DD Girl!



‘‘நான் ரொம்ப ஹேப்பி... அடுத்து என்ன என்கிற கேள்வி மத்தவங்க கேட்டால் ஓகே. ஆனால், எனக்கு நானே கேட்டுட்டு இருந்தேன். இப்போ மெகா ஹிட் ‘டிடி’ பட பிராண்ட்ல இருக்கேன்...’’ உற்சாகமாக துள்ளிக் குதிக்கிறார் ‘டிடி: நெக்ஸ்ட் லெவல்’ நாயகி கீதிகா திவாரி.

உங்களைப் பற்றி..?

சொந்த ஊர் மத்தியப்பிரதேசம். மும்பையில் செட்டில் ஆகிட்டேன். அப்பா எஸ்.கே.திவாரி பிசினஸ்மேன், அம்மா ரேகா திவாரி ஹவுஸ் வைஃப்.
வீட்ல நான் காலேஜ் படிச்சுட்டு ஏதாவது ஒரு ஒயிட் காலர் வேலையில்தான் இருப்பேன்னு யோசிச்சாங்க. அதிலும் அப்பா நான் பேங்கிங் அல்லது ஏதாவது கவர்மெண்ட் வேலைன்னு யோசிச்சார்.

நானும் படிப்பு முடிஞ்சு பேங்கிங் எக்ஸாம் எழுதி பாஸ் ஆனேன். ஆனால், என்னவோ இது நமக்கான துறை இல்லைனு உள்ளுக்குள்ள ஒரு குரல் சொல்லிட்டே இருந்துச்சு. சின்ன வயதில் இருந்தே எனக்கு சினிமா ஆசை இருந்தது. இதோ ஆசை நிறைவேறிடுச்சு.

முதல் கேமரா முன்பான அனுபவம்..?

மும்பை போனாதான் என்னுடைய கனவுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அப்பாகிட்ட என்ன சொல்லிட்டு கிளம்பறதுன்னு தெரியல. ‘அப்பா எனக்கு ஒரு பிரேக் தேவை. சீரடி போகணும்னு நினைக்கிறேன்’னு சொல்லிட்டுதான் கிளம்பி போனேன். மும்பைல எங்கே பார்த்தாலும் பெரிய பெரிய பேனர்ஸ், ஹோர்டிங்ஸ்... இன்னும் ஆர்வம் அதிகமானது. மாடலிங் வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பிச்சது.

முதல் கேமரா அனுபவம் புடவை விளம்பரம். எனக்கு எப்படிப் போஸ் கொடுக்கணும்னு கூட தெரியாது. கேமரா முன்பு நிற்கிற வரைக்கும் எனக்கு நிறைய தயக்கம் இருந்துச்சு.
ஆனா, முதல் டேக் எடுக்கும்போது என்னவோ இதுதான் நான் என்கிற உணர்வு. அன்னைக்கு முடிவு செய்தேன். அப்பாகிட்ட ‘எனக்கு இந்த 10000, 20000 வேலை எல்லாம் வேண்டாம். நான் இதுதான்’னு சொன்னேன். முதல்ல தயங்கினார். அப்பறம் அவருக்கும் ஓகே.

சந்தானம் & கோ..?

பக்கா ஜாலி டீம். ஒவ்வொரு சீன் எடுத்ததும் டைரக்டர் பிரேம், சந்தானம் சார் ரெண்டு பேருமே ‘எல்லாம் ஓகேவா, உங்களுக்கு ஏதாவது தேவையா’னு கேட்டுட்டே இருப்பாங்க. ஃபிரண்ட்லி கேங். யாஷிகா, கஸ்தூரி மேடம்... இப்படி படம் முழுக்க ஒரு பெரிய பட்டாளமே இருந்தாங்க. எல்லாருமே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதோ பிக்னிக் வந்த மாதிரிதான் இருப்போம். ஒரேயொரு செல்லமான கோபம். முதல் நாள்... முதல் ஷாட் எடுத்த உடனேயே கையில் பெரிய அழுக்கு கவுனை கொடுத்து கோஸ்ட் கெட்டப் போட சொல்லிட்டாங்க!

கௌதம் மேனன், செல்வராகவன்... இருவரிடமும் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

பொறுமை. செல்வராகவன் சார் கூட எனக்கு சீன்ஸ் கிடையாது. ஆனால், கௌதம் சார் கூட நடிக்கும் போது அவருடைய பொறுமையும், பந்தா இல்லாத குணமும் ரொம்ப பிடிச்சிருந்தது.
அவர் ஸ்கிரீன் முன்னாடி நடிக்கிறதை பார்த்தாலே நிறைய அனுபவம் கிடைக்கும். அவ்வளவு பெரிய இயக்குநர்... ஆனா, எந்தக் கேள்வியும் கேட்காமல் டைரக்டர் சொல்றதை கேட்டு ஒரு ஸ்டூடண்ட் மாதிரி வேலை செய்தார்.

பேய் பயம் இருக்கா?

ஹையோ... நான் பயங்கரமா பயப்படுவேன். இதில் ஷூட்டிங் முடிஞ்சு ஒவ்வொரு நாளும் கிளம்பும்போது சுத்தி இருந்த அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ், கோ - ஸ்டார்ஸ் எல்லாருமே ‘உங்க பின்னாடியே பேய் வரும்... பார்த்து பத்திரமா இருங்க... ‘டிடி’ல நடிச்சாலே அந்த அனுபவம் கிடைக்கும்’னு என்னை பயமுறுத்திட்டே இருந்தாங்க. நானும் அதை நம்பி ஒவ்வொரு நாள் நைட்டும் தூங்கும்பொழுது அவ்வளவு பயந்தேன். என்ன வச்சு பயங்கர பிராங்க் செய்தாங்க!

‘லெஜண்ட்’ படத்தின் மூலம் அறிமுகம்..?

என்னைப் பொருத்தவரை வாங்கிய சம்பளத்துக்கு என்னுடைய பெஸ்ட் கொடுத்து நடிச்சென். அதேபோல் எதுவுமே அனுபவம்தான். ஒரு நடிகையா நம்ம வேலை அதுதானே!
ஆனா, இதை வைத்து ஜட்ஜ் பண்றதுதான் ஏத்துக்க முடியலை. இவங்க இப்படிதான் வருவாங்க... எதிர்காலம் இவங்களுக்கு இப்படியெல்லாம் ஒரு பெரிய அந்தஸ்து கொடுக்கும்னு யாருமே கணிக்க முடியாது. அதனால் யாருமே யாரையும் ஜட்ஜ் செய்யாமல் இருந்தால் நல்லா இருக்கும்.

சினிமாவில் உங்க கனவு என்ன?

சூப்பர் டூப்பர் நடிகையா வரணும். எஸ்.எஸ்.ராஜமவுலி சாருடைய படத்தில் அவருடைய ஹீரோயின்சை காட்டுகிற விதமே அவ்வளவு பிரம்மாண்டமா இருக்கும். அப்படியான படங்களில் நடிக்கணும். மணி சார், வெற்றி சார்... இப்படி விஷ் லிஸ்ட் டைரக்டர்ஸ் நிறைய இருக்காங்க. அப்புறம் அஜித் சார் கூட நடிக்கணும். அவருடைய பாசிட்டிவ் வைப் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மட்டுமில்ல அத்தனை நடிகர்கள், இயக்குநர்கள் கூடவும் வேலை செய்யணும்.

அடுத்தடுத்த படங்கள்..?

தமிழில் ஒரு படம் பேசியிருக்காங்க. மேலும் தெலுங்கில் ஒரு படம் நடிச்சிட்டு இருக்கேன்.

ஷாலினி நியூட்டன்