வேற டைலர்... அதே சட்டை!
அமெரிக்க வழியில் இந்தியர்களுக்கு ஆப்பு வைக்கும் பிரிட்டன்
என்னத்த சொல்ல... அதேதான். அதுவேதான். இப்போது பிரிட்டனும் அமெரிக்கா போன்று நடவடிக்கையை எடுத்துள்ளது. வேறொன்றுமில்லை. இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டினர் அந்நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்குவதை விரும்பவில்லை என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. 
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் புதிய கொள்கைகளை அறிவித்துள்ளார். அதில் பல கடுமையான விதிகள் இருப்பதுதான் பதற வைக்கும் விஷயம். பழைய விதிகளின்படி, வெளிநாட்டினர் பிரிட்டனில் ஐந்து ஆண்டுகள் வசித்தாலே நிரந்தரமாகத் தங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், இப்போது அந்த காலவரையறை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் பிரிட்டனில் பத்து ஆண்டுகள் வசித்தபிறகே வெளிநாட்டினர் நிரந்தரமாகத் தங்க அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும்.
*இந்தியர்களுக்குச் சிக்கல்
கடந்த 2023ம் ஆண்டில் வெளியிடப்பட்ட பிரிட்டனின் அதிகாரபூர்வ டேட்டாவின்படி, அங்கு அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டினர் என்றால் அது அமெரிக்கர்களோ அல்லது ஐரோப்பிய,ஆசிய நாட்டினரோ அல்ல. மாறாக இந்தியர்கள்தான் பெருமளவில் இங்கிலாந்தில் வசிக்கின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றுக்காக அந்நாட்டுக்கு சுமார் 2.5 லட்சம் இந்தியர்கள் ஆண்டுதோறும் செல்கிறார்கள். அப்படியிருக்கும் போது பிரிட்டன் அரசு கொண்டு வந்துள்ள இந்தப் புதிய சட்டம் சந்தேகத்துக்கே இடமில்லாமல் இந்தியர்களை அதிகம் பாதிக்கும்.இது மட்டுமின்றி தொழிலாளர் விசாவிற்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தப் பிரிவில் விண்ணப்பிக்க முதலில் ஏ-லெவலுக்கு சமமான படிப்பு அல்லது தகுதி இருந்தால் போதும் என முன்பு கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது கட்டாயம் டிகிரி வைத்திருப்போர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகுதியும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
*பிரதமர் ஸ்டார்மர்
எல்லைகளின் கட்டுப்பாட்டை மீண்டும் அரசு கொண்டுவரும் எனக் குறிப்பிட்ட அந்நாட்டின் பிரதமர் ஸ்டார்மர், அதிகரித்து வரும் குடியேற்றத்தைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுப்போம் என்கிறார். குடியேற்றத்தை எந்தளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளீர்கள் எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளிக்க பிரதமர் ஸ்டார்மர் மறுத்துவிட்டார்.
*உச்சவரம்பு இல்லை
ஒவ்வொரு ஆண்டும் இத்தனை வெளிநாட்டினரை மட்டுமே அதிகரிக்கும் வகையில் உச்ச வரம்பைக் கொண்டு வர வேண்டும் என அங்குள்ள கன்சர்வேடிவ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், அந்த கோரிக்கையையும் பிரதமர் ஸ்டார்மர் ஏற்க மறுத்துள்ளார். ‘இந்த நடவடிக்கையால் குடியேற்றம் கணிசமாகக் குறையும் என்று உறுதியளிக்கிறேன்’ என்று மட்டும் பதிலளித்துள்ளார்.ஏற்கனவே, பிரிட்டனில் வருடாந்திர குடியேற்றம் 10% சரிந்துள்ளது.
இருப்பினும், இங்கிலாந்துக்கு வருவோரில் சுமார் 85% பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராதவர்கள். இதனால் அங்கு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விதிகளை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த நிலையில், இப்போது கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜான்சி
|