கமல் முதல் துல்கர் வரை... தயாரிப்பில் கலக்கும் கதாநாயகர்கள்!



சத்யராஜ் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியானது ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ திரைப்படம். அங்கே துவங்கியது, வேறு நடிகர்கள் நடிக்க அந்தப் படத்தை இன்னொரு ஹீரோ தயாரித்து மெகா ஹிட் கொடுக்கும் வழக்கம். 
அதற்கு முன்பு ஹீரோக்கள் படங்களை தயாரிக்கும் பணியை செய்தாலும் அது அவர்கள் நடிப்பில் வெளியாகும் படமாகவே இருந்தன. உதாரணத்திற்கு எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். 

ஆனால், கமல்ஹாசன் ஒருவர்தான் தன் தயாரிப்பில் பிற நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் வழக்கத்தை தமிழ் சினிமாவில் முதலில் துவக்கினார். ஆரம்பத்தில் கமலும், தான் நடிக்கும் படங்களைத்தான் தயாரித்தார். ஒருகட்டத்துக்குப் பிறகு ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘மகளிர் மட்டும்’, ‘நளதமயந்தி’ முதல் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ வரை மற்ற நடிகர்களின் நடிப்பில் படங்களைத் தயாரித்தார்.
இப்படி மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களைத் தயாரிக்கும் ஹீரோக்கள் ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தனர். இன்று திசையெங்கும் இந்த டிரெண்ட் கோலோச்சுகிறது.

நண்பர்களுக்காக படம் தயாரிக்கும் வழக்கம் இதற்கு ஒருவகையில் காரணம் என்று சொல்லலாம். உதாரணமாக சசிகுமாரும் சமுத்திரக்கனியும் ஒருவருக்காக மற்றவர் படங்களைத் தயாரித்து இயக்கினர். தொடர்ந்து ஆர்யா, சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், பகத் பாசில், நானி, விஷ்ணு விஷால் என இந்த லிஸ்ட் நீள்கிறது.

2014ம் வருடம், தனது தம்பியை ஹீரோவாக்கி ‘அமர காவியம்’ படத்தை ஆர்யா தயாரித்தார். தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஜீவா’ படத்தை தயாரித்தார். மலையாள ‘ரெண்டகம்’, சமீபத்தில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என, தான் நடிக்காமல் தன் நண்பர்கள் அல்லது உறவினரை வைத்து ஆர்யா படம் தயாரித்திருக்கிறார்.  

‘‘துவக்கத்தில் நானும் சின்னச் சின்ன படங்கள், நல்ல கதைகள்னு தேர்வு செய்து எந்த அழுத்தமும் இல்லாம நடிச்சிட்டு இருந்தேன். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல் ஒருசில தயாரிப்பு கட்டுப்பாடுகளை மீறி நம்மால் சில கதைகளை செய்ய முடியாதுனு புரிஞ்சுது.

நமக்கான சினிமா மார்க்கெட்டும் அதற்கான வாய்ப்பைக் கொடுப்பதில்லை. அதனால் ‘குரங்கு பெடல்’, ‘கொட்டுக்காளி’, ‘ஹவுஸ் மேட்ஸ்’ போன்ற என்னால் நடிக்க முடியாமல் போன கதைகளைத் தயாரித்தேன். இதில் ஒரு நடிகனாகவும் இன்னொரு புறம் ஒரு கலைஞனாகவும் என்னுடைய ஆசையும் நிறைவேறுச்சு. 

அதாவது நல்ல கதைல என்னால நடிக்க முடியலை. ஆனா, அது என் படம் என்கிற அடையாளம் கிடைக்க தயாரிக்க ஆரம்பிச்சேன்...’’சிவகார்த்திகேயன் சொன்ன வார்த்தைகள் இவை. ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘குரங்குபெடல்’, ‘கொட்டுக்காளி’, ‘ஹவுஸ் மேட்ஸ்’ எல்லாம் இப்படி இவர் நடிக்காமல், ஆனால், தயாரித்தவைதான். 

‘‘ஒருசில நல்ல கதைகளை நாமே நடிச்சுத் தயாரிக்க தயாரா இருந்தாலும், நம் ஸ்டார்டம் அந்தஸ்து தடுக்கும். அல்லது நமக்கான மார்க்கெட் அதற்கு அனுமதிக்காது. இந்தச் சூழல்ல படம் தயாரிப்பது நல்ல விஷயமா படுது...’’ தெலுங்கு நடிகர் நானியின் வார்த்தைகள் இவை.இதற்கேற்ப ‘டீ ஃபார் டோபிடி’, ‘ஆவ்’, ‘மீட் க்யூட்’, ‘கோர்ட்: ஸ்டேட் Vs ஏ நோபடி’ என படங்களை புரொடியூஸ் செய்திருக்கிறார். 

‘‘நடிப்பு என் கரியர் பட்டியலில் கிடையாது. கிட்டத்தட்ட சினிமா வேண்டாம்னு படிச்சு முடிச்சுட்டு வெளிநாட்ல வேலைக்கு சேர்ந்தவன் நான். அதனால சினிமாவைப் பொறுத்தவரை எனக்குக் கிடைச்ச அத்தனையும் எந்தஎல்லையும் வகுக்காமல் நடந்ததுதான். அப்படித்தான் நான் தயாரிக்கும் படங்களும். எனக்குப் பிடிச்ச கதைகளை வேறு நடிகர்களைக் கொண்டு தயாரிக்கறேன்...’’ என்று சொல்லும் துல்கர் சல்மான், அதற்கேற்ப ‘மணியறையிலே அசோகன்’, ‘லோகா: சாப்டர் 1 சந்திரா’ படங்களைத் தயாரித்தார்.

இந்தப் பட்டியலில் தனுஷ் முக்கியமானவர். ஏனெனில் பிற நடிகர்களை உச்சத்தில் உயர்த்தும் படங்களைத் தயாரிக்கும் பணியை தொடர்ச்சியாக செய்து வருபவர்.

‘‘என் சினிமா பயணத்தை ஆரம்பிக்கிறப்ப திரையுலகைச் சேர்ந்த எத்தனையோ நண்பர்கள் எனக்கு உதவினாங்க. 

அப்படி நானும் இப்ப உதவறேன். அவ்வளவுதான்...’’
இப்படிச் சொல்லும் தனுஷ், இதற்கேற்ப, சிவகார்த்திகேயனை மிகப் பெரும் நடிகராக களம் இறக்கி ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்கள் கொடுத்தார். விஜய் சேதுபதிக்கு ‘நானும் ரவுடிதான்’. தினேஷுக்கு ‘விசாரணை’. இயக்குநர் மணிகண்டனுக்கு ‘காக்கா முட்டை’, பிறகு ‘அம்மா கணக்கு’.

‘‘எனக்குத் துணையா நிற்கற மனைவிக்கு நானும் தோள் கொடுக்கணும் இல்லையா’’ என்று கேட்கும் சூர்யா, ஜோதிகா நடிக்க ‘36 வயதினிலே’, ‘காற்றின் மொழி’, ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தார்.மட்டுமல்ல; ‘உறியடி 2’, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘ஓ மை டாக்’ போன்ற மற்ற நடிகர்களின் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘‘ஒரு சினிமா கலைஞனா என் வேலை திரைல மட்டும்தான். 

அதை எவ்வளவு சிறப்பா செய்ய முடியுமோ அப்படி செய்யறேன். இந்த சினிமாதான் எனக்கு மிகப்பெரும் அடையாளத்தைக் கொடுத்திருக்கு. அதனால இந்த சினிமாவுக்கு என்னால செய்ய முடிந்ததை செய்யறேன்...’’இப்படி சொல்லும் ஃபகத் ஃபாசில், ‘கும்பலாங்கி நைட்ஸ்’ மூலம் தயாரிப்பாளரானார். 

இதில் இவர் ஏற்றது மிகச்சிறிய வேடம்தான். தொடர்ந்து ‘சி யூ சூன்’, பாசில் ஜோசப் கதாநாயகனாக நடித்த ‘பல்து ஜன்வார்’, பிஜு மேனன், வினித் னிவாசன் நடிப்பில் ‘தன்கம்’, புதுமுகங்கள் நடிப்பில் ‘பிரேமலு’, ‘பெயின்கிளி’ என தொடர்ச்சியாக படங்களைத் தயாரித்து வருகிறார்.  

இவர்கள் தவிர அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது வேறு வேறு நடிகர்களைக் கொண்டு இன்னும் சில நடிகர்கள் படங்களைத் தயாரித்து வருகிறார்கள். அல்லு அர்ஜுன், ராம் சரண், அர்ஜுன், விஷ்ணு விஷால், ஜீவா, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோரும் இதில் அடக்கம். 

இந்தப் பட்டியலில் நடிகர்கள் மட்டுமல்ல நடிகைகளும் உள்ளனர் என்பதுதான் இன்னும் சிறப்பான ஒன்று.நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தயாரிப்பில் சாய் பல்லவி நடித்த ‘கார்கி’, நயன்தாரா தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘ராக்கி’, குஜராத்தி மொழியில் ‘சுப் யாத்ரா’ உள்ளிட்ட திரைப்படங்கள் இதில் அடக்கம். 

அனுபவமே சிறந்த பாடம் என்பதற்கு இவர்களே உதாரணம். எனவேதான் நடிகர்களால் நல்ல கதைகளைத் தேர்வு செய்து தயாரிக்க முடிகிறது. 

இப்போதைய பெரும் தயாரிப்பாளர்களும் மற்ற ஹீரோக்களின் அனுபவங்களைப் பயன்படுத்தி கதைகளைத் தேர்வு செய்தால் இன்னும் நல்ல சினிமாக்கள் வரும் என்பது உறுதி.

ஷாலினி நியூட்டன்