மீண்டும் கொரோனா?
அச்சப்படுவது நியாயம்தான். அந்தளவுக்கு உலகைப் புரட்டி எடுத்திருக்கிறது கொரோனா வைரஸ். இரு லாக் டவுன் போடப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியதெல்லாம் சமீபத்தில் அரங்கேறிய துன்பியல் நிகழ்வுகள்.அனைவருமே மறக்க நினைக்கும் இந்த வேதனை மீண்டும் நிஜமாகப் போகிறதா?
 இதுதான் இப்பொழுது சகலரது மனதிலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காரணம், ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக வரும் செய்திதான்.குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த 2019ல் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகளானது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்குப்பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின.
இந்நிலையில் ஹாங்காங்கில் சளி மாதிரிகள் பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் சமீபத்தில் அதிக அளவை எட்டியுள்ளது. மட்டுமல்ல... ஹாங்காங்கில் கழிவுநீரில் காணப்படும் வைரஸ் அளவு, கொரோனா தொடர்பான மருத்துவ ஆலோசனை, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை... ஆகியவை இத்தொற்று வேகமாகப் பரவி வருவதைக் காட்டுகிறது.
இதுபோல் சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இங்கும் மே முதல் வாரத்தில் வைரஸ் பாதிப்பு முந்தைய வாரத்தை விட 28% அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்து அனைவரையும் உறைய வைத்துள்ளது. எனில் இந்தப் பாதிப்பு இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் எதிரொலிக்குமா?
‘அச்சம் வேண்டாம். போதுமான தடுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியமான உணவை சுகாதாரமான இடங்களில் உண்பதும், குடிநீரை காய்ச்சிக் குடிப்பதும் வரும் முன் காக்கும் நடவடிக்கைகள்’ என அரசு நம்பிக்கை அளித்தபடியே எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே அளவுக்கு அதிகமான பயம் வேண்டாம். அதேநேரம் அளவுக்கு அதிகமான அலட்சியமும் வேண்டாம்.பாதுகாப்பாக இருப்பது நல்லதுதானே?
என்.ஆனந்தி
|