Vertical சினிமா!



தொழில் நுட்பம் வளர்ச்சியடையும்போது கதை சொல்லும் மற்றும் நுகரும் முறைகளும் வளர்ச்சியடையும். தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் அனுபவத்தை வீட்டிலேயே பெறமுடியும் என்று டிஜிட்டல் உலகம் சாதித்துக் காட்டியுள்ளது. 
ஓடிடி தளங்கள் உலகளாவிய பார்வையாளர்களை உடனடியாகச் சென்றடைய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு, படைப்பாளிகளுக்கு அதிக படைப்பு சுதந்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அந்தவகையில் ஆண்ட்ராய்டு போன் பயன்பாட்டாளர்களுக்காகவே ‘வெர்டிக்கல் சினிமா’ என்ற முறையில் உலகெங்கும் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அளவில் முதல் படைப்பாக தமிழில் ‘யுகம்’ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டைரக்‌ஷன் பொறுப்பை ஏற்று நாயகனாகவும் நடித்துள்ளார் குழந்தைவேலப்பன். நாயகியாக நர்மதா பாலு நடித்துள்ளார். இவர்கள் படத்தில் மட்டும் ரீல் ஜோடியல்ல; ரியல் லைஃபிலும் ஜோடிதான்!மொத்தப் படத்தையும் தங்கள் வீட்டிலேயே நடத்தியுள்ளார்கள். இணையத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ரியல் ஜோடியை சந்தித்தோம்.

சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?

குழந்தைவேலப்பன்: சொந்த ஊர் மதுரை. அப்பா சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ வெச்சிருந்தார். சிறுவயதில் விளையாடுவதற்கு என்னுடைய கையில் பொம்மை
களைவிட கேமராதான் அதிகம் இருந்திருக்கும். அது சினிமா மீதான ஈர்ப்பை தூண்டுச்சு. காலேஜ் போனாலும் சினிமா ரிலேட்டடாக படிக்கணும்னு முடிவு பண்ணி விஸ்காம் சேர்ந்தேன். கோயமுத்தூரில் காலேஜ் முடிச்சதும் வீட்டுக்குக் கூடப் போகாமல் நேராக சென்னைக்கு ரயில் ஏறினேன்.

ஆனால், நான் நினைச்சபடி உடனே அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர முடியவில்லை. பெரிய இயக்குநர்களின் வீட்டு வாசலில் பெரிய க்யூ இருந்துச்சு. அசிஸ்டெண்ட்டாக சேருவதற்கு உதவியாக இருக்குமே என்று ‘குற்றவாளி’ என்ற குறும்படம் எடுத்தேன். ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், சிங்கம்புலி, எஸ்.எஸ்.ஸ்டேன்லி என சில இயக்குநர்களுக்கு ஏவிஎம்-மில் ஸ்கிரீன் பண்ணினேன்.

அங்கிருந்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் ‘கதை இருக்கா’ன்னு கேட்டார். ‘நான் உதவி இயக்குநராக சேருவதற்காகத்தான் இந்த குறும்படம் எடுத்தேன்’  என்றதும், ‘உனக்கு சினிமா நல்லா வருது. டைரக்டராகணுமா, உதவி இயக்குநராகணுமா’ என்று கேட்டு ‘கதை ரெடி பண்ணு’ன்னு சொன்னார். அப்படிதான் என்னுடைய முதல் படம் ‘ஆண்மை தவறேல்’ வந்துச்சு.

நர்மதா பாலு: எனக்கு சொந்த ஊர் கோயமுத்தூர். படிச்சது விஸ்காம். நடிப்புல ஆர்வம் அதிகம். பிரபல சீரியலில் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால், வீட்டிலிருந்து சப்போர்ட் கிடைக்காததால் மீண்டும் ஊருக்கு ‘யு’ டர்ன் அடிச்சேன். தூர்தர்ஷனில் சில காலம் எடிட்டராக வேலை பார்த்தேன். மீண்டும் நடிக்கலாம் என்ற முயற்சியில் ‘யாக்கை’ ஆடிஷனில் கலந்துக்கிட்டேன். அதுல ஒரு கேரக்டர் பண்ணினேன்.

ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறியது எப்படி?

குழந்தைவேலப்பன்: என்னுடைய இரண்டாவது படம் கிருஷ்ணா நடிச்ச ‘யாக்கை’. ஷூட்டிங்ல நர்மதாவுக்கு ஃப்ரேம் வைக்கும்போதே மனசுக்குள்ளேயும் ஃப்ரேம் போட்டு மாட்டிவெச்சுட்டேன். நர்மதாவின் கண் அசைவுகள் என்னைப் பிடிச்சிருக்குன்னு பல நேரங்களில் சொல்லும். ஆனால், அவர் வீட்ல சினிமாக்காரனே வேண்டாம் என்ற முடிவில் இருந்தாங்க. இரண்டு வருஷம் சமாதானம் செஞ்சபிறகுதான் க்ரீன் சிக்னல் கிடைச்சது.  

நர்மதா பாலு: அவர் ஐ லவ் யூ சொல்லும்போது ஆச்சர்யம், அதிர்ச்சி எதுவும் வரல. அவர் எப்படியும் லவ் ப்ரபோஸ் பண்ணுவார்னு எனக்குத் தெரிஞ்சது. அவர் சொல்லட்டும்னு காத்திருந்தேன். இரு வீட்டிலும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் சம்மதம் கிடைச்சது.

அது என்ன ‘வெர்டிக்கல் சினிமா’?

குழந்தைவேலப்பன்: 2008ம் ஆண்டு உலகமே ஸ்மார்ட் போனுக்கு மாறிடுச்சு. ஃப்யூச்சர்ல போனுக்கான கன்டன்ட் தயாரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்னு தோணுச்சு. இரண்டு படங்கள் பண்ணியிருந்தாலும் ‘வெர்டிக்கல் சினிமா’ வருங்காலங்களில் தவிர்க்க முடியாது என்று தோணுச்சு.2023ம் ஆண்டு கேன்ஸ் ஃபெஸ்டிவலில் கலந்துகொண்டேன். அங்கு ‘வெர்டிக்கல் த ஃப்யூச்சர்’ என்ற செமினார்ல கலந்துக்கிட்டேன். 

அங்கு, ‘மனிதன் மூளையை பயன்படுத்துவதைவிட போனை அதிகம் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டான். அவனுடைய எல்லா மெமரியையும் போனுக்கு மாத்திட்டான். அன்றாட வாழ்க்கைக்கான எல்லா தேவையையும் போனுக்கு மாத்திட்டான்’ என்ற கருத்தை முன்வைத்தார்கள்.

மனிதனிடமிருந்து மாறாத ஒரே விஷயம் சினிமா. போனுக்கான தயாரிப்பாக சினிமா மாறாமல் இருந்துச்சு. காரணம்,போனில் பார்க்கும் அனைத்து ஆப்களும் வெர்டிக்கலாக இருக்கும். ஆப்ல படம் பார்ப்பதாக இருந்தால் ஹரிசான்டலாகத்தான் - போனை திருப்பி படுக்க வைப்பதுபோல் வைத்துதான் - பார்க்கிறார்கள். 

அடுத்த தலைமுறை போனை திருப்பாமல் பார்க்கக்கூடிய தலை முறையாக இருக்கும். அந்த சோம்பேறித்தனத்தை எப்படி மூலதனமாக பயன்படுத்தமுடியும் என்பதுதான் ‘வெர்டிக்கல்’ சினிமாவின் ஐடியா.அவர்கள் முன் வைத்த கருத்து என்னுடைய கருத்தியலுக்கு ஒத்துப்போனதால் ‘வெர்டிக்கல் சினிமா’ முறையில் ‘யுகம்’ எடுத்தேன்.

வெர்டிக்கல் சினிமா என்பது பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ மாதிரி. திரும்ப முடியாது. நகர முடியாது. அந்த ஃப்ரேமுக்குள் நடிக்கணும். அனுபவம் உள்ளவர்கள் நடித்தால் அவர்களுக்கு ஸ்பேஸ் தேவைப்படும். வெர்டிக்கலில் அதற்கு ஸ்பேஸ் இருக்காது.

நர்மதா: திருமணத்துக்குப் பிறகு டிசைனிங், எடிட்டிங் என சில வேலைகள் செய்தாலும் மனசுக்குப் பிடிச்ச வேலையை செய்யாமல் இருக்கிறோமோனு தோணுச்சு. ஏனெனில் நடிப்புதான் என்னுடைய பேஷன். என் விருப்பத்தை கணவரிடம் சொன்னதும் ‘யுகம்’ வாய்ப்பை என்னை நம்பி கொடுத்தார்.படம் பார்த்துவிட்டு நிறையப் பேர் பாராட்டும்போது கணவரின் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டதாக நினைக்கிறேன்.

இனிமேல் இதுதான் என்னுடைய ரூட்னு நம்பிக்கையும் வந்திருக்கு.குழந்தைவேலப்பன்: ஆரம்பத்தில் வேறு நடிகர்களை நடிக்க வைச்சுட்டு நான் டைரக்‌ஷன் பண்ணுவதாக மட்டுமே இருந்தேன். 

கன்டன்டுக்கு ஏற்ப நிஜ ஜோடி நடிக்கும்போது இம்பேக்ட் அதிகமாக இருக்கும்னு தோணுச்சு. அதுமட்டுமல்ல,இது சொந்த தயாரிப்பு. படம் முழுவதும் எங்கள் வீட்டிலேயே எடுத்தோம்.நர்மதா நடிப்பதோடு, டைரக்‌ஷன் டிப்பார்ட்மெண்டிலும் நிறைய பங்களிப்பு செய்தார். 4 நாட்களில் எடுக்கலாம்னு நினைச்சு ஆரம்பிச்ச படம் முடிப்பதற்கு 11 நாள் ஆயிடுச்சு.

டெக்னிக்கல் விஷயத்தில் காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுத்தோம். வெர்டிக்கல் எலிகேம் கேமரா சென்னையில் இல்லை. மும்பையிலிருந்து வரவழைத்தோம்.

டொரண்ட்டோ ஃபிலிம் ஃபெஸ்டிவல், இத்தாலி ஃபெஸ்டிவல், மெல்போர்ன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் உட்பட பல விழாக்களில் படத்தை திரையிட்டோம். இந்திய அளவில் வெர்டிக்கல் கேட்டகரியில் கலந்துகொண்ட ஒரே படம் ‘யுகம்’ மட்டுமே. சிறந்த நடிகை, சிறந்த படம்னு விருது கிடைச்சது.

அடுத்து என்ன?

நர்மதா: படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைச்சது. ‘யுகம் 2’ எடுக்கப் போகிறோம். ‘வெர்டிக்கல் லா சினிமாஸ்’ என்ற கம்பெனியை உருவாக்கியுள்ளோம். தொடர்ந்து பல வெர்டிக்கல் படைப்புகளை உருவாக்கப் போகிறோம்.

குழந்தைவேலப்பன்: வெர்டிக்கல் சினிமா என்பது சினிமாவை மாற்றும் முயற்சி அல்ல. இது போனுக்குரியது. உலகம் முழுவதும் வெர்டிக்கல் ஃபெஸ்டிவல் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்துகிறார்கள். அடுத்த ஒரு வருடத்தில் ஓடிடி தளங்கள் ‘வெர்டிக்கல் சினிமா வேண்டும்’ என்று கேட்கும். அப்படியொரு டிமாண்ட் நிச்சயம் ஏற்படும்.

எஸ்.ராஜா