும் பாக்கெட் உணவு, ஃபாஸ்ட் ஃபுட் அல்லது பொரித்த உணவுகளில் கலோரி அதிகமாக மாறக்கூடிய சூழல் உருவாகிறது.
உதாரணமாக எண்ணெயில், அதுவும் ஒரே எண்ணெயில் தொடர்ச்சியாக உணவுகளை நீண்ட நேரம் வறுக்கும்போது அதிலிருக்கும் மாவுச்சத்திலும், புரோட்டீனிலும் பெரிய மாற்றம் ஏற்படாது.
ஆனால், அதில் இருக்கும் கொழுப்பானது பெரியளவில் மாற்றமடையும். உதாரணமாக முன்பு பார்த்தமாதிரி வீட்டில் உணவு சமைத்தால் கொழுப்பில் இருந்து கிடைக்கும் கலோரியின் அளவு வெறும் 9 சதவீதமாகத்தான் இருக்கும். ஆனால், டீப் ஃப்ரை செய்யும்போது அது 5 மடங்காக உயரும்.
வீட்டில் உருளைக் கிழங்கை வேக வைத்தால் 100 கிராம் கொழுப்பில் 93 கிராம் கலோரிதான் இருக்கும். ஆனால், சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் உருளைக் கிழங்கு சிப்ஸில் - அது டீப் ஃப்ரை செய்யப்படுவதால் கொழுப்பும், எண்ணெயும் சேர்ந்து சுமார் 536 கலோரியாக மாறும். இந்த அதிகபட்சமான கலோரியை நாம் உடலிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றால் நிச்சயம் உடல் உழைப்பைச் செலுத்த வேண்டும். அல்லது ஏதாவது ஒரு விளையாட்டை ஆட வேண்டும். அப்பொழுதுதான் அந்த கலோரி எரிசக்தியாக மாறும்; உடல்பருமன் ஏற்படாமல் இருக்கும். இந்தியா போன்ற நாட்டில் உணவுகளுக்கு கட்டுப்பாடு வராதவரை இந்தப் பிரச்னை நீடிக்கும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் தங்கமணி.
டி.ரஞ்சித்
|