Must Watch
 மசாகா ‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளி வரும் தெலுங்குப்படம், ‘மசாகா’. விசா அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார் ரமணா. இவருடைய மகன் கிருஷ்ணா. பிறக்கும்போதே அம்மாவை இழந்தவன், கிருஷ்ணா. கிருஷ்ணாவுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்து, குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் ரமணா. பெண் இல்லாத வீடு என்பதால் கிருஷ்ணாவுக்கு பெண் கிடைப்பது கடினமாக இருக்கிறது.
அதனால், தான் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொண்டால், வீட்டில் பெண் இல்லை என்று யாருமே சொல்ல மாட்டார்கள். மகனுக்கும் சுலபமாக திருமணம் நடக்கும் என்று திட்டமிடுகிறார் ரமணா. கிருஷ்ணாவுக்கு மீரா என்ற பெண் மீது காதல் வருகிறது. ரமணாவும் யசோதாவின் மீது காதல் வயப்படுகிறார்.
இந்நிலையில் மீராவுக்கு யசோதா அத்தை என்று தெரிய வருகிறது. ரமணாவின் காதலும், அவரது மகன் காதலும் சேர்ந்ததா என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறது திரைக்கதை.ஜாலியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர், திரிநாதா ராவ் நாக்கினா. பேட் இன்ப்ளூயன்ஸ்
‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஸ்பானிய மொழிப்படம், ‘பேட் இன்ப்ளூயன்ஸ்’. ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது. பெரும் பணக்காரரின் மகள், ரீஸ். அவள் படிக்கும் பள்ளியில் பல பிரச்னைகளைச் சந்திக்கிறாள்.
சில மாணவர்கள் ரீஸுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்கின்றனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் எரோஸ் என்ற இளைஞனை வெளியில் எடுத்து, தனது மகளுக்குப் பாதுகாப்பாளனாக நியமிக்கிறார் அந்தப் பணக்காரர். தனது மகள் மீது காதலில் விழுந்துவிடக்கூடாது என்ற நிபந்தனையை ஏரோஸுக்கு விதிக்கிறார்.
ஆரம்பத்தில் தனக்கான பாதுகாப்பாளனை நியமித்திருப்பது ரீஸுக்குப் பிடிக்கவில்லை. தினமும் காரில் ரீஸைப் பள்ளியில் கொண்டு விடுவது, அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உடன் செல்வது, திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வருவது என பல வேலைகளை எரோஸ் செய்கிறான்.
ஒரு விருந்து நிகழ்ச்சியில் ரீஸுக்கு எதிராக நடக்கும் நிகழ்வில் இருந்தும் காப்பாற்றுகிறான். ரீஸுக்கு எரோஸ் மீது ஈர்ப்பு ஏற்பட, சூடுபிடிக்கிறது திரைக்கதை. தமிழில் ரீமேக் செய்ய நல்ல சாய்ஸ் இந்தப் படம். இதன் இயக்குநர் கிளியோ வாலஸ். த டிப்ளோமேட்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த இந்திப்படம், ‘த டிப்ளோமேட்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்க கிடைக்கிறது. பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அதிகாரியாக இருப்பவர், ஜே.பி.சிங். எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. உஸ்மா என்ற இந்தியப் பெண் அவரிடம் அடைக்கலம் தேடி வர, சிங்கின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தாஹிர் என்பவனால் புனேர் எனும் இடத்துக்குக் கடத்தப்படுகிறாள் உஸ்மா. தாஹிரே உஸ்மாவைத் திருமணம் செய்துகொள்கிறான். முன்பே திருமணமான பெண், உஸ்மா. அவருக்கு நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையும் இருக்கிறது. உஸ்மாவை தாஹிர் கொடுமைப்படுத்தியதால், அவனிடமிருந்து தப்பித்து சிங்கின் உதவியை நாடுகிறார் உஸ்மா.
இது இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையில் அழுத்தத்தை உண்டாக்குகிறது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு உஸ்மா திரும்பினாரா? உஸ்மாவுக்கு சிங் எப்படி உதவினார் என்பதே மீதிக்கதை. உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் சிவம் நாயர்.
கான்கிளேவ்
இந்த வருடம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்ற ஆங்கிலப்படம், ‘கான்கிளேவ்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. மாரடைப்பால் போப் மரணமடைகிறார். புதிய போப்பைத் தேர்வு செய்வதற்கான கான்கிளேவ்வை நடத்துகிற பொறுப்பு, கார்டினல் கல்லூரியின் டீன் தாமஸ் லாரன்ஸிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அமெரிக்கா, கனடா, இத்தாலி, நைஜீரியாவைச் சேர்ந்த நான்கு முன்னணி போட்டியாளர்கள் போப் பதவிக்காக போட்டியிடுகின்றனர். வாடிகன் நகரத்தில் உள்ள சிஸ்டைன் சேப்பலில் கார்டினல்கள் குவிகின்றனர். போப்பைத் தேர்ந்தெடுக்கும் வலைப்பின்னல்களுக்குள் மாட்டிக்கொள்ளும் தாமஸ், எப்படி கான்கிளேவ்வை வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறார் என்பதை திரில்லிங்காக சொல்லியிருக்கிறது திரைக்கதை.
புதிய போப்பை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்பதை யாருமே நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ரகசியம் போல செயல்படும் தேர்தல் முறை. அதை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இந்தப் படம். மட்டுமல்ல, புதிய போப்புக்கான தேர்தலில் நாமும் கலந்துகொண்டு வாக்கு செலுத்தியதைப் போன்ற உணர்வையும் தருகிறது. இதன் இயக்குநர் எட்வர்ட் பெர்கர்.
தொகுப்பு: த.சக்திவேல்
|