பலூசிஸ்தான்!



சமீபத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போர் நாட்டையே உலுக்கியது. உலகம் முழுவதும் முக்கியச் செய்தியாக போருக்கு நாலாப் பக்கமிருந்தும் எதிர்ப்புகளும் கிளம்பின. அமெரிக்காவின் தலையீட்டால் போர் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் பலூசிஸ்தான் முக்கிய பேசு பொருளாகவும், டிரெண்டாகவும் மாறியுள்ளது.  
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாநிலமாக இருந்தது, பலூசிஸ்தான். ஈரானின் மேற்குப் பகுதியிலும், ஆப்கானிஸ்தானின் வட மேற்குப் பகுதியிலும், பாகிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலும் பரவியிருக்கும் ஒரு பெரும் நிலப்பகுதி இது. அதனால் இதனை ஆப்கன் பலூசிஸ்தான், பாகிஸ்தானி பலூசிஸ்தான், ஈரானின் பலூசிஸ்தான் என்று மூன்று விதமாக அழைக்கின்றனர்.  

பல வருடங்களாக தனி நாடு வேண்டி பலூசிஸ்தான் மக்கள் போராடி வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் போர் அதற்கு உதவி செய்திருக்கிறது. ஆம்; சமீபத்தில் நடந்த போர் காலத்தில் பலூசிஸ்தானின் எழுத்தாளரும், போராளியுமான மிர் யார் பலூச் என்பவர், பலூசிஸ்தானைத் தனி நாடாக அறிவித்தார்.  மட்டுமல்ல, “நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல; பலூசிஸ்தானியர்கள்...”  என்று அறைகூவலும் விடுத்தார்.  

இந்தச் சம்பவம்தான் பலூசிஸ்தான் முக்கிய பேசுபொருளாக காரணம்.  மட்டுமல்ல, ஆங்கிலம், இந்தி மற்றும் பலூச் மொழியை அலுவலக மொழியாகவும் அறிவித்தார். அதனால் இதன் வரலாறும் வைரலாகி வருகிறது. 
உலகில் மனித நாகரீகம் தோன்றியபோது, அதன் மையப்பகுதியாக இப்போதிருக்கும் பலூசிஸ்தான் இருந்ததாக வரலாற்றுத் தகவல்கள் சொல்கின்றன. அங்கே கி.மு 7000த்திலேயே மனிதர்கள் வாழ்ந்ததற்கான  தடயங்கள் கிடைத்திருக்கின்றன. இதுபோக கி.மு 2500களில் சிந்து சமவெளி நாகரீகத்தின் ஒரு பகுதியாகவும் பலூசிஸ்தான் இருந்திருக்கிறது.

ஆரம்ப நாட்களில் திராவிட மொழி பேசும் ப்ராஹு இன மக்கள் மட்டுமே பலூசிஸ்தானில் வசித்து வந்திருக்கின்றனர். இவர்கள் இந்து மற்றும் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பலூச் இன மக்கள்தான்அங்கே அதிகமாக வசித்துவருகின்றனர். தவிர, ப்ராஹு, பாஸ்தன்ஸ், ஹசாராஸ், ஜட்கல்ஸ், சிந்திஸ், டாஜிக்ஸ், சிஸ்டானிஸ், பெர்சியன்ஸ், கேத்ரன்ஸ் ஆகிய இனங்களும் பலூசிஸ்தானில் வசிக்கின்றனர்.

இன்றைய பலூசிஸ்தானில் பலூச்சி மொழி பேசுபவர்கள் பெரும்பான்மையானவர்களாக இருந்தாலும், ப்ராஹு, ஜட்கலி, பெர்சியன், சிந்தி, உருது, கேத்ரானி, பாஸ்டோ மொழிகளைப் பேசுபவர்களும் அங்கே கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.  பேரரசர் அலெக்சாண்டரின் காலத்தில் பலூசிஸ்தானின் சில பகுதிகளைக் கைப்பற்றியிருந்தார். பலூசிஸ்தான் வழியாகத்தான் அவர் இந்தியாவுக்குள் நுழைந்தார் என்று சொல்கின்றனர். 

 பண்டைய இந்தியாவில் சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின் கீழ் இப்போதிருக்கும் பலூசிஸ்தானின் பகுதி இருந்தது. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து, மூன்றாம் நூற்றாண்டு வரை இப்போது பாகிஸ்தானின், பலூசிஸ்தான் என்றழைக்கப்படும் பகுதி ‘பாரத ராஜா’க்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதாவது இந்து மத சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ்தான் பலூசிஸ்தான் இருந்திருக்கிறது.

ஏழாம் நூற்றாண்டில் அரேபியர்படையெடுப்புக்குப் பிறகு பலூசிஸ்தானுக்குள் இஸ்லாம் நுழைந்தது. ஆம்: அரேபிய படைகள்தான் பலூச் மக்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றின. அங்கே வசித்து வந்த மக்களும் வேறு வழியின்றி இஸ்லாமை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். இப்போது பலூசிஸ்தானில் வசிக்கின்ற மக்களில் 99.09 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்லாமியர்களாக இருந்தாலும் பலூச் இன மக்கள் என்ற உணர்வே அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் தனி நாடு என்பதில் உறுதியாக இருந்தனர். பத்தாம் நூற்றாண்டின் இறுதி வரை பலூசிஸ்தானை அரேபியர்கள் ஆட்சி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பிறகு முகமது கஜினியின் ஆட்சிக் காலத்தில் அவர் வசமிருந்தது பலூசிஸ்தான். 13ம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசின் வசமிருந்து பலூசிஸ்தான். 14ம் நூற்றாண்டில் தைமூரிடம் சென்றது. அதற்குப் பிறகு முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. இப்படி பல ராஜ்ஜியங்களின் கைப்பாவையாகவே பலூசிஸ்தான் இருந்து வந்தது. 

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து பலூசிஸ்தானும் பிரிட்டிஷின் காலனி ஆதிக்கத்துக்குள் உட்பட்டிருந்தது. குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈரானும், பிரிட்டிஷும் பலூசிஸ்தானைப் பல பகுதிகளாகப் பிரித்தனர்.

1877ல் பலூசிஸ்தான் ஏஜென்சியை பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கினார்கள். இந்த ஏஜென்சிக்கு உட்பட்ட பகுதிகள் நேரடியாக பிரிட்டிஷ்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அதே நேரத்தில் பெர்சியப் படைகள் மேற்கு பலூசிஸ்தானை ஆக்கிரமித்திருந்தன. இதை எதிர்த்துப் பல வருடங்களாக பலூசிஸ்தானின் போராளிகள் போராடி வந்தனர்.
இந்தியா சுதந்திரமடைந்து, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் முக்கியமான மாகாணமாக மாறியது பலூசிஸ்தான்.

அப்போதிருந்த பலூச் போராளிகள் தாங்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை... பலூசிஸ்தானியர்கள் என்று குரல் கொடுத்து வந்தனர். 1948ம் வருடமே பலூசிஸ்தான் போராளிகள் பாகிஸ்தானுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்துவிட்டனர். பாகிஸ்தானில் ஒரு நாடு என்ற கொள்கையைக் கொண்டு வந்தது. 

அதனால் பலூசிஸ்தானின் பழங்குடி மக்களுக்கு பாகிஸ்தானின் அரசவையில் பெரிதாக இடம் கிடைக்கவில்லை. இதுபோக பலூசிஸ்தானின் கிளர்ச்சியாளர்களை பாகிஸ்தானின் அரசாங்கம் கடுமையாகத் தண்டிக்கவும் ஆரம்பித்தது. பலூசிஸ்தானின் இயற்கை வளங்கள்தான் அதை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பதற்கு முக்கிய காரணம் என்ற விமர்சனமும் இருக்கிறது.  

1960களிலேயே ‘தனி நாடு’ என்ற கோரிக்கையை முன்வைத்து பலூசிஸ்தானியர்கள் போராட ஆரம்பித்தனர். இச்சூழலில் பாகிஸ்தானிய அரசு ஒரு நாடு கொள்கையைக் கைவிட்டு, பலூசிஸ்தானை ஒரு மாநிலமாக அங்கீகரித்தது. மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை பலூசிஸ்தானுக்கும் வழங்கியது. பாகிஸ்தான் எவ்வளவுதான் பலூசிஸ்தானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றாலும், தனி நாடு என்பதில் உறுதியாகவே இருந்தனர் பலூசிஸ்தான் போராளிகள். இதற்கு பலூச் மக்களும் முழு ஆதரவைத் தந்தனர்.

சில வருடங்களுக்கு முன்பு கூட தனி நாடு கோரிக்கையை முன்வைத்து பலூசிஸ்தானில் ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இதில் 37 சதவீத மக்கள் பாகிஸ்தானிடமிருந்து தனி நாடாக பலூசிஸ்தான் உதயமாக வேண்டும் என வாக்களித்திருக்கின்றனர். சமீபத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரை ஒரு காரணமாக வைத்து, பலூசிஸ்தானின் போராளி மிர் யார் பலூச், கடந்த மே 8ம் தேதி பலூசிஸ்தானைச் சுதந்திர நாடாக அறிவித்தார்.  

சுமார் 3.5 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பலூசிஸ்தானில், 1.5 கோடிப் பேர் வசித்து வருகின்றனர்.இப்பின்னணியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் பாகிஸ்தானின் அரசியல் அமைப்பு.பாகிஸ்தான்... ஒரு புதிரின் சரிதம்!பாகிஸ்தானை இஸ்லாமியர்களுக்கான நாடாகத்தான் ஜின்னா உருவகித்தார்; இஸ்லாமிய நாடாக அல்ல. 

ஜின்னாவின் ஆட்சிக் காலத்தில்  அமைச்சர்களாக இந்துக்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், ஜின்னாவின் துரித மறைவுக்குப் பின் பாகிஸ்தான் திசை மாறியது. 1953ல் முஸ்லிம்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படும் அஹமதியாக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை சிவிலியன் அரசு கையாள முடியாமல் போக முதன் முறையாக நிர்வாக அதிகாரத்தில் ராணுவம் தலையிடும் சூழல் உருவாகியது.

பாகிஸ்தான் மீது அன்று ஆரம்பித்த ராணுவத்தின் பிடி இன்று வரை இரும்புப் பிடியாகத் தொடர்கிறது. கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ராணுவமே நாட்டை நேரடியாக ஆட்சி செய்தது; பிற சமயங்களில் சிவிலியன் ஆட்சி நடந்தாலும்  ராணுவம்தான் திரைக்குப் பின் இருந்து காய்களை நகர்த்தியது. இதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கூட அதன் முழு ஆட்சிக்காலம் வரை நீடித்ததில்லை.

சுதந்திரம் அடைந்து 9 ஆண்டுகள் வரை பாகிஸ்தானில் இடைக்கால அரசியல் அமைப்பே நடைமுறையில் இருந்தது. இந்த குறுகிய காலத்தில் 7 பேர் அதிகாரத்துக்கு வந்து போயினர்.
1953ல் அஹமதியாக்களுக்கு எதிராக நடந்த கலவரம் மதவாத சக்திகளின் பலத்தை அடையாளப்படுத்தியது. மதக்குழுக்களின் ஆதரவு இல்லாமல் அதிகாரத்தை நோக்கி யாரும் செல்ல முடியாது என்ற நிலை உருவாகியது.

இதன் தாக்கம் அரசியலமைப்பு உருவாக்கத்திலும்  வெளிப்பட்டது. முதல் முறையாக நிரந்தர அரசியலமைப்பு 1956ல் உருவாக்கப்பட்டது. பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு என்ற அடையாளத்தைப் பெற்றது. இஸ்லாம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மிதமாக இருந்த மதக் கெடுபிடிகள் ஜியா உல் ஹக்கின் ராணுவ ஆட்சிக் காலத்தில் (1977) முழு விஸ்வரூபம் கொண்டன. ராணுவ  ஆட்சிக்கான தார்மீகத்தை உருவாக்குவதில் மத அமைப்புகளின் ஆதரவு மிக முக்கியமானது என்பதை ஜியா தெளிவாக உணர்ந்திருந்தார்.

பாகிஸ்தானின் சட்ட வரையறைக்குள்  ஷரியா சட்டங்கள் இடம்பெற ஆரம்பித்தன. தனி ஷரியா நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. மத வரி அமல்படுத்தப்பட்டு அதன் மூலம் திரட்டப்படும் நிதி புதிய மதரஸாக்கள் கட்ட பயன்படுத்தப்பட்டன.  ராணுவம் ஒருபுறம், மத அதிகாரம் மறுபுறம் என்ற இரட்டைப் பொறியில் மாட்டிக்கொண்ட முயல் குட்டி போல ஜனநாயகம் செயலிழந்தது.

இப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணியிலும் சூழலிலும்தான், பாகிஸ்தானுக்குள் ஒரு மாநிலமாக இருந்த பலூசிஸ்தான், இப்பொழுது தனி நாடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ளப் போகிறது... சர்வதேச நாடுகள் இதில் என்னவகையான பாத்திரங்களை ஆற்றப் போகின்றன... சீனாவும், அமெரிக்காவும் என்ன செய்யப் போகின்றன... என்பதெல்லாம் இனிவரும் காலத்தில் தெரியும்.ஏனெனில் இதில்தான் இந்தியாவின் அமைதியும் அடங்கியிருக்கிறது!

த.சக்திவேல்