இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண்களுக்கான Gym!
இது தமிழகத்தின் சாதனை
இன்று மாற்றுத்திறனாளி பெண்கள் ஒவ்வொரு துறையிலும் நம்பிக்கையுடன் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக பாரா விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றனர். ஆனாலும் மாற்றுத்திறனாளி பெண்கள் பயன்படுத்துவதற்கென்று பிரத்யேக ஜிம் இதுவரை எதுவுமில்லை.
 இந்நிலையில் தற்போது அந்தக் குறையை தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போக்கியுள்ளார். அவரது உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான நல்லுலகக் காப்பகத்தின் உள்ளேயே பெருநகர சென்னை மாநகராட்சியானது மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ஜிம்மை இந்தியாவிலேயே முதல் முறையாக உருவாக்கித் தந்துள்ளது.
 சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள காம்தார் நகரில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலையில் இருக்கிறது இந்த ஜிம். ஒருகாலைப் பொழுதில் இந்தப் பிரத்யேக உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றோம்.

மெடில்டா, மேரி, அருண்மொழி, நதியா என ஏழெட்டுப் பெண்கள் தம்பெல்ஸ் போடுவதும், பார்பெல்ஸ் பண்ணுவதுமாக இருந்தனர். இதில் மெடில்டாவும், மேரியும் வீல்சேர் வீராங்கனைகள். இதேபோல் அருண்மொழியும், நதியாவும் பாரா பவர்லிஃப்டர்கள். இவர்கள் அனைவருமே தேசிய அளவில் பதக்கங்களை வென்றவர்கள்.  இந்தக் காப்பகத்தின் ஸ்போர்ட்ஸ் அகடமி தலைவராக இருக்கும் மெடில்டா முதலில் பேசினார். ‘‘எனக்கு சென்னைதான். எட்டு ஆண்டுகளாக இந்தக் காப்பகத்துல இருக்கேன். வீல்சேர் கூடைப்பந்து விளையாட்டுல பங்கேற்று வர்றேன்.
நாங்க எந்த ஆக்டிவிட்டியும் இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் உடல் பிரச்னைகள் வரும். அதனால், நான் விளையாட்டில் சேர்ந்தேன். நிறைய கோப்பைகள், விருதுகள், பரிசுத் தொகைகள் எல்லாம் வாங்கியிருக்கேன். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றிருக்கேன்.
நாங்க விளையாட்டுல இருக்கிறதால ஜிம் ரொம்ப அவசியமானது. ஆனா, வெளி ஜிம்மை அணுகுவது எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரொம்ப சிரமம். பொதுவா, எல்லா இடங்களிலும் ஜிம்மை முதல் அல்லது இரண்டாம் தளத்தில்தான் வச்சிருக்காங்க. நிறைய இடங்கள்ல லிஃப்ட் வசதியும் இல்ல. அதனால், எங்க நிறுவனர் ஐஸ்வர்யா மேடத்திடம் ஜிம் இருந்தால் நல்லாயிருக்கும்னு சொன்னோம். கொஞ்ச நாள்ல நாமே ஜிம் கட்டலாம்னு சொல்லியிருந்தாங்க. இப்ப அந்தக் கனவு நிறைவேறியிருக்கு. எங்களுக்கு உடல் பலத்தைத் தரக்கூடியது ஜிம்தான்.
அதனால், இந்த ஜிம் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு. இங்க விளையாட்டு வீராங்கனைகள் 10 முதல் 15 பேர்வரை இருக்காங்க. எல்லோருமே தேசிய, சர்வதேச அளவுல சாதிச்சவங்க...’’ என்கிற மெடில்டா, தமிழ்நாடு வீல்சேர் பேஸ்கட் பால் அசோசியேஷன் தலைவராகவும் இருக்கிறார். அவரைப்போலவே மேரியும் வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைதான். இதுதவிர அவர் ஈட்டி எறிதல், குண்டு எறிதல். வீல்சேர் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் கோலோச்சுகிறார்.
‘‘மாநில அளவுல ஈட்டி எறிதல், குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கங்கள் வாங்கியிருக்கேன். இனி தேசிய அளவுல போகணும்.வீல்சேர் கூடைப்பந்தினைப் பொறுத்தவரை ஏழு தேசிய போட்டிகள்ல விளையாடி இருக்கேன்.
தமிழ்நாடு அணிக்காக ஐந்து தங்கப்பதக்கம் வாங்கியிருக்கேன். எனக்கு குடும்பம் கிடையாது. இங்க வந்தபிறகு நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. விளையாட்டு தவிர்த்து இங்கேயே டெய்லரிங் வேலை செய்றேன். என்னுடைய இலக்கு சர்வதேச அளவுல பதக்கங்கள் வெல்லணும் என்பதுதான்...’’ என தம்ஸ்அப் காட்டி சிரிக்கிறார், மேரி.
அவருக்கு அருகில் தம்பெல்ஸ் போட்டபடி இருந்த பவர்லிஃப்டர் அருண்மொழி, திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகாவிலுள்ள மடத்துப்பட்டி என்கிற குக்கிராமத்திலிருந்து வந்தவர். தமிழ் பாடத்தில் எம்ஏ, பி.எட் படித்துள்ள இவருக்கு பாரா ஒலிம்பிக் பதக்கம்தான் கனவு.
‘‘நான் ஆறு ஆண்டுகளாக விளையாட்டுல இருக்கேன். இந்த நல்லுலகக் காப்பகத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகளாச்சு. இந்த ஜிம் தொடங்கப்பட்டதில் இருந்து பயிற்சி செய்றேன். இதுக்கு முன்னாடி மதுரையில் நார்மல் ஜிம்லதான் வொர்க்அவுட் பண்ணினேன். ஆனா, இதேபோல் அங்கே கிடையாது. ஆரம்பத்தில் குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் பண்ணிட்டு இருந்தேன். திருநெல்வேலியில் நான் இருக்கிற கிராமத்துல இதுகுறித்து எல்லாம் விழிப்புணர்வு கிடையாது.
அதனால், நான் பேப்பரைப் பார்த்து மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியாளரைத் தொடர்பு கொண்டு மதுரைக்கு வந்தேன். அவரிடம் ஆறு ஆண்டுகள் பயிற்சி எடுத்தேன். மாநில அளவில் 30 தங்கப்பதக்கம் வாங்கினேன். தேசிய அளவில் ஒரு வெண்கலப்பதக்கம் ஜெயிச்சேன். மாநில அளவுல நான் சிறப்பாக இருந்தாலும் தேசிய அளவுல பெரிசா வரமுடியல.
அதனால், பயிற்சியாளர் விஜயசாரதி சார், ‘சென்னைக்கு வாங்க. வேறு விளையாட்டில் சிறப்பாகப் போகலாம்’னு சொன்னார். அப்படியாக பவர்லிஃப்டிங் மாறினேன். இதில் தேசிய அளவுல மூன்று தங்கப் பதக்கம் வென்றிருக்கேன்.
முதலில் 72 கிலோவில் தங்கப்பதக்கம் வென்றேன். இந்த ஆண்டு 13 கிலோ கூட்டி 85 கிலோ பிரிவில் கலந்துக்கிட்டேன். இதுலயும் தங்கப்பதக்கம் ஜெயிச்சேன். இனி சர்வதேச அளவுல போகணும். அதுக்கான பயிற்சியில் இருக்கேன்.
இதுவரை பாரா ஒலிம்பிக்ல பங்கேற்கணும்னு மட்டும்தான் ஆசையிருந்தது. இந்த ஜிம் வந்தபிறகு தினமும் பயிற்சி செய்யமுடியுது. அதனால், நிச்சயம் பாராஒலிம்பிக்ல தங்கப்பதக்கம் அடிப்பேன்னு எண்ணம் வந்திருக்கு...’’ என நம்பிக்கையுடன் அருண்மொழி சொல்ல, மற்றொரு பவர்லிஃப்டரான நதியா தொடர்ந்தார். ‘‘நான் அருப்புக்கோட்டை.
இங்க வந்து மூணு ஆண்டுகளாச்சு. நான் முன்னாடி அத் லெடிக்ல இருந்தேன். குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் மூன்றிலும் இருந்தேன். மாநில அளவுல என்னுடைய கேட்டகிரியில் மூன்றிலும் தங்கப்பதக்கம் வாங்கினேன். ஆனா, தேசிய அளவுல நான்காவது இடமே பிடிக்க முடிஞ்சது. இதனால், என் பயிற்சியாளர் பவர்லிஃப்டிங் மாத்தினார். அதுல தேசிய அளவுல வெண்கலப் பதக்கம் வென்றேன். ஆரம்பத்துல 65 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வாங்கினேன். இப்ப 2025ல் நொய்டாவில் 80 கிலோ எடை தூக்கினேன். இதிலும் வெண்கலப் பதக்கம் வென்றேன்.
ஜிம் வொர்க்அவுட் இருந்தால்தான் பவர்லிஃப்டிங்கில் பிரகாசிக்க முடியும். அதனால், இந்த ஜிம் எனக்கு ரொம்ப உறுதுணையாக இருக்கு. ஜிம்மிற்கு இப்ப ரொம்ப தூரம் அலையவேண்டியதும் இல்ல. எந்த சிரமமும் இல்லாமல் காலையும், மாலையும் பயிற்சி செய்றேன். இப்ப தேசிய அளவுல போயிருக்கேன். அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் ஆகியவற்றில் பதக்கம் வெல்லணும்...’’ என மனஉறுதியுடன் சொல்கிறார் நதியா.
தொடர்ந்து நல்லுலகக் காப்பகத்தின் நிறுவனர் டாக்டர் ஐஸ்வர்யா ராஜ்யலக்ஷ்மி, இந்த ஜிம் உருவான கதையை நம்மிடம் பகிர்ந்தார். ‘‘இந்த காப்பகம் வீடற்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்காக தொடங்கப்பட்டது.
இப்ப 50 மாற்றுத்திறன் பெண்கள் இந்தக் காப்பகத்தில் இருக்காங்க. இவங்க எல்லாம் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வாழ்வாதாரம் தேடி வந்தவங்க. இதில் எங்களுக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் டீம் சிறப்பாக உருவாகி இருக்கு.
இவங்க தேசிய, சர்வதேச அளவுல போய் ரெகுலராக பதக்கங்கள் ஜெயிக்கிறாங்க. ஆனா, இந்தப் பெண்களுக்கு ஃபிட்னஸுக்குப் போகணும்னா எங்கேயும் ஜிம் கிடையாது. எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் மிகப்பெரிய ஆக்ட்டிவிட்டி.இதில் மாற்றுத்திறனாளிகள் என்றில்ல. எல்லோருக்குமே ஃபிட்னஸுக்கு ஜிம் தேவை.
விளையாட்டுல இருந்தாலும் இல்லைனாலும் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம். அதிலும் மாற்றுத்திறன் பெண்களுக்கு மூவ்மெண்ட் ரொம்பவே முக்கியம். தவிர, அவங்க மனஅழுத்தம் வராமல் தங்களை பாதுகாத்துக்க உடற்பயிற்சி அவசியம்.
ஆனா, ஒரு பிரத்யேக ஜிம் இல்லாம எங்கள் பிள்ளைகள் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இதுக்காக அவங்க நேரு இன்டோர் ஸ்டேடியம்தான் போக வேண்டியிருந்தது. அதுவும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ஜிம் கிடையாது. சரி, வீட்டுக்கு அருகில் ஜிம் போகணும்னா அது மாடியில் இருக்கு. ஃபிட்னஸ்தான் இவங்களுக்கான பதக்கங்களை முடிவு செய்யும். நல்ல ஃபிட்னஸ் இருந்தால் எளிதாக தங்கப்பதக்கம் வாங்குவாங்க.
இந்நிலையில் நமக்கென ஒரு ஜிம் தனியாக இருந்தால் நல்லாயிருக்கும்னு ரொம்ப நாளாக எண்ணம் இருந்தது.இந்நிலையில் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் துணை முதல்வர் உதயநிதி சார், அவரின் பிறந்தநாள் அன்று எதேச்சையாக எங்க காப்பகம் வந்தார். எங்க மாற்றுத்திறன் பெண்களுக்கு இனிப்புகள், உடைகள் எல்லாம் கொடுத்தார். அப்பதான் அவர் அமைச்சராக அறிவிக்கப்பட்டிருந்தார். நாங்க உடனே எங்களுக்கென ஒரு ஜிம் வேணும்னு கோரிக்கை வைச்சோம்.அந்நேரம் இந்த நல்லுலகக் காப்பகத்தின் கட்டடமும் முடிவுபெறுகிற நிலையில் இருந்தது. சரி, இந்தக் கட்டடத்திற்கு உள்ளேயே பண்ணலாம்னு பேசி அங்கிருந்து ஜிம்மிற்கான வேலைகள் தொடங்குச்சு. இது துணை முதல்வர் உதயநிதி சாரால்தான் நடந்தது. கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இந்தக் கட்டடத்தை அவர்தான் திறந்து வைத்தார்.
ஜிம்மையும் பார்வையிட்டு வாழ்த்தினார். கடந்த ஒன்றரை ஆண்டுகள்ல எங்கள் பிள்ளைகள் நிறைய பதக்கங்கள் வாங்கினாங்க. இந்தப் பிள்ளைகள் இந்தக் காப்பகத்திலிருந்துதான் வந்தவங்கனு அவருக்கு நன்றாகவே தெரியும்.
அதனால், எந்த நிலையில் ஜிம் பணிகள் இருக்கின்றன என்பதை அறிய அவர் அலுவலகத்திலிருந்து ஃபாலோஅப் செய்துகிட்டே இருந்தார். கூடவே, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் சாரும் ரொம்ப சப்போர்ட். என்ன வேணும்னு கேட்டுக் கேட்டு செய்தாங்க. ஏசி, ஃபேன் எல்லாம் போட்டுக் கொடுத்தாங்க. இப்ப எங்க பிள்ளைகளில் சிலர் தேசிய, சர்வதேச அளவில் போவதைப் பார்த்து மற்றவர்களுக்கும் ஆசை வந்திருக்கு. இப்போது அரசும் பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்துது. எங்க பிள்ளைகளே ஒரு லட்சம், ரெண்டு லட்சம், ஐந்து லட்சம் ரூபாய்னு பரிசுத்தொகை வாங்கியிருக்காங்க.இதனால், அவர்களைப் போல தாங்களும் விளையாட்டில் சாதிக்கணும், உடல்நலத்தைப் பேணணும் என்கிற விழிப்புணர்வும் வந்திருக்கு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...’’ நெகிழ்கிறார் டாக்டர் ஐஸ்வர்யா ராஜ்யலக்ஷ்மி.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்:வின்சென்ட் பால்
|