92 வயதில் ஃபிட்னஸ் ரோல் மாடல்!
சமூக வலைத்தளங்களில் ஃபிட்னஸ் வீடியோக்களைப் பகிர்ந்து, லைக்குகளை அள்ளுவது வாடிக்கையாக மாறிவிட்டது. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த லீ என்ற 92 வயது பாட்டி,பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார்.  முயற்சி செய்தால் எந்த வயதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று அவரது தினசரி உடற்பயிற்சிகள் சொல்கின்றன. இந்த வயதில் தினமும் 200 புஷ் - அப் மற்றும் 100 சிட் - அப்களை எடுக்கிறார். தவிர, குறைந்தபட்சம் மூன்று கிலோ மீட்டர் தூரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்.
ஆனால், அன்றாடம், தான் செய்கின்ற எந்த உடற்பயிற்சியையும் லீ வீடியோவாக்கி, சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை. இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், லீயைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாக்கி தனது பக்கத்தில் பதிவிடவே லீ பிரபலமாகியிருக்கிறார்.
இதனால் கடந்த வாரம் சீனாவில் நடந்த ஒரு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோரின் முன்னிலையில் உடற்பயிற்சி செய்துகாட்டி அசத்தியிருக்கிறார் லீ. ‘‘ என்னாலே நம்ப முடியவில்லை. இப்ப எனக்கு 29 வயசுதான் ஆகுது. 10 புஷ்-அப் கூட எடுக்க முடியவில்லை. 92 வயதில் எப்படி...’’ என்று நெட்டிசன்கள் லீயைப் பார்த்து வியக்கின்றனர்.
த.சக்திவேல்
|