JPL!
உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு போட்டி, ஐபில். இதை முன்மாதிரியாக வைத்து இன்னொரு கிரிக்கெட் போட்டி உருவாகியிருக்கிறது. ஆனால், இதில் விளையாடுபவர்கள் யாரும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் கிடையாது. சிறைக் கைதிகள்தான் இந்தப் போட்டியில் விளையாடுகின்றனர்.  ஆம்; ‘ஜெபிஎல்’ என்றால் ‘ஜெயில் பிரீமியர் லீக்’ என்று அர்த்தம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா சிறைதான் கைதிகளின் உடல் மற்றும் மன நலனுக்காக ‘ஜெபிஎல்’லை அறிமுகப்படுத்தி, ஒரு போட்டி கூட முடிந்துவிட்டது.
போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களுக்கு ஐபிஎல்லைப் போலவே பர்ப்பிள் கேப் மற்றும் அதிக ரன்களைக் குவித்தவர்களுக்கு ஆரஞ்சு கேப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. ‘‘நான்கு சுவர்களுக்குள்ளேயே வாழ்ந்து கிடப்பவர்களுக்கு இந்த கிரிக்கெட் போட்டி சுதந்திர உணர்வைக் கொடுக்கும்.
தவிர, சிறைக் கைதிகளின் திறமைகளை விரிவாக்கவும் உதவும்...’’ என்கிறார் மதுரா சிறையின் அதிகாரி. சிறையின் மதில் சுவருக்குள் அமைந்திருந்த மைதானத்தில் ஜெபிஎல் போட்டிகள் நடந்தன. மதுரா சிறையைத் தொடர்ந்து, மற்ற சிறைகளிலும் ஜெபிஎல் போட்டிகள் நடக்கலாம் என்கின்றனர்.
த.சக்திவேல்
|