+2க்குப் பிறகு AI கோர்ஸ் படிக்கலாமா? ஏஐ ஆராய்ச்சியாளர் தரும் டிப்ஸ்...
எந்த கோர்ஸ் எடுத்து உயர்கல்வி படிக்கலாம்?
சமீபத்தில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் குழப்பம் நிறைந்த ஆழமான கேள்வி இதுதான்.  இதில் குறிப்பாக எஞ்சினியரிங் சேர நினைக்கும் மாணவர்கள் பலரும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஏஐ, டேட்டா சயின்ஸ், மிஷின் லேனிங் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ஆனால், இளங்கலையில் இந்த கோர்ஸ்களை எடுத்து படிப்பது நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் ஏஐ நிபுணர்கள்.இதுகுறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் நார்வேயில் வசிக்கும் ஏஐ ஆராய்ச்சியாளர் சேஷாத்ரி தனசேகரன். 
இந்நிலையில் அவரிடம் இளங்கலையில் ஏஐ கோர்ஸ் ஏன் வேண்டாம்? ஏஐயில் ஆர்வமுள்ள மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட கேள்விகளுடன் பேசினோம்.
‘‘ஏஐ, டேட்டா சயின்ஸ், மெஷின் லேனிங் கோர்ஸ்கள் இளங்கலையில் படிப்பது ரொம்பவே ரிஸ்க்கானது. முதல் காரணம், அண்ணா பல்கலைக்கழகத்திலும் சரி, மற்ற பல்கலைக்கழகங்களிலும் சரி இந்த ஏஐ மேஜர் கோர்ஸில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேப்பர் மற்றும் கணிதம் சார்ந்து பேப்பர்கள் இடம் பெறவில்லை.
குறிப்பாக கணினி துறையில் கோர் பேப்பர்களான Compiler design, Theory of computation பேப்பர்கள் இடம்பெறவில்லை. மேலும் C, C++ லாங்வேஜ் இல்லாமல், Data structure முதற்கொண்டு அனைத்தையும் Python லாங்வேஜில் கற்றுக் கொடுக்கிறார்கள். இந்தப் பேப்பர்கள் இல்லாது ஏஐ படிப்பதினால் எந்த பயனும் இல்லை.
இரண்டாவதாக, ஏஐ கோர்ஸ் இளங்கலையில் முடித்து வெளியேறும்போது மாணவர்கள் சான்றிதழில் ஏஐ, டேட்டா சயின்ஸ், மிஷின் லேனிங் என்று இருந்தால் அது அவர்களின் வேலை வாய்ப்புகளை ரொம்பவே குறுக்கிவிடும். இதுசார்ந்த வேலைகளில் மட்டுமே வாய்ப்புகளைத் தேட வேண்டியிருக்கும்.
மூன்றாவதாக, ஏஐ, டேட்டா சயின்ஸ், மிஷின் லேனிங் கோர்ஸ்களை எடுக்கக்கூடிய தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் கல்லூரிகளில் இருக்கிறார்களா என்றால் இப்போதைக்கு இல்லை என்பதே பதில். இப்போது கல்லூரிகளில் வேலை பார்க்கும் பெரும்பாலான பேராசிரியர்கள் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
அவர்கள் ஏஐயிலோ, டேட்டா சயின்ஸிலோ, மிஷின் லேனிங்கிலோ பிஹெச்.டி ஆய்வுகள் எதுவும் மேற்கொள்வதில்லை. நெட்வொர்க், நெட்வொர்க் செக்யூரிட்டி மாதிரியான படிப்புகளில்தான் ஆய்வுகள் செய்கிறார்கள்.
இதுபோன்ற சூழலில் ஏஐ, டேட்டா சயின்ஸ், மிஷின் லேனிங் படிப்புகளில் எப்படி தகுதி வாய்ந்த ஆசிரியர்களை எதிர்பார்க்க முடியும்? எப்படி இவர்கள் மாணவர்களுக்கு சிறப்பாகப் பாடங்களை நடத்துவார்கள்?ஐஐடி மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களில்கூட பி.இ, பி.டெக் ஏஐ கோர்ஸ் எனத் தனியாகக் கிடையாது.
அவர்கள் எப்போதும் உள்ள கோர் கோர்ஸுடன் இதனைக் கற்றுத் தருகின்றனர். அதுவும் கோர் கோர்ஸை முடித்துவிட்டு கடைசியாகவே ஏஐ, டேட்டா சயின்ஸ், மிஷன் லேனிங் சொல்லித் தருகின்றனர். ஆனால், நம்மூர் கல்லூரிகளில் இன்னும் இதுதான் சிலபஸ் என வரையறுக்கப்படவில்லை. நான்காவதாக இந்த கோர்ஸ்கள் நடத்துவதற்கு சரியான ஆய்வக வசதிகள் தேவை. அந்த ஆய்வக வசதிகளை முக்கால்வாசி கல்லூரிகள் செய்வதில்லை. அதாவது குறைந்தபட்சம் நல்ல கிராபிக்ஸ் கார்டு போட்ட 60 கம்ப்யூட்டர்கள் அல்லது ஒரு கிராபிக்ஸ் கார்டு சர்வர் தேவை. இமேஜ் புராசஸிங்கிற்கு இந்தகிராபிக்ஸ் கார்டு மிகவும் அவசியமானது. இன்றைக்கு சாட்ஜிபிடி மாதிரி Large Language Model (LLM)ல் வேலை செய்ய முக்கியமானது இந்த கிராபிக்ஸ் புராசஸிங் யூனிட்கள்தான்.
அதனால் ஏஐ, மிஷின் லேனிங் குறித்து படிக்கிறபோது குறைந்தபட்சம் இதெல்லாம் அவசியம். ஆனால், இந்த மாதிரியான ஆய்வக வசதிகள் கொண்ட கல்லூரிகள் இங்கே இல்லை. இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால்தான் இளங்கலையில் ஏஐ, டேட்டா சயின்ஸ், மிஷின் லேனிங்கை ஒரு டிகிரியாக தேர்ந்தெடுத்து படிக்காதீர்கள் என்கிறேன்...’’ என்கிறவரிடம், இந்தக் கோர்ஸ்களில் ஆர்வமுள்ள மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றோம்.
‘‘இதற்கு பி.இ, பி.டெக் என எஞ்சினியரிங்கில் ஏதாவது ஒரு கோர்ஸ் எடுத்து படிக்கலாம். கூடவே ஏஐ, டேட்டா சயின்ஸ், மிஷின் லேனிங் கோர்ஸ்களைத் தனியாகக் கற்றுக்கொள்ளலாம். இப்போது அண்ணா பல்கலைக்கழகம் நார்மலாக படிக்கிற பாடங்களுடன் வெர்டிக்கல் என சில கோர்ஸ்களைக் கொண்டு வந்துள்ளது.
ஒரு வெர்டிக்கலில் நீங்கள் ஆறு பாடங்கள் கூடுதலாகப் படிக்கலாம். இது ஏஐ, டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள். இது வேண்டாம் என்றால் எவ்வளவோ ஆன்லைன் வாய்ப்புகள் இருக்கின்றன. அதில் கற்றுக்கொள்ளலாம்.
ஏஐயை வகுப்பில்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆன்லைனில் நிறைய உள்ளன. ஆனால், எல்லாவற்றுக்கும் கணிதம் முக்கியம். அப்போதே ஏஐ, மிஷின் லேனிங் பற்றிய விஷயங்கள் புரிபடும். ஆனால், நம் ஆட்கள் கணிதம் என்றாலே தலைதெறிக்க ஓடுகிறார்கள்.
அதனால், பிளஸ் டூவில் கணிதம் எடுத்து படித்த, கணிதத்தில் ஆர்வம் இருக்கிற மாணவர்கள் மட்டுமே இந்த ஏஐ, டேட்டா சயின்ஸ், மிஷன் லேனிங் கோர்ஸ்களைப் படிப்பது நல்லது.குறிப்பாக மிஷின் லேனிங்கில் வரும் பிரச்னைகளைக் கணிதம் படித்தவர்களால்தான் தீர்க்கமுடியும். அதனால், கணிதத்தில் ஆர்வமும், புதிதாக கற்பனையும் இருப்பவர்கள் தாராளமாக ஏஐ படிக்கலாம். அதுவும் இளங்கலையில் ஏதாவது ஒரு எஞ்சினியரிங் கோர்ஸ் முடித்துவிட்டு மேற்படிப்பிலோ அல்லது இளங்கலை எஞ்சினியரிங் படிக்கிறபோதே ஆன்லைனிலோ இந்த ஏஐ சார்ந்த கோர்ஸ்களைப் படிப்பது சிறந்தது.இன்று ஏஐ சார்ந்து நிறைய புத்தகங்களும் உள்ளன. இவை கணிதம் சார்ந்து இருப்பதால் நம்மவர்கள் இதனை படிப்பதை விட்டுவிட்டு அப்ளிகேஷன் சார்ந்து மட்டுமே படிக்கிறார்கள். இதையும் மாற்றிக் கொண்டால் ஏஐ படிப்பு இன்னும் பெர்பெக்ட்டாக வொர்க்அவுட் ஆகும்.
அதேபோல இன்று நிறுவனத்திற்கு ஏஐ முழுக்கத் தெரிந்தவர்கள் தேவையில்லை. அவர்களிடம் இருக்கிற பழைய சிஸ்டம் எல்லாவற்றையும் ஏஐ உடன் இணைக்கத் தெரிந்தவர்களும், ஏஐயில் அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை அறிந்தவர்களுமே தேவை.
அதனால், நீங்கள் ஏஐ கோர்ஸை சைட்டில் ஆன்லைனில் படித்தாலும் உங்களால் எளிதாக ஏஐயில் பணியாற்ற முடியும் என்றால் உங்களை நிறுவனங்கள் தாராளமாக வேலைக்கு எடுத்துக்கொள்ளும். அதனால், ஆன்லைனில் படிப்பதால் வேலை கிடைக்குமா என்கிற கவலை வேண்டியதில்லை...’’ என்கிறவர், மேலும் தொடர்ந்தார்.
‘‘எதிர்காலத்தில் ஏஐ, டேட்டா சயின்ஸ், மிஷின் லேனிங்கில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதனை மட்டும் எடுத்து படித்தால் வேலை வாய்ப்புகள் குறையலாம். இதனுடன் எக்சிஸ்டிங் டெக்னாலஜி எப்படியிருக்கும் எனப் பார்த்து கற்றுக்கொண்டால் வேலை வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.
ஏஐ, டேட்டா சயின்ஸைப் பொறுத்தவரை தினமும் படித்து தினமும் அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் சர்வைவ் பண்ணமுடியும்...’’ என்கிறார் ஏஐ ஆராய்ச்சியாளர் சேஷாத்ரி தனசேகரன்.
பேராச்சி கண்ணன்
|