அரிசி சாக்கில் அசத்தல் கோட்... விலை ரூ.1.62 லட்சம்!



‘இன்னும் என்னென்ன கொடுமைகளை எல்லாம் நாம பார்க்கப் போறோமோ...’ என்கிற வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ஃபேஷன் என்கிற பெயரில் விதவிதமாக கிறுக்குத்தனமான உடைகள் அணிவது, விசித்திரமாக ஸ்டைலிங் செய்துகொள்வது... இதெல்லாம் சாதாரணம்தான். ஏன் வருடந்தோறும் வரும் ‘சுற்றுச்சூழல் தினம்’ என்றாலே சிப்ஸ் பாக்கெட்கள் துவங்கி... தூக்கி எறியும் தட்டுகள், டம்ளர்களில் உடைகள் தைத்து அதில் ஃபேஷன் நிகழ்ச்சிகள் நடத்துவது சாதாரணம்தான்.

அதே போல் நம் இந்திய கலாசார உடைகளுக்கென உலக அளவில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. கரண் ஜோகர், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், அலியா பட்... என இந்திய பாரம்பரிய உடைகளை உலகுக்குக் காட்டிய பிரபலங்கள் லிஸ்ட் ஏராளம். 

அதில் மயங்கி புடவை, லெஹெங்கா கட்டிக்கொண்டு வந்த வெளிநாட்டு பிரபலங்களின் வரலாறும் அதிகம்.ஆனால், இந்தியாவின் உடைகள் மட்டுமின்றி அரிசி சாக்கு கூட உலகின் ஃபேஷன் அடையாளமாக மாறியிருக்கிறது தற்போது!

அமெரிக்காவில் பிரபல பிராண்ட் பாஸ்மதி அரிசி பையில் ஸ்டைலாக ஜாக்கெட் தைத்து அதை விற்பனைக்கும் வைத்திருக்கிறார்கள். அதன் விலை ரூ. 1.62 லட்சம்.

ஷாக்கை குறைங்க. உண்மைதான். அதுவும் நம் இந்திய பிராண்ட் பாஸ்மதி அரிசி சாக்குதான் தற்போது டிரெண்டிங். டிக் டாக் கேர்ள் மற்றும் சோஷியல் மீடியா ஃபேஷன் ஐகான் சச்சி ராஜ்குரு அமெரிக்காவின் ஒரு மாலில் எதார்த்தமாக இந்த ஜாக்கெட்டைக் கண்டு அதை அணிந்து போஸ் கொடுத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள், மேலும் ஜாக்கெட்டின் விலை பார்த்து அதிர்ச்சியாகும் தருணங்கள் என இப்போது அது வைரல் டிரெண்ட். ‘ஓ மை காட் இட்’ஸ் காஸ்ட் $1950..!’ என அவர் வியந்து சொல்வது உண்மையில் நமக்கும் அதிர்ச்சிதான். 

இந்திய மதிப்பில் ரூபாய் ஒரு லட்சத்து அறுபத்து இரண்டாயிரம். அதாவது இந்தத் தொகைக்கு ஒரு கிராமத்துக்கே அரிசி வாங்கி சோறு பொங்கி விடலாம். இந்த ஜாக்கெட் அப்படியே எவ்வித மாற்றமும் செய்யாமல் நேரடியாக அரிசி சாக்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 10 கிலோ என்னும் எடை விபரங்கள் உட்பட மறைக்கப்படாமல், மெடல் போல் அப்படியே விடப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக ஏதேனும் பெரிய பிராண்ட் இந்த ஜாக்கெட்டை உருவாக்கியிருக்கலாம் என்கிறார்கள். 

ஒரு பக்கம் இந்த அரிசி சாக்கின் இன்னொரு வெர்ஷனாக ஹேண்ட்பேக் ரூ.7000க்கு மேல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் சணல் சாக்கும் கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல ஆடை பிராண்ட் கேண்டிஸ் ஹெல்ட் பால்ம் ஸ்பிரிங்ஸ் விற்பனைக்கு வைத்திருக்கிறது. அதன் விலையும் கூட நம் தலையை சுற்ற வைக்கிறது. என்னமோ போடா மாதவா!

ஷாலினி நியூட்டன்