சிறுகதை - சரவணப்பொய்கை



‘‘கதவு திறந்துதான் இருக்கு...’’
மீண்டும் ‘டொக் டொக்’ கேட்டது.

‘‘அம்மா இதோ வரேன்...’’
எட்டு மாதக் குழந்தையிடம் சொல்லி விட்டு கதவை நோக்கிப் போனாள். வெளியே நின்றவனைப் பார்த்தாள்.

‘‘நீயா? ஆலங்கட்டி மழைதான் பெய்யப் போகுது...’’
சரவணனின் அதிகபட்ச சிரிப்பே உதடு கோணிக் கொள்வதுதான்.
‘‘உள்ளே வா...’’
மாலதி குழந்தையிடம் ஓடினாள்.

‘‘பார்த்தியா? இதோ வரேன்னுதானே சொல்லிட்டு போனேன். அதுக்குள்ள...’’நகர்ந்து சோபாவின் அருகில் போய் விட்டிருந்தது. ‘‘இவளைப் பிடி. என்ன பண்ணி வச்சிருக்கா பார்...’’

சாப்பாட்டுக் கிண்ணி கவிழ்ந்திருந்தது. கஞ்சி தரையெங்கும் கோலமிட்டிருந்தது.‘‘சரோ உன் வால்த்தனத்தை அவன்ட்ட காட்டாதே. 

அப்புறம் வர மாட்டான்...’’
சரவணன் சோபாவில் அமர்ந்து சரோவைப் பிடித்துக் கொண்டான்.அவன் கன்னத்தைத் தடவியது. உச்சி முடியை இழுத்துக் குலுக்கியது.
‘‘மா மா...’’மாலதி உற்சாகத் துள்ளலுடன் திரும்பினாள்.

‘‘அடி சுட்டி. எப்படிக் கண்டு பிடிச்சே?’’
சரவணனின் ஷர்ட் பாக்கட்டில் கை விட்டது. வலது கைத் தழும்பை ஆராய்ச்சி செய்தது. மறுபடியும் ‘‘மா மா...’’‘‘டீ ஓகேதானே?’’பதிலை எதிர்பார்க்காமல் மாலதி கிச்சனுக்குள் போனாள். டீத்தூள் கொதிக்கும் வாசனை காற்றில் வந்தது.‘‘வெறும் டீ வேண்டாம்னு ரெண்டு பிஸ்கட்...’’மாலதி இடது கையில் பிஸ்கட் வலதில் டீ கப்புடன் எதிரில் அமர்ந்தாள்.‘‘ம்ம்... சொல்லு. 

இவ்ளோ நாள் கழிச்சு இந்தப் பக்கம் வரணும்னு ஏன் தோணுச்சு?’’சரவணன் டீயைத் தொடவில்லை. சரோ இழுத்த இழுப்பிற்கெல்லாம் இணங்கிக் கொண்டிருந்தான். ‘‘ச்சே. அவ உங்கிட்ட இருக்கிறதையே மறந்துட்டேன். சும்மா கீழே விட்டுரு. அவ பாட்டுக்கு ஏதாச்சும் டாய்ஸ் வச்சு உருட்டுவா. ஒண்ணு தெரியுமா?

அவளைக் கொஞ்சினாலும் சரி, தனியா விட்டாலும் அவளுக்குன்னு ஏதாவது ஒரு விளையாட்டு கண்டு பிடிச்சுப்பா. இல்லேன்னா ராக ஆலாபனைல அம்மிணி ஆ ஆன்னு இஷ்டத்துக்கு ஸ்வரம். ஷி நெவர் ஃபீல்ஸ் லோன்லி...’’மாலதி மனம் விட்டுச் சிரித்தாள்.

‘‘அப்புறம் நானே பேசிகிட்டுருக்கேன். எப்படிப் போகுது உன் லைஃப்? மனோகரி எப்படி இருக்காங்க? ரெண்டு பேரும் ஜாப்ல இருக்கீங்க. வீக் எண்டாவது ஜாலியா சுத்தறிங்களா??சரவணன் டீ கப்பை கீழே வைத்தான். ‘‘டீ எப்படி?’’ மாலதி கண் சிமிட்டினாள்.‘‘நைஸ்...’’‘‘ஹப்பா... ஒரு வார்த்தை கேட்க ஒரு மணி நேரம் காத்திருந்தேன்...’’அம்மா பாடியதைப் பார்த்த சரோ சிரிப்புடன் ‘ஆ ஆ’ என்றாள்.

‘‘இவ பெரிய பாடகியா வரப் போறா. என்ன சொல்ற?’’
‘‘ஹேப்பி...’’
‘‘அதை ஏன் சோகமா சொல்ற?’’
‘‘ப்ச்...’’
‘‘இங்கே பார் சரவணா... நான் முன்னே மாதிரி இல்ல இப்பல்லாம். டக்னு மூட் அவுட் ஆயிருவேன். மொக்க ஜோக்குக்கு சிரிச்ச மாலு விஷ்க்... காணாமப் போயாச்சு. எதுவா இருந்தாலும் செதிர்காய் மாதிரி போட்டு உடை...’’
‘‘ம்ம்...’’‘‘ஏய்... நான் சீரியசா சொல்றேன்...’’

சரோ நகர்ந்து மாலதியிடம் வருவது போல் போக்கு காட்டி சட்டென்று யூடர்ன் அடித்து சரவணனிடம் போனாள். இரு கைகளையும் உயர்த்தி ‘‘மா மா...’’ என்றாள்.
‘‘அடிப்பாவி. அவன் என் ஆள்டி. நீ லவட்டிக்க பார்க்கிறே?’’ மாலதி கேலியாகச் சிரித்தாள்.‘‘அதுதான் இப்போ பிரச்னை...’’ சரவணன் நிதானமாய் சொன்னான்.

‘‘என்ன உளர்றே?’’
‘‘மனோ டெய்லி ஒரு சண்டை. நான் உன்னை இன்னும் மறக்கலன்னு. உன்னைப் பார்த்து பேசி பல நாளாச்சுன்னு சொன்னாலும் நம்பல...’’‘‘ஆர் யூ ஜோக்கிங்?’’சரவணன் சரோவைக் கீழே விட்டான்.‘‘ஓ... நீ புரிய வைக்கலியா?’’‘‘ப்ச்...’’மாலதி டீ கப்புகளை உள்ளே எடுத்துப் போனாள். அவளை நிதானப்படுத்திக் கொள்கிறாள் என்று புரிந்தது.

‘‘அதை நீ ஹேப்பியா சொல்லணும். உன் மேல் எவ்ளோ பிரியம் இருக்குன்னு காட்டறாங்க...’’‘‘ப்ச்...’’‘‘அடப் போடா...’’‘‘டெய்லி வீட்டுக்கு வரும்போதெல்லாம் மூஞ்சிய தூக்கி வச்சிருந்தா சட்னு வெறுத்துப் போயிருது...’’‘‘ஹ்ம்ம்...’’‘‘எதுவானாலும் மனசு விட்டுப் பேசு. இப்படிக் கொல்லாதேன்னு கால்ல விழாத குறையா கெஞ்சிட்டேன்...’’‘‘குட்...’’‘‘ஒரு மாற்றமும் இல்ல...’’‘‘ஓஹோ...’’சரவணன் சீறினான்.

‘‘நான் என்ன கதையா சொல்றேன்?’’மாலதி அவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். ‘‘ஏய் நான் முன்னாடி பார்த்த சரவணன் இல்ல நீ...’’
சரோ சரவணனின் கை தொட்டு இழுத்தது. இரு கைகளையும் தூக்கிக் காட்டியது.‘‘அவளைத் தூக்கிக்கணுமாம்...’’குழந்தையை அள்ளிக் கொண்டான். இத்தனை அழுத்தத்திலும் குழந்தையின் ஸ்பர்சம் அவனுக்குள் என்னவோ செய்தது.‘‘சாப்ட்டியா?’’‘‘ம்...’’

‘‘பொய். சரி. அரை மணி இருக்கியா? உனக்குப் பிடிச்ச பொங்கல்...’’‘‘ப்ச்...’’‘‘அதானே பார்த்தேன். எங்கடா காணாமப் போச்சு ரெண்டெழுத்து மந்திரம்னு...’’
மாலதி சிரித்தாள்.

‘‘உன்னைப் பார்த்தா...’’
‘‘அடிக்கத் தோணுதா?’’
‘‘பொறாமையா இருக்கு...’’
‘‘ஏனாம்?’’
‘‘ஏன் என்னால எதையும் இயல்பா எடுத்துக்க முடியல...’’சரவணனின் குரல் தேம்பியது.

‘‘ஏய். சிரிக்கிறவங்க எல்லாரும் ஹேப்பின்னு அர்த்தம் இல்ல...’’‘‘நானும் அப்படிச் சொல்லல. சுத்தி என்ன நடந்தாலும் தன் இயல்பு மாறாமப் பார்த்துக்கிற குணத்தைச் சொன்னேன்...’’
‘‘அந்த நாள்ல நானும் அழுது ரகளை பண்ணியிருக்கேன். உனக்கே தெரியும்...’’

‘‘அப்புறம் உன்னை நீயே
மாத்திக்கிட்டுருக்கே...’’
‘‘யெஸ். நீயும் அதுக்கு ஒரு
காரணம். உன் அட்வைஸ்...’’
சரவணன் முதல் தடவையாய் சிரித்தான்.

‘‘ஹப்பா. இப்போ சுலபமா சொல்லிட்ட. அப்போ பயந்து பயந்து சொல்வேன். நீ கோவிச்சுக்கக் கூடாதுன்னு...’’
மாலதி கேலியாய் அவனைப் பார்த்தாள்.

‘‘நீயா... பயமா...’’
‘‘ம்ம். நிஜமாத்தான்...’’
‘‘சரவணா... ஒண்ணு சொல்லட்டுமா? அட்வைஸ்லாம் இல்ல...’’

சரோ கீழிறங்கிப் பின் அவன் மேல் ஏறிக்கொண்டது. அந்த விளையாட்டு பிடித்துப் போக நாலைந்து முறை அதையே செய்தது.
‘‘எல்லாருமே ஏதோ ஒரு பிரியத்துக்கு ஏங்கறவங்கதான். உரிமையான இடத்துல கிடைச்சா இரட்டிப்பு சந்தோஷம்...’’
மாலதி அவனை நேராகப் பார்த்துப் பேசினாள்.

‘‘சரோ குழந்தை. வேறு சிக்கல் இல்லை. உன்னோட கொஞ்சலோ இல்லாட்டி கடைத்தெருவுல புதுசா பார்க்கிறவரோட கண் சிமிட்டலோ அவளைக் குஷிப் படுத்திரும்...’’
‘‘புரியுது...’’‘‘தன் முயற்சியை சற்றும் கை
விடாத விக்கிரமாதித்தன்தான் வேதாளத்தை ஜெயிப்பான்...’’
மாலதி சரோவிற்காக கை நீட்டினாள்.

‘‘கொண்டா. டயப்பர் மாத்தணும்...’’
சரவணன் எதிர் சுவரில் இருந்த போட்டோவைப் பார்த்தான். மாலதி கணவருடன்.
‘‘இந்தா பெண்ணரசியைக் கொஞ்சம் வச்சுக்கோ...’’
உள்ளே போய் சிறிது நேரங்கழித்துத் திரும்பினாள்.

‘‘வடை மாவு மிச்சம் இருந்துச்சு. சாம்பார் ஓகேதானே?’’
‘‘ம்...’’‘‘அவளைக் கீழே விடு. பரவாயில்ல...’’
சரோ அவன் வடையை மெல்வதை வேடிக்கை பார்த்தாள்.
‘‘ஓ... மணி ஆயிருச்சா? இளவரசி சாப்பிடற நேரம் வந்தாச்சு...’’
எழுந்து கிச்சனுக்குள் போனாள்.

‘‘இன்னிக்கு உன்னைக் காட்டியே சாப்பாடு ஊட்டிருவேன்...’’
மாலதியின் சிரிப்பு இயல்பாய் இருந்தது.
‘‘யார் ஃபர்ஸ்ட்னு பார்க்கலாமா... நீயா உன் மாமாவான்னு...’’
கடகடவென்று உணவை விழுங்கியதைப் பார்த்தான்.
‘‘நல்ல பசி போல...’’

‘‘அதெல்லாம் இல்ல. ஒவ்வொரு டைம் ஒவ்வொரு மூட்...’’
சரவணன் எழுந்தான்.
‘‘தட்டை டேபிள் மேல வச்சிரு. டிவி பார்க்கிறியா?’’
‘‘ம்ஹும்...’’
‘‘புக் ஏதாச்சும்..?’’
‘‘வேணாம்...’’

‘‘வீட்டுல என்ன பண்ணுவ?’’
‘‘தூங்குவேன்...’’
‘‘கிழிஞ்சிது...’’
‘‘பேசறதுக்கு யார்
இருக்காங்க?’’
‘‘போச்சுரா... மறுபடியும் ஆத்தா வையும், காசு கொடுன்னு ஆரம்பிச்சுட்டியா?’’
சரோவின் வாயைத் துடைத்துக் கீழே விட்டாள். சரவணனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

‘‘நீயா தூக்கிப்பியான்னு டெஸ்ட் பண்றா...’’ சரவணன் குனிந்து தூக்கிக் கொண்டான். இரு கைகளாலும் அவன் கன்னங்களில் பட் பட்டென்று தட்டியது.

மாலதி சிரித்தாள்.‘‘பார்த்தியா? என்னைத் தூக்கிக்க உனக்கு இவ்ளோ யோசனையான்னு அடிக்கிறா...’’சரோ கீழே இறங்க முயற்சிக்க சரவணன் மார்போடு இறுக்கிக் கொண்டான். 

குழந்தை சிணுங்க ஆரம்பித்தது.‘‘கீழே விட்டுரு. திரும்பித் தானா உன்கிட்ட வருவா...’’விட்டான். ஏதோ ஒரு பொம்மையை எடுத்து ஆராய்ச்சி செய்துவிட்டு தூக்கிப் போட்டது. சுற்றுமுற்றும் பார்த்தது. எல்லாமே பழகிப் போனதாய்த் தெரிந்ததால் திரும்பி சரவணனைப் பார்த்துச் சிரித்தது.

‘‘இன்னிக்கு நீதான் புது அட்ராக்‌ஷன்...’’சரவணனின் கைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்து விட்டு திரும்பி வைக்கப் போனான்.

சரோ கை நீட்டினாள். கொடுத்து விட்டான். வாங்கி அதன் தொடுதிரையில் விரல்களால் வேகமாய்த் தடவினாள்.‘‘இவளுக்கு போன்ல என்ன செய்யணும்னு தெரியுது பார்...’’
‘‘ம்...’’
‘‘யார் போன்ல?’’
‘‘ப்ச்...’’
‘‘மனோகரியா?’’
சரவணன் பேசாமல் இருந்தது உறுதிப்படுத்தியது.

‘‘என்ன சரவணா... பேச வேண்டாமா?’’
‘‘நைட் சமைக்கல. வெளியே சாப்பிட்டு வாங்கன்னு சொல்லுவா...’’

‘‘நீயா ஏன் முடிவு பண்ற?’’
‘‘இத்தனை நாளா...’’
மீண்டும் போன் சிணுங்கியது. மாலதி சரோவிடமிருந்து வாங்கி அவனிடம் கொடுத்தாள்.
‘‘பேசு...’’
அதட்டலாய்க் குரல்.

‘‘சொல்லு...’’
‘‘...’’
‘‘வந்துகிட்டிருக்கேன்...’’
‘‘என்னன்னு தெரியல. உடனே வரணுமாம்...’’
‘‘போ சரவணா. உனக்கு ஏதோ ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைச்சிருக்குன்னு தோணுது...’’
சரோவைத் தூக்கிக் கொண்டு அவனுக்குக் கையாட்டியபோது மனசுக்குள் மெலிதாய் ஒரு பிரார்த்தனை ஓடிக் கொண்டிருந்தது.

 - ரிஷபன்