வால் ஸ்ட்ரீட்டை மூடிய ஒற்றை இந்தியரின் திருமணம்!



நம்மில் பலருக்கும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் என்றால் நியூயார்க் நகரின் மிகப்பெரும் பணச் சந்தை என்பதே ஹாலிவுட் படங்கள் வாயிலாகத்தான் தெரியும்.
‘வால் ஸ்ட்ரீட்’ (1986), ‘ஸ்ட்ரீட்: மணி நெவர் ஸ்லீப்ஸ்’, ‘த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’, ‘த பிக் ஷாட்’, ‘மார்ஜின் கால்’, ‘பாய்லர் ரூம்’ இப்படி வால் ஸ்ட்ரீட் டிரேடிங் மற்றும் பண முதலைகள், ஸ்டாக்... இவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான படங்கள் மூலம் மட்டுமே தெரியும்.

அப்படிப்பட்ட வால் ஸ்ட்ரீட்டை சில மணி நேரங்களுக்கு மூட வைத்திருக்கிறார் ஓர் இந்திய இளைஞர். அதுவும் தனது திருமண ஊர்வலத்துக்காக என்றால் நம்ப முடிகிறதா?!
வருண் நவானி... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  தொழில்நுட்ப வல்லுநர். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் குவெஸ்ட்ரோம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (Questrom School of Business) இன்ஸ்டிடியூட்டில் பிசினஸ் படித்திருக்கிறார்.

தொடர்ந்து AI தொழில்நுட்பத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டவர், தற்போது அமெரிக்காவில் ‘ரோலாய்’ AI நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக இருக்கிறார். இந்த செயற்கை நுண்ணறிவு தளம் உயர் கல்வி நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தேவையான டேட்டாக்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. 

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான வருண் நவானியின் திருமண பராத் (வட இந்திய முறை மாப்பிள்ளை - பெண் ஊர்வலம்) நிகழ்வுக்காக வால் ஸ்ட்ரீட்டை சில மணி நேரம் வாடகைக்கு எடுத்து ஊர்வலம் நடத்தியிருக்கிறார்!

மாப்பிள்ளை - பெண் விட்டார், உறவினர்கள், நண்பர்கள் உட்பட 400 விருந்தினர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தி வால் ஸ்ட்ரீட்டையே அதகளப்படுத்தி இருக்கிறார்கள்.

அமாண்டா சொல் என்னும் மணமகளைத்தான் வருண் நவானி திருமணம் செய்திருக்கிறார். அமாண்டா சொல், உலக நிதி நெட்வொர்க்கை நிர்வகிக்கும் மாஸ்டர்கார்டில், சட்ட ஒழுங்கு மற்றும் ரிஸ்க் மேலாண் மை இயக்குனராக பணியாற்றுகிறார். மேலும் பணப்பரிவர்த்தனைகளின் வழக்குகளையும் கையாள்கிறார்.

இவ்விருவரின் திருமணத்திற்காக மே 3 ஆம் தேதி மான்ஹாட்டனில் சங்கீத் நிகழ்வு பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டிருந்தது. மே 24தான் நிஜமான திருவிழா - மாப்பிள்ளை, பெண் பராத் ஊர்வலம். 

இதனைத்தான் மணமக்கள் வால் ஸ்ட்ரீட்டில் நடத்த முடிவு செய்து 28 வகையான சிறப்பு அனுமதிகளைப் பெற்றுள்ளனர். இதற்கான செலவு ஒரு அனுமதிக்கு இந்திய மதிப்பில் ரூபாய் ஒரு கோடி வரை என்கிறார்கள். 400 விருந்தினர்கள் நடனம் ஆட அவர்களுக்கு மத்தியில் வெள்ளை நிற வின்டேஜ் காரில், வெள்ளை நிற ஷெர்வானியுடன் முத்துமாலை கழுத்தில் மின்ன தோன்றினார் மணமகன் வருண் நவானி.

மணமகள் அமண்டா, அடர் சிவப்பு நிறத்தில் கிராண்டாக டிசைன் செய்யப்பட்ட லெஹெங்காவில் ஜொலித்தார். உடைகளை இந்தியாவின் பிரபல பாலிவுட் டிசைனர் சபியாசாச்சி டிசைன் செய்திருக்கிறார். 

எனவே, அமெரிக்காவின் பிரபல பங்குச் சந்தை தெரு, பாலிவுட் படமாகவே காட்சியளித்தது. இந்த பராத் ஊர்வலம் நேராக வரவேற்பு நடக்கும் இடத்தில் சென்று முடிந்தது. அதுவரை வால் ஸ்ட்ரீட் விடுமுறை கோலத்தில் காட்சியளித்தது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மே 25ம் தேதி திருமணம் இந்திய - யூத முறைப்படி இரு கலாசார கலவையில் நடந்து முடிந்திருக்கிறது. அமண்டா, யூதர் என்பதால் இந்த ஏற்பாடு. இதில் பியூட்டி என்ன தெரியுமா? பராத் விழாவில் கலந்துகொண்ட 400 பேரில் அமெரிக்க நண்பர்களும் அடக்கம் என்பதுதான். 

அவர்களும் லெஹெங்கா, ஷெர்வானி சகிதமாக நடனமாடி ஆச்சரியப்படுத்தினார்கள்.உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வருண் அமெரிக்காவின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவர் என்பது கூடுதல் தகவல்.

ஷாலினி நியூட்டன்