தீபாவளி மார்க்கெட்!



வகை வகையாக, ரகம் ரகமாக புது வரவுகள்... என்ன வாங்கலாம்... எது புதுசு... ஒரு ஸ்வீட் கைடு!

உடைகள்

கடந்த சில வருடங்களாகவே சுலபமாக மக்கும் துணிகளுக்கு அல்லது நிலைத்தன்மை கொண்ட துணிகளுக்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கிறார்கள். காட்டன், லினன், மல்மல் போன்ற துணிகளில் உடைகள் டிசைன் செய்து கொள்வது அல்லது வாங்குவது அதிகரித்திருக்கிறது. 
எதிலும் மினிமலிசம் என்கிற எண்ணமும் அதிகரித்திருப்பதால் காஸ்மெட்டிக்ஸ் முதல் காஸ்ட்யூம்ஸ் வரை அத்தனையும் ராயல் ப்ளஸ் சிம்பிள் என மாறியிருக்கிறது. அதனால் பெண்கள் அதிகமாகவே காட்டன் அல்லது லினன் புடவைகள், கலம்காரி லெகங்காக்கள் என வாங்கத் துவங்கியிருக்கிறார்கள். 

அடுத்து ஜெமினி AI வரை ஆர்கான்சா புடவைகள் மற்றும் சிஃபான் துணிகள் வைரலாகி வருகின்றன. இதேபோல் அதிகம் கனமில்லாத ஆடைகள்தான் இளைஞர்களின் சாய்ஸ். 
கனமும் இருக்கக் கூடாது அதிகம் மெனக்கெடவும் கூடாது என்கிறதாலேயே ஒன் மினிட் புடவைகள், கவுன் புடவைகள், பிரீ-ப்லிட்டட் புடவைகள், காஃப்தான் புடவைகள், வெல்க்ரோ வேஷ்டிகள் என டிரெண்டிங்கில் உள்ளன.

பெய்ஜ், பீச் போன்ற லைட் நிறங்கள் ஏற்கனவே வழக்கத்தில் இருந்தாலும் சமூக வலைத்தளத்தின் தாக்கத்தால் அடர் சிவப்பு, ராயல் ப்ளூ, பச்சை போன்ற பளிச் நிறங்களும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஓவர் சைஸ்டு உடைகளும் 2K இளசுகளிடம் ஃபேவரைட் சாய்ஸ் ரகமாக உள்ளன. கிராப்ட் பான்டுகள், மினி பிளார்டு பேன்ட், ஆன்கிள் பாட்டம்கள், ஜாக்கர் பாட்டம்வேர்களும் இந்த வருட டிரெண்ட். 

ஆண்களுக்கும் செட் வேஷ்டி, கிராப் பேன்ட், ‘சைமன்’ (‘கூலி’ நாகார்ஜுனா) பெல்ட் பேன்ட் சூட், ஓவர்சைஸ் டீ சர்ட்கள் ஆகியவை இந்த வருடம் டிரெண்ட்தான்.குழந்தைகளை அதிகம் கோ-ஆர்ட் உடைகளில்தான் பார்க்க முடிகிறது. பெரியவர்களிடமும் பழக்கத்தில் கோ-ஆர்ட் அதிகமாகி இருக்கிறது. அதாவது காட்டனில் மேலே கீழே எந்த உடையானாலும் ஒரே டிசைன் ஒரே நிறம். இதில் டிசைன் மற்றும் கலர் சாய்ஸ்களும் ஏராளமாக உள்ளன. 

பெரியவர்களை விடவும் குழந்தைகளுக்கு அதிகம் ஆர்கானிக் துணிகளை பயன்படுத்த பொதுமக்கள் விரும்புவதால் இந்த கோ-ஆர்ட் உடைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 
இவை மட்டுமின்றி எலாஸ்டிக் பேன்ட்கள், ரோப் பேன்ட் என குழந்தைகளின் உடலை உறுத்தாத உடைகளும் தீபாவளிக்கு மார்க்கெட்டில் அதிகம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 
ப்ரோகேட், சிஃபான், ஜியார்ஜெட், மெட்டாலிக், சாட்டின், லினன், மல்லு காட்டன், ஆர்கான்சா உள்ளிட்ட மெட்டீரியல்கள் அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன. 

பாலிஸ்டர், பூனம் போன்ற மெட்டீரியல்கள் பயன்பாடு முழுமையாகவே குறைந்துவிட்டது. கடவுள் சார்ந்த அல்லது கட்டடக்கலை சார்ந்த அச்சுகள் அடங்கிய டிசைன்களில் புடவைகளையும் உடைகளையும் அதிகம் இந்த வருடம் பார்க்க முடிகிறது. குறிப்பாக கோயில்களை அடிப்படையாகக் கொண்ட டிசைன்களை இந்த வருடம் பட்டுப் புடவைகளில் அதிகம் காண முடிகிறது.

நகைகள்

நகைகளிலும் அதிகம் கட்டடக்கலை களை எடுத்துரைக்கும் வகையிலான கோயில்கள், கடவுள்கள் சார்ந்த நகைகள் இந்த வருடம் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக கிருஷ்ணர், ராமர், சிவன் உள்ளிட்ட கடவுள்களின் அடிப்படையிலான நகை டிசைன் இந்த வருடம் எல்லா பிராண்ட் நகைகளிலும் பார்க்க முடிகிறது.

இவை தவிர லைட் வெயிட் நகைகள் கடந்த ஓரிரு வருடங்களாகவே டிரெண்டிங்கில் உள்ளன. ரோஸ் கோல்ட், ஒயிட் கோல்டு நகைகள் இளைஞர்களின் சாய்ஸ் ரகமாக விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டிருக்கின்றன.

காலணிகள் / பைகள்

வழக்கமான விழாக்கால கிராண்ட் காலணிகள், பிளாட் காலணிகள், சாண்டல்கள் வாங்கப்பட்டாலும் கால்களை உறுத்தாத கிராக்ஸ் ரக காலணிகள்தான் இந்த வருடம் இளைஞர்களின் ஃபேவரைட் சாய்ஸ். அதிலும் காலை முழுமையாக கவர் செய்த ஷூ பாணி செப்பல்களும், இந்த வருடம் அதிகம் வாங்கப்பட்டிருக்கின்றன. 

பிராண்ட் ஹேண்ட் பேக், பேக் பேக் வகைகளுக்கு பெண்களும், ஆண்களும் டிக் அடிக்கிறார்கள். காரணம், எங்கு சென்றாலும் காலணிகளையும் கையில் இருக்கும் பைகளையும்தான் பார்க்கிறார்கள் என்பதாலேயே இவற்றின் விலை அதிகமாக இருந்தாலும் பிராண்ட் நீண்ட நாட்கள் உழைக்கும் என்பதாலேயே இதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் ரோஷன், அடிடாஸ், நைக், பியூமா உள்ளிட்ட பிராண்டுகள் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேஷுவல் காலணிகள் மற்றும் பைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

ஆட்டோமொபைல் மற்றும் டெக்னாலஜி

வரிச்சலுகை கொடுத்திருப்பதன் விளைவாக ஸ்கூட்டி உள்ளிட்ட இலகு ரக பயன்பாட்டு வாகனங்களுக்கு இப்பொழுது கணிசமாக விலை குறைந்திருக்கிறது. 
புதிய ரக கார்களும் பல்வேறு நிறுவனங்களின் வழியாக இந்த வருட தீபாவளியை ஒட்டி அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மட்டுமல்ல... EV கார்கள் மற்றும் டூவீலர்கள் அதிகமாகவே இந்த வருடம் மார்க்கெட்டிற்கு வந்திருக்கின்றன. அதன் விற்பனையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. 

மொபைல்களில் ஐபோன் 17 சீரிஸ், சாம்சங் கேலக்ஸி எக்ஸ்25 அல்ட்ரா, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7, மோட்டோரோலா ஜி96, ஒன் ப்ளஸ் 13 சீரிஸ், நத்திங் போன் 3, ஸியோமி 15 உள்ளிட்ட மொபைல்களும் இந்த வருட தீபாவளிக்கு புது வரவுகள்.பொழுதுபோக்குடன் இணைந்து ஆரோக்கியமும் முக்கியத்துவம் பெற்றிருப்பதால் ஸ்மார்ட் வாட்ச்சுகள் கடந்த இரண்டு வருடங்களாக அதிக அப்டேட்டை சந்தித்து வருகின்றன. 

அதேபோல் டிராவல், டீம் ட்ரிப் இதுவும் அதிகரித்திருப்பதால் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், வாய்ஸ் அடிப்படையிலான ஏஐ அசிஸ்டெண்ட் கருவிகள் ஏராளமான அப்டேட்டுகளுடன் இந்த வருடம் மார்க்கெட்டிற்கு வந்திருக்கின்றன.

வீட்டு உபயோகப் பொருட்கள் 

‘ஆயில் குறைந்தால் ஆயுள் அதிகரிக்கும’ என்கிற நோக்கத்தில் அதிகம் எண்ணெய் பயன்படுத்தாமல் சமைக்க உதவும் ஏர் ஃப்ரையர், ஓடிஜி போன்றவை இந்த வருடம் அதிகமான விற்பனையை சந்தித்திருக்கின்றன.இவற்றில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அப்டேட் ரகங்களும் காண முடிகிறது. இன்வர்ட்டர் சப்போர்ட் செய்யும் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் உள்ளிட்டவைகளும் அதிகமாகவே இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

பெருகி விட்ட ஃபுட் விலோக் வீடியோக்கள், ஸ்மார்ட் ஹோம், ஸ்மார்ட் கிச்சன் டிரெண்ட் அதிகரித்திருக்கின்றன. உடன் வேலையை குறைக்கும் வீட்டு உபயோக பொருட்களும், குறிப்பாக மின்சாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களும் இந்த வருடம் அதிக மக்களால் வாங்கப்பட்டு வருகின்றன. 

ஏசி குளிர்விக்கும் அளவீட்டில் 16 டிகிரி வரையிலும் மட்டுமே இதற்கு முன்பு இருந்த நிலையில், துபாய் பாணி 12 டிகிரி குளிர்விக்கும் ஏசி மார்க்கெட்டில் புதிதாக களமிறங்கி இருக்கின்றது. 

பெண்கள் அதிகமாகவே வேலைக்குச் செல்லத் துவங்கியிருப்பதால் அவர்களுக்கான ஹேர் ஸ்டைலிங் கருவிகள், ஹேர் டிரையர்கள், ஆண்களுக்கான ட்ரிம்மர்கள் உள்ளிட்டவையும் அதிக விற்பனையை சந்தித்திருக்கின்றன. 

ஆன்லைன் சலுகைகள் / ஆஃபர்கள்

நியர் மீ, கூப்பன் குருஜி, மேஜிக் பின் போன்ற செயலிகளை ஆன்லைன் ஷாப்பிங்கின் போது பயன்படுத்துங்கள். இவை ஆன்லைன் ஷாப்பிங்குகள் கொடுக்கும் சலுகைகளைத் தாண்டி மேலும் சில கூப்பன்களையும் சலுகை விலைகளையும் கொடுக்கும்.

 குறிப்பாக மேஜிக் பின், நியர் மீ உள்ளிட்ட செயலிகள் உங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் பொருட்கள், உடைகள் வாங்கும் பொழுது அதில் இருக்கும் சலுகைகள் மற்றும் ஆஃபர்களையும் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன்களாகக் கொடுக்கும். 

இந்தச் செயலியிலேயே பணம் கட்டலாம். அதன் மூலமும் ஒரு சிறு தொகை சலுகை விலையாக கிடைக்கும் வசதிகளும் உள்ளன. இவைகளைத் தாண்டி கிரெடிட் கார்டுகளுக்கான சலுகைகள், வங்கி கொடுக்கும் சலுகைகள், UPI போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சலுகைகளும் இந்த வருடம் அதிகமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. 

அமேசான், ஃப்ளிப்கார்ட், மைன்ட்ரா, மீஷோ, நைகா, அஜியோ உள்ளிட்டவைதான் ஆன்லைன் ஷாப்பிங் வசதியில் நம்பகத்தன்மையுடன் இருக்கின்றன. குறிப்பாக கேன்சல் மற்றும் ரிட்டன் வசதிகள் இவைகளில் சுலபமாக இருக்கின்றன.  

ஷாலினி நியூட்டன்