AC என்ன செய்யும்..?
‘ஒவ்வொரு வினைக்கும், அதற்கு இணையான ஒரு எதிர் வினை இருக்கும்’ என்பது நியூட்டன் கண்டுபிடித்த இயற்பியல் விதி. இந்த விதி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ ஏசி மின் சாதனத்துக்கு நன்றாகவே பொருந்துகிறது. உதாரணமாக ஏசிக்கும், காலநிலை மாற்றத்துக்கும் இந்த விதி பொருத்தமாக இருக்கிறது.  ஃபிரான்சில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் இந்த பொருத்தத்தை அண்மையில் ஆய்வு செய்திருந்தது. அதில் ‘இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 1 ½ கோடி ஏசி மின் சாதனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 9 மடங்கு உயர்வு’ என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறது. சரி... வேறு என்ன சொல்கிறது?
‘140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் சுமார் 7 சதவீத வீடுகளில் இன்றைய தினத்தில் ஏசி இருக்கிறது. காலநிலை மாற்றம், உயரும் மிடில் க்ளாஸ், ஈ.எம்.ஐ வசதி மற்றும் மின்சார வினியோகத்தின் விரிவாக்கம் எல்லாம் சேர்ந்து ஏசி விற்பனை படுஜோராக நடக்கிறது. காலநிலை மாற்றத்தின் விளைவாக பூமி வெப்பமயமாதலால் ஏசி விற்பனை உயருகிறது என்றாலும் அதே ஏசி-தான் எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்துக்கான முக்கியமான காரணியாகவும் மாறப்போகிறது’ என ஒரு வினைக்கு எதிர் வினையாக என்ன நடக்கும் என பயமுறுத்தும் ஃபிரான்ஸ் செய்தி அமைப்பு அதற்கான புள்ளிவிபரங்களையும் தருகிறது.
‘இன்றைய தேதியில் காலநிலை மாற்றத்துக்கான முக்கியமான காரணியாக இருக்கும் பசுமைக் குடில்களை துவம்சம் செய்யும் வாயுக்களை வெளியிடும் உலகநாடுகளில் இந்தியா 3ம் இடத்தில் இருக்கிறது. பசுமைக் குடில் வாயுக்கள் என்பது கரியமில வாயுக்கள் மற்றும் இன்னபிற வாயுக்களால் ஏற்படுகிறது. உதாரணமாக வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காடு அழிப்புகளால் இந்த கரியமில வாயுக்கள் வெளியாகின்றன.
ஆனால் 2050ம் ஆண்டுகளில் இந்தியா வெளியிடும் பசுமைக் குடில் வாயுக்களில் கால்வாசி இந்த ஏசி இயந்திரங்களால் ஏற்படும்’ என்று சொல்லும் செய்தி அமைப்பு அது ஏன் என்றும் சொல்கிறது.‘ஏசி ஓட மின்சாரம் தேவை. மின்சார உற்பத்திக்கு நிலக்கரி அவசியம். அதே 2050ம் ஆண்டுகளில் இந்தியாவில் ஏசிக்காக தேவைப்படும் மின்சாரம் இந்தியாவின் மின்சார வினியோகத்தில் பாதியை சாப்பிட்டுவிடும்.
இத்தோடு ஏசி இயந்திரமும் வெப்பத்தை வெளியிடுக்கிறது. ஏசி-யில் உள்ள மோட்டார் பாகம் வெளியிடும் வெப்பத்தை கணக்கிட்டால் நகர வெப்பத்தில் இந்த ஏசி வெப்பம் ஒரு செல்சியஸ் டிகிரியையாவது அதிகப்படுத்தும். இந்தியாவில் 2024ம் மற்றும் 2025ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 100 கோடி டன் நிலக்கரி எரிக்கப்பட்டிருக்கிறது.
இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஏன் இந்தியா ஐநாவின் கூல் கூட்டறிக்கையில் மற்ற நாடுகளுடன் கையெழுத்திடவில்லை என்பது புரிகிறது’ என்று சொல்லும் செய்தி அமைப்பு இந்தியாவில் வெப்பத்தால் ஏற்படும் மரணங்கள் பற்றியும் அதிர்ச்சியான தகவலைத் தருகிறது.
‘2012ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை இந்தியாவில் வெப்பத்தால் ஏற்பட்ட மரணங்கள் 11 ஆயிரம். பொதுவாக வெப்ப மரணங்களை மருத்துவர்கள் அது வெப்பத்தால்தான் ஏற்பட்டது என்று சான்றிதழ் அளிப்பதில்லை. ஒருவேளை சான்றிதழ் அளித்தால் அந்த மரணங்கள் இன்னும் அதிகமாகத்தான் இருக்கும்’ என்றும் சொல்கிறது.
டி.ரஞ்சித்
|