இனிமே நான் உன்னை லவ் பண்ணப்போறதில்ல..!
நீங்கள் இணையவாசியாக இருந்தால் ப்ரீத்தி முகுந்தன் அழகை ரசித்திருக்க மாட்டீர்கள் என்பதை நம்புவது கடினம். கவின் நடித்த ‘ஸ்டார்’, சாய் அபயங்கரின் ‘ஆச கூட...’ ஆல்பம் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ப்ரீத்தி. சென்னையில் பிறந்து திருச்சியில் வளர்ந்த இந்த அழகு மங்கை இப்போது நடிப்புக்காக சென்னையில் நங்கூரம் போட்டுள்ளார்.
தமிழில் ‘இதயம் முரளி’, தெலுங்கு, மலையாளம் என பிசியாக இருக்கும் ப்ரீத்தி முகுந்தனை கத்திரி வெயிலுக்கு மத்தியில் ஒரு ஜூஸ் ஷாப்பில் சந்தித்தோம்.
நீங்கள் என்ஐடி மாணவி என்பதால் இந்தக் கேள்வி. படிப்பு விஷயத்தில் நீங்கள் புலியா? சினிமா நடிகையானது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா? பிரில்லியண்ட் ஸ்டூடண்ட்டான்னு எனக்குத் தெரியவில்லை. ஆனால், நல்லா படிச்சாதான் என்ஐடி, ஐஐடியில் சீட் கிடைக்கும். அப்படி ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூல தூங்காமல் கண்விழிச்சு கஷ்டப்பட்டு படிச்சதாலதான் மெரிட்ல சீட் கிடைச்சது. 14 லட்சம் பேர்ல 5386வது ரேங்க் வாங்கிதான் திருச்சி என்ஐடியில் சேர்ந்தேன்.

நடிகையானது தற்செயல் என்று சொல்லலாம். எனக்கு மாடலிங் பிடிக்கும். அதற்கு காரணம் என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் ‘நீ மாடலா’ன்னு கேட்பாங்க. அதிலிருந்து மாடலிங் டிரை பண்ணினேன். மாடலிங்ல நல்ல வரவேற்பு கிடைச்சது.  சில விளம்பரங்கள் பண்ணினேன். அதைப் பார்த்து சினிமா வாய்ப்பு வந்துச்சு.நிறையப் பேர் ஹீரோயினா நடிக்கிறீங்களான்னு கேட்டார்கள். நடித்தால் என்ன என்ற ஆர்வம் வந்துச்சு. ஆரம்பத்தில் நடிகையாகணும் என்ற திட்டம் கிடையாது. இப்போது சினிமா என்னுடைய ப்ரொஃபஷனாக மாறியதால் முழுநேர நடிகையாக மாறிவிட்டேன். தமிழில் உங்கள் முதல் படமான ‘ஸ்டாரி’ல் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
மாடலிங் நிறையப் பண்ணியிருக்கிறேன். சினிமா இண்டஸ்ட்ரி பற்றி பெரியளவில் எதுவும் தெரியாத நிலையில்தான் சினிமாவில் நடிக்க வந்தேன். முதன் முதலாக ‘ஸ்டார்’ வாய்ப்பு கிடைச்சதும் நடிப்பு என்றால் என்ன என்று தெரிஞ்சுக்கிட்டேன்.
மாடலிங் துறைக்கும், சினிமாவுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. மாடலிங் பொறுத்தவரை குறிப்பிட்ட தயாரிப்பை குறித்து நாலு டயலாக் சொல்லிவிட்டு க்யூட் எக்ஸ்பிரஷன் காண்பிப்பது அல்லது நளினமாக சில நடன அசைவுகள் கொடுத்தால் போதும். சினிமா என்பது அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி அந்தக் கதாபாத்திரமாகவே மாறி யதார்த்தமாக, மிகைப்படுத்தாம ரசிகர்கள் ஏற்கும்படி பெர்ஃபாமன்ஸ் பண்ணுவது முக்கியம்.
அந்த வகையில் ‘ஸ்டார்’ படத்துல நிறையவே கத்துக்கிட்டேன்.
இயக்குநர் இளன் சார் கேரக்டருக்கு ஏற்ப என்னை மோல்ட் பண்ணினார். ஆக்டிங் கோச் மாய கிருஷ்ணன் சப்போர்ட்டாக இருந்தார். அந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் சினிமா எடுப்பது எவ்வளவு கஷ்டம், அதில் பலருடைய உழைப்பு இருக்கிறது என்று தெரியவந்துச்சு. ‘இதயம் முரளி’யில் அதர்வாவுடன் நடித்த அனுபவம் எப்படி?
அதர்வா நைஸ் பர்சன். எப்போதும் சிரிச்ச முகத்துடன் பழகக்கூடியவர். ஆர்ட்டிஸ்ட் மாதிரி இல்லாமல் ஃப்ரெண்ட் மாதிரி பழகுவார். சிறந்த நடிகர். அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி. ‘இதயம் முரளி’ ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் க்யூட் டைரக்டர்.
சக நடிகை கயாத் லோகர் பற்றி சில வார்த்தைகள்?
நல்ல ஃப்ரெண்ட். அழகாக நடிக்கக்கூடிய, வளர்ந்துவரும் நடிகை. அவரை போட்டியாளராக பார்க்கவில்லை. நல்ல நண்பராக, சக நடிகையாக மட்டுமே பார்க்கிறேன். நல்ல ஃப்ரெண்ட் என்பதால் செட்ல ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம். நிறைய விஷயங்களைப் பேசுவோம்.
தொடர்ந்து டபுள் ஹீரோயின் படங்களில் நடிக்கிறீர்கள். அதை எப்படி பார்க்கிறீர்கள்?
டபுள் ஹீரோயின் படங்களில் தொடர்ந்து நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. ‘ஸ்டார்‘, ‘இதயம் முரளி’ ஆகிய இரண்டு படங்களில்தான் டபுள் ஹீரோயின். தமிழில் இரண்டு படங்கள், தெலுங்கு, மலையாளம் என நான்கு படங்கள் செய்கிறேன்.
அது எல்லாமே சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்ட்.டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிப்பதில் எனக்குத் தயக்கம் கிடையாது. கதைக்குப் பொருத்தமான கேரக்டராக இருந்தால் கவலையில்லை. கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கணும். மற்றபடி டபுள் ஹீரோயின், சிங்கிள் ஹீரோயின் என்று பிரித்துப் பார்க்கமாட்டேன். கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் டபுள் ஹீரோயின் படங்கள் பண்ண ரெடியாக இருக்கிறேன். தெலுங்கு சினிமா அனுபவம் எப்படி இருந்தது? தெலுங்கு ரசிகர்களிடம் உங்களுக்குப் பிடித்தது?
என்னுடைய சினிமா பயணம் ‘ஓம் பீம் புஷ்’ என்ற தெலுங்கு படத்தில் ஆரம்பிச்சது. அது சூப்பர் ஹிட்டாச்சு. அதன் பிறகு ‘கண்ணப்பா’. தெலுங்கு மக்கள் சினிமாவை கொண்டாடுபவர்கள் என்பதால் நல்ல வரவேற்பு கிடைச்சது.
முதல் படத்தில் என்னுடைய ஸ்கிரீன் அப்பியரன்ஸ் கொஞ்சமாகத்தான் இருக்கும்.ஆனாலும் அங்குள்ள ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள் என்று தெரிஞ்சது. சோஷியல் மீடியாவுல நிறைய மீம்ஸ் ஷேர் பண்ணினார்கள். என்னுடைய காட்சிகளை கட் பண்ணி இன்ஸ்ட்டாவுல போஸ்ட் பண்ணியிருந்தாங்க. தெலுங்கு மக்கள் பற்றிச் சொல்வதாக இருந்தால் அவர்களுக்கு ஒரு நடிகையைப் பிடித்துவிட்டால் மகாலட்சுமி மாதிரி பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க என்பது என்னுடைய கருத்து. கொண்டாடுவாங்க, நல்ல விதமாக சப்போர்ட் பண்ணுவாங்க. தொடர்ந்து தெலுங்கில் படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன்.
‘ஆச கூட...’ ஆல்பத்தில் சாய் அபயங்கர் உடன் வேலை செய்த அனுபவம் எப்படி?
சாய் அபயங்கர் டீம்ல இருந்து கூப்பிட்டு பாடல் ப்ளே பண்ணினார்கள். கேட்டதும் சூப்பர் ஹிட்டாகும்ன்னு தோணுச்சு. அதன் டான்ஸ் மூவ்மெண்ட் எனக்குப் பிடிக்கும். ஸ்டைலிஷ்ஷாக இருக்கும். அந்தப் பாடல் உலகம் முழுவதும் சென்றடைந்ததில் சந்தோஷம். சாய் அபயங்கர் வரிசையா நிறைய ஹிட்ஸ் கொடுத்து வருகிறார்.
அவருக்கு என் வாழ்த்துகள். ‘ஸ்கூல்படி...’ மாதிரி இருவரும் செட்ல ஜாலியா ரகளை பண்ணுவோம். அந்த அனுபவம் மறக்க முடியாது.‘இதயம் முரளி’ டைட்டில் அறிவிப்பு வீடியோவில் ‘இனிமே நான் உன்னை லவ் பண்ணப்போறதில்ல’ன்னு உங்களிடம் தமன் சொல்லுவார். நிஜத்தில் அதுபோல் உங்களிடம் யாராவது சொல்லியிருக்கிறார்களா? காதலில் வீழ்வதும், விழாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். எல்லோருக்கும் ஒரே விஷயம் ஒத்துப்போகும்னு சொல்ல முடியாது. அவரவர் அனுபவம் பொறுத்து ஒப்பீனியன் வெச்சிருப்பாங்க. எனக்கு காதலில் விழ விருப்பமில்லை என்று எந்த ஒப்பீனியனும் இல்லை.
முகமூடிகளை அணியும் சமூக ஊடக உலகில் நாம் வாழ்கிறோம். நிஜ ப்ரீத்தி யார்?
எனக்கு எந்த முகமூடியும் கிடையாது. நான், நானாகவே இருக்கிறேன். எனக்கு முகமூடி அணிந்து பழகத் தெரியாது. நீங்க பேசிக்கொண்டிருக்கும் ப்ரீத்திதான் நிஜ ப்ரீத்தி. எப்போதும் நான் என் சுய அடையாளத்துடன் இருக்கவே விரும்புகிறேன். எவ்வளவு பெரிய நடிகையாக மாறினாலும், பேர், புகழ் அடைந்தாலும் கால் தரையில்தான் இருக்கணும். நான் நானா கவே இருப்பேன். வந்த வழியை மறக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து.
சினிமா தவிர வேறு என்ன பிடிக்கும்?
சினிமா தவிர எனக்கு டான்ஸ் பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். சின்ன வயசுலேயே கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்கிட்டதால் வித்தியாசமான ஸ்டைலில் டான்ஸ் ஆடணும் என்பது ஆசை. கல்லூரி நாட்களில் வித்தியாசமான நடன நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கிறேன். டான்ஸ் என்னுடைய பேஷன். அத்துறையில் சாதிக்க ஆர்வமாக இருக்கிறேன். சாகச பயணங்கள் பிடிக்கும். சினிமாவுல எடிட்டிங், ஸ்டைலிங் பிரிவில் ஆர்வம் உண்டு. ஸ்டைலிங்ல எனக்கு என்று தனித்துவம் ஏற்படுத்தணும்னு ஆர்வம் இருக்கு.
எஸ்.ராஜா
|