சிறுகதை - அம்மா என்ன செய்யப் போகிறாள்..?



அந்த தனியார் ஆசுபத்திரில உடனடி சிகிச்சைப் பிரிவோட முன்னாடி இருந்த சின்ன வராந்தாவுல காலைல பத்து மணியிலேர்ந்து ஆடாம அசையாம காத்துகிட்டு இருக்கேன்.

எங்கப்பன உள்ளே சிகிச்சைக்காக அனுமதிச்சிருந்தோம். 
காலைல மேலுக்கு ஒரு சொம்பு ஊத்திட்டு வந்தவரு, வேட்டி கட்டக் கட்ட மயக்கமாயி கீழ வுழுந்துட்டாரு.‌ பதறிப் போயி தூக்கிட்டு வந்து இந்த ஆசுபத்திரில சேர்த்தோம்.

ரெண்டு மூணு சேர் தள்ளி எங்கம்மா உட்கார்ந்திருந்தா. திரும்பிப் பார்த்தேன். இடமில்லாததுனால தள்ளி உட்கார்ந்திருந்தவ கண்ண சேலத் தலப்புல தொடச்சுட்டு இருந்தா. 

‘மழத்தண்ணி கூட காலம் போற காலத்துல வத்துனாலும் வத்திரும்... ஆனா, பொம்பளைங்க வுடற கண்ணீரு மட்டும் வத்தாது போல’ன்னு மனசுக்குள்ளாற நெனச்சுகிட்டேன்.
ஆனா, உள்ள படுத்துருக்கற எங்கப்பா மட்டும் எனக்கு நெனவு தெரிஞ்சு அழுததே கெடையாது. ‘எப்பவுமே உங்கப்பா கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு தண்ணி வந்ததில்ல. அப்படி ஒரு கல்லு நெஞ்சு’ம்பா அம்மா.

எங்க தாத்தா அண்ணாமலைக்கும் பாட்டி வள்ளிமாவுக்கும் பொறந்த நாலு முத்துல ஒரு முத்து எங்கப்பன். பேரும் முத்துதான். ஒரு வூட்ல பெயரு வெளங்க சில கொழந்தைங்க பொறந்தா, பெயரக் கெடுக்க சில கொழந்தைங்க பொறக்கும். 

அப்படி பெயரக் கெடுக்கவே பொறந்த பொறப்புதான் எங்கப்பா.அண்ணாமலை தாத்தா ஒண்ணும் பெரிய பண்ணையக்காரர் இல்ல. ரேஷன் கடைல வேலை செஞ்சு, அதுலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி தறி போட்டு எங்க பெரிப்பா, சித்தப்பாவையெல்லாம் நல்லாப் படிக்க வச்சுட்டாரு. நெலம் நீச்சுன்னு வாங்கிப் போட்டுருந்தாரு.

எங்கப்பா மட்டும்தான் படிக்காம ஊரச் சுத்திட்டு இருந்ததோட தெனத்திக்கும் ஊர் வம்பையும் இழுத்துகிட்டு வந்து தலைவலியா இருந்தாரு.எது எப்புடியோ எல்லோருஞ் செய்யற மாதிரி, ஒரு கண்ணாலத்த பண்ணி வெச்சா திருந்திருவாருன்னு எங்கம்மா சாந்தாவக் கட்டி வச்சாங்க.

கட்டின ஒரே வருஷத்துல என்னப் பெத்து தன்னோடபௌருஷத்தையும் நிரூபிச்சுட்டாரே ஒழிய வேற எந்த மாத்தமும் இல்லாம அதே மாதிரி ஊர்வம்பு, சண்டனு இழுத்துட்டு வந்ததோட வயல்ல வர்ற‌ வருமானத்தயும் எங்க பாட்டிகிட்ட நைச்சியமாப் பேசி வாங்கிட்டுப் போயி ஆடம்பரமா செலவு செய்ய ஆரம்பிச்சாரு.

இதையெல்லாம் பாத்த எங்க தாத்தா சொத்த நாலு பேத்துக்கும் சமமாப் பிரிச்சுக் கொடுத்துட்டு, எங்கப்பன் பங்குக்கு வந்த சொத்தை எம் பேர்ல எழுதி வச்சதோடு எனக்கு வயசு வர வரைக்கும் எங்கம்மாவ காபந்து தாரரா போட்டு உயில் எழுதி வச்சுட்டு மேல போயிட்டாரு. எங்க பாட்டி அதுக்கு முன்னாடியே பூவும் பொட்டுமா போய்ச் சேர்ந்துட்டாங்க.

அவங்க இறந்தப்பக்கூட ஊர்ச் சனம், உறவு சனம் முழுக்க அழுதாங்களே ஒழிய மருந்துக்கும் எங்கப்பா கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வரல. ‘பெத்த தாய் செத்ததுக்குக் கூட அழுகாத இவனெல்லாம் ஒரு மனுஷனா’ன்னு ஏகத்துக்கும் பேசினாங்க.

வயலையெல்லாம் தன்னோட சிநேகிதன் கோவாலனுக்கு குத்தகைக்கு வுட்டுப்போட்டு பகல்ல திண்ணையிலும், சாயந்திரமானா கிளப்புல சீட்டாடவும் ஆரம்பிச்சுட்டாரு. கவனிக்காததுல கோவாலன் நல்லா ஏமாத்த ஆரம்பிச்சான்.

எங்கம்மா கணக்குக் கேட்டா வேணும்னே எங்கப்பன்ட்டப் போயி, ‘நா குத்தகய வுட்டுக் குடுத்திரேம்பா... உஞ் சம்சாரத்துக்கு எம் மேல நம்பிக்கை இல்ல’னு இழுப்பான்.‘இதோ வர்றேன்’னு சொல்லிட்டு உள்ள வந்து, ‘கழுத... உனக்கு அவ்வளவு கொழுப்பாடி’ன்னு அடிப்பாரு. 

‘கேட்பானே... அடி திம்பானேன்’னு எங்கம்மா கேக்கறதையே நிறுத்திட்டா. தன்னோட சாம்ராஜ்யத்துல, தான்‌ மட்டுமே அரசனா பரிபாலனம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு.
‘நீ கொழுக்கட்டயாட்டம் இருக்கப்ப நா ஏன் அந்தக் கோலம் போறேன். 

ஒட்டுக்காப் போயிட்டீன்னா ஊர் சனமெல்லாம் அப்புடித்தான் கூப்பிடும்’னு குமுறுவா, அந்தக் கெட்ட வார்த்தயக் கேக்கற அம்மா. மனசுக்குள்ளார கொமஞ்சாலும் வளர வளர, ‘சரி... போ. நமக்கு வாச்சது இவ்வளவுதான்’னு அம்மா மாதிரியே நானும் பழகிட்டேன்.

எப்படியோ பிளஸ் டூ வரைக்கும் உள்ளூர்லேயே முடிச்சுட்டேன். ரிசல்ட்டுக்குப் பாத்துட்டு இருக்கறப்பத்தான் இப்புடி வுழுந்துட்டாரு.‘‘முத்து பேஷண்ட் கூட யாரு..? டாக்டர் கூப்பிடறாரு’’னு வார்டுபாய் சத்தங் கேட்டு உள்ளாற ஓடினேன். கூடவே வந்தா அம்மாவும்.‘‘நீங்கதானே மிஸ்டர் முத்துவோட சன்..?! உக்காருங்க. உக்காருங்கம்மா...’’ கையக் காட்டிட்டே கண்ணுல இருந்த கண்ணாடியத் தொடச்சுப் போட்டுட்டு முன்னாடி இருந்த ஃபைல புரட்டினாரு. 

‘‘தம்பி... உங்கப்பாவோட ரெண்டு கிட்னியும் ஃபங்ஷனாகல. அன்கண்ட்ரோல் சுகர். கவனிக்காம விட்டதுல இப்ப ரெண்டும் அவுட்டாயிருச்சு. நீங்களோ இல்ல உங்க சொந்தத்தில யாராவதோ கிட்னி குடுக்கறதுன்னா ஓகே. உடனடியா சர்ஜரி பண்ணிடலாம். அதுவரைக்கும் டயாலிசிஸ்தான் வழி...’’னு சொல்லிட்டு, ‘‘நர்ஸ்... இவங்கள லேபுக்கு கூட்டிட்டுப் போங்க...’’னு சொன்னார்.‘‘எங்கூட வாங்க’ன்னு சொல்லிட்டே ஃபைலத் தூக்கிட்டு நடந்த நர்ஸ், ‘‘சாப்புட்டீங்களா’’ன்னாங்க. 

இல்லன்னு தலையாட்டவே, ‘‘போய்ச் சாப்பிட்டு மூணாவது மாடில எட்நூத்தி எண்பத்தி எட்டுக்கு வாங்க...’’னு சொல்லிட்டே நடந்துட்டாங்க.ஐ.சி.யோட கண்ணாடி சதுரத்து வழியா அப்பன் படுத்துட்டுருக்கறது தெரியுதான்னு பாத்தேன். 

ஸ்கிரீன் துணிதான் கண்ணுல பட்டுச்சு.‘‘சாயந்திரம் ஐஞ்சு மணிக்கு மேல் ஒவ்வொருத்தரா பாக்க வுடுவாங்க. போய்ப் பாத்துட்டு உடனே வந்துரணும்...’’ன்னு சொன்னாரு நாங்க பாக்கறதப் பாத்த வார்டு பாய்.

‘‘கெடக்கட்டுண்டா சந்துரு. அப்புடியே போகட்டும். கொஞ்சத்த ஆட்டமா ஆடிருக்கு. பாவி நாயி... இத்தன நாளு பண்ணுறது பத்தாதுன்னு இப்ப இது வேறயா..? ஒரு வருஷத்துக்கு முன்னாடியே தல சுத்துதுன்னு சுப்பிரமணிய டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனதுக்கு, ‘சுகர் இருக்கு. சுகர் பெசலிஸ்ட்டுகிட்ட காமிங்க’ன்னாரு...அதுக்கு உங்கப்பன், ‘அந்த டாக்டரு கெடக்கறான். எனக்காவது சக்கர வர்றதாவது’னு சொல்லிட்டே காப்பில மூணு ஸ்பூன் சக்கர, ஜிலேபி, லட்டுன்னு மொக்குச்சு.

இப்பப்பாரு போட்டுத் தள்ளிருச்சு. ஆனா, ஒண்ணுடா... ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான். மேலேருந்து பாத்துட்டுத்தான இருக்கான்...’’ன்னு மேல்மூச்சு வாங்க ஆக்ரோஷமா சொன்ன அம்மா..., ‘‘ஏண்டா கண்ணு... கிட்னியக் குடு கிட்னியக் குடுங்கறாங்களே... குடுத்துட்டா நாம் எப்படிறா ஒண்ணுக்குப் போறது?’’னு கேட்டா.

‘‘ஐயோ அம்மா... எல்லாருக்கும் வயத்துக்குள்ளாற ரெண்டு மூத்திரக்காய் இருக்கும். ஒண்ணு இருந்தாலே உயிர் வாழலாம்’’னு நா சொன்னது புரிஞ்சுதோ இல்லையோ மலங்க மலங்க விழிச்சா.

‘‘அன்டைம் சார். எல்லாந் தீர்ந்திருச்சு. சூடா பக்கோடா வேணா இருக்கு...’’ சொன்ன காண்டீன்காரர்கிட்ட ‘‘எனக்கு ஒரு டீ போதுங்க’’ன்னா அம்மா. நானும் ஒரு டீக்கு சொல்லிட்டு அங்க கெடந்த சேர்ல உக்காந்தோம்.

‘‘எதுக்கும் உங்க பெரிப்பன் சித்தப்பனுக்கு போனப் போட்டுச் சொல்லிரு. நாள பின்ன எதாச்சும் சொல்லப் போறாங்க...’’னு கையில வச்சுருந்த டீ டம்ளர சுத்தி சுத்தி ஆட்டிக் குடிச்சுட்டே சொல்றா. 

என்ன சொல்றதுன்னு புரியாம அவளையே பாத்துட்டு இருந்தவன் மனசுல ரண்டு மாசத்துக்கு முன்னால நடந்த அந்த சம்பவம் வந்து நின்னுச்சு. நா ரூமுல படுத்துருக்கறது 
தெரியாம...‘‘அம்மா... சூதானமா இரு. அந்த டீக்கடக்காரி வூட்டு பின்னாடிப் பக்கம் ஐய்யாவோட பட்டி டவுசரு காயறதப் பாத்தேன்.

எதோ மிச்ச மிகுதி இருக்கறதும் அவ வூட்டுக் கொல்லப்புறமா போயிறப் போகுது.அன்னக்கி அந்த மேனா மினுக்கி ‘முத்தய்யா மாதிரி கெடக்க குடுத்து வச்சுருக்கணுமே. எத்தன உதவி செய்யறாரு. அவருக்காக உசுரக் கூடக் குடுக்கலாம்’னு எங்கிட்டயே சொல்றா. சாக்கிரதையா இருந்துக்கோ...’’ சொல்றது சொல்லிப்பூட்டேன்னு மெதுவான குரல்ல சொல்லிகிட்டு இருந்தா துணி தொவைக்க வர்ற சரசா.

‘‘அடப்பாவி மனுஷா... தோளுக்கு மிகுந்த புள்ளய வச்சுட்டு இந்த ஆளுக்கு புத்தி போறதப் பாரு. அதான் மத்தியானம் தின்னும் திங்காமயும் சட்டயப் போட்டுட்டு மைனராட்டம் கெளம்புறதா..? அந்த நாசமாப் போறவளோட அண்ணன் டீக்கடய வுட்டுட்டு அப்பப்ப இங்க சீட்டாட வர்றப்பவே நெனச்சேன். பாவி... படுபாவி...’’னு அம்மா திட்டிட்டு இருக்கறப்ப பாத்து எனக்குத் தும்மல் வந்துருச்சு.‘‘தம்பி. வந்துருச்சு போல’’னு நடையைக் கட்டிட்டா சரசா.

எங்கூர்ல புதுசா டீக்கட வச்சிருக்கற ரஞ்சிதாவையும் அவங்க அண்ணனையுந்தான் சொல்றான்னு புரிஞ்சுகிட்டேன். அவங்க டீக்கடையில ருசிக்காக டீ குடிக்கப் போறவங்கள விட அவ கையால டீயும், பன்னும் திங்கப் போற ஆம்புளைங்கதான் ஜாஸ்தி.கண்ணாலம் ஆயிருச்சுன்னும், புருஷன வுட்டுட்டு ஓடி வந்துட்டான்னும் ரண்டு மாதிரி பேசிக்கிட்டாங்க ஊருக்குள்ள. 

இத்தனைக்கும் பெரிசா அழகா எல்லாம் இருக்க மாட்டா. ஆனாலும் அப்படி ஒரு மயக்கற பார்வையும், பேச்சும்,சிரிப்புமா கெடப்பா. எங் கூடப் படிக்கிற பசங்க கூட ஸ்கூல் பக்கத்தால இருக்கற டீக்கடயெல்லாம் வுட்டுப்போட்டு இவ கடையில வந்துதான் டீ குடிப்பானுங்க.

சரசா சொன்னதக் கேட்டதிலேர்ந்து நாந்தான் மனசுக்குள்ளேயே கெடந்து மருகுனேனே தவிர அம்மா இதப்பத்தி அப்பங்கிட்ட கேட்டாளானே தெரியல. கொஞ்ச நேரம் கழிச்சு ரத்தமும் சிறுநீரும் டெஸ்டுக்கு குடுத்துட்டு வந்தோம்.மணி ஐஞ்சாகவும் படுத்துருங்கறவங்களப் பாக்கறதுக்காக ஒவ்வொரு சனமா வர ஆரம்பிச்சது. லிஃப்டுக்கு முன்னாடியும் ஏகப்பட்ட சனம் காத்துகிட்டு இருந்துச்சு. 

உக்காந்துட்டே இருந்ததுல காலு நோகுச்சோ என்னவோ... வராண்டா சுவத்தப் புடிச்சுக்கிட்டு கீழ வேடிக்கை பாத்துகிட்டு நின்னா அம்மா.ஒவ்வொருத்தரா ஐ.சி.யூக்குள்ள போக ஆரம்பிச்சாங்க. அம்மாவக் கூட்டிட்டு வரலாம்னு பக்கத்தால போறேன். 

அப்பத்தான் திடீர்ன்னு திரும்புனவ படபடன்னு எங்கைய புடிச்சுக்கிட்டா.எதுக்காக இப்படிப் பதற்றமாகறான்னு கீழ குனிஞ்சு பாத்தேன். மெதுவா அவங்க அண்ணனோட படியேறி வந்துகிட்டு இருந்தா ரஞ்சிதா.அம்மா கைய ஆறுதலா மெதுவா தட்டிக் குடுத்தேன்.

அதுக்குள்ள வந்த ரஞ்சிதாவும், அவங்க அண்ணாவும் அங்கிருந்த தாதிகிட்ட போனாங்க. மெதுவா அப்பா பேரைச் சொல்லி விசாரிச்சாங்க.‘‘சுகர் ஜாஸ்தி. கிட்னி பெயிலர்’’ங்கற வார்த்தைகள் காதுல விழுந்தது. அதுக்கப்புறம் ரெண்டே நிமிஷத்துல ரஞ்சிதாவும், அவங்க அண்ணனும் கிளம்பிட்டாங்க.போனவளையே வெறிச்சுப் பாத்துகிட்டே நின்னுட்டு இருந்தா அம்மா.

அடுத்த நாள் அப்பாவ ரூமுக்கு மாத்திட்டாங்க. எங்களையும் கூட இருக்க சொன்னாங்க. அப்பா லேசான மயக்கத்தோடவே இருந்தார். குளுக்கோஸ் டிரிப் எறங்கிட்டு இருந்துச்சு. காலைல ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் எங்கள கூப்பிட்டார். ‘‘தம்பி... அம்மாவோட கிட்னி நல்லா மேட்ச் ஆகுது. 

அவங்க விருப்பப்பட்டா குடுக்கலாம். பணம் மத்த விவரங்கள ரிசப்ஷன்ல கேட்டுக்குங்க...’’வெளியே வந்து நாற்காலில உட்கார்ந்தோம். அம்மாவத் திரும்பிப் பாக்கறதுக்கோ பேசறதுக்கோ தைரியமே இல்லாம அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

எவ்வளவு நேரம் அப்படியே போச்சோ? 

‘‘சந்துரு... குடுத்துடலாம்டா...’’ என்றாள் என் கையப் பிடிச்சுகிட்டே. ‘‘உங்கப்பா என்ன வேணும்னாலும் அக்கிரமம் பண்ணிட்டுப் போகுது. பழி வாங்குற மாதிரி குடுக்காம போனா அப்புறம் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?’’ சொல்லிட்டு ரூமுக்குள்ள போனா. டாக்டர் அப்பா பக்கத்துலதான் நின்னுட்டு இருந்தார். 

‘‘டாக்டர்... நானே கிட்னி குடுக்கறேன். எனக்கு முழுச் சம்மதம்...’’ன்னா.அவ சொன்னதைக் கேட்டுட்டே நின்ன என்னோட பார்வையில பட்டுச்சு, படுத்திருந்த அப்பாவோட முகம். மூடியிருந்த கண்ணுல இருந்து கண்ணீர் பொங்கி நிக்காம வெளிய வருது.மொத முறையா.  

 - விஜி முருகநாதன்