பிரியாமலிரு... பிரியமாகயிரு...



அகத்தின் மொழி கவிதை, ஆன்மாவின் மெல்லிய குரல் கவிதை, உள்ளத்து உணர்ச்சிகளை செறிவாகவும் சுருக்கமாகவும் சொல்வதே கவிதை என பலருக்கும் கவிதை சார்ந்து தனித்தனி தியரி இருக்கிறது. 
ஆனால், ‘‘எனது கவிதையை சந்தோச நிகழ்வாகவும் துக்கம் துடைக்கும் மருந்தாகவும்தான் பார்க்கிறேன்...’’ என்கிறார் கவிதைக்காரி ஹேமா.புதுக்கோட்டை மாவட்டம் இராசாளிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹேமா, ‘பிரியாமலிரு... பிரியமாகயிரு...’ என்ற தனது முதல் கவிதை நூலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.

விஷயம் அதுவல்ல. இந்தக் கவிதை நூலில் இடம்பெற்ற அனைத்துக் கவிதைகளையும் தனது காதல் கணவர் பூபேஷை நினைத்து எழுதியிருக்கிறார் என்பதுதான் ஹைலைட்!
கவிதை என்றால் என்ன? உங்கள் கவிதைகள் எதனைப் பாடுகின்றன என்ற கேள்வியோடு ஹேமாவிடம் பேசத் தொடங்கினோம். 

‘‘எனது கவிதைகளை வலி நிவாரணியாகத்தான் பார்க்கிறேன். எப்போதெல்லாம் கவிதைகள் எழுதுகிறேனோ, அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறேன்...’’ என தனது கவிதைகளை அடையாளப்படுத்திவிட்டு, தன்னைப்பற்றியும் பேசத் தொடங்கினார் ஹேமா.

‘‘சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் இராசாளிபட்டி கிராமம். 12ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். தற்போது ஒரு நூல் ஆலையில் வேலை பார்த்து வருகிறேன்.
எனது கணவர் கட்டடத் தொழிலாளி. எங்கள் இருவருக்கும் திருமணமாகி பதிமூன்று வருடங்கள் ஆகின்றன. கவிதை எதுவெனத் தெரியாத வயதில் இருந்தே கவிதை எழுதி வருகிறேன்...’’ என்றவர் தொடர்ந்தார்.

‘‘பள்ளிப் படிக்கும் போதிருந்தே தோன்றியதை எழுதி வருவேன். இயற்கை, சூழல், உணர்ச்சி, காதல், வலி என எதுவெல்லாம் என்னைப் பாதிக்கிறதோ அனைத்தையும் எழுதி வந்தேன்.
பள்ளிப் பருவம்தான் நான் எழுதத் தொடங்கிய பருவம். அப்போது எழுதுவது கவிதையா எனக் கேட்டால் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அப்போது எழுதிய கிறுக்கல்கள்தான் என்னை தற்போது தனியாக கவிதை நூல் வெளியிடும் அளவிற்கு வளர்த்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து, பதினைந்து வருடங்களுக்கு மேலாகவும் எழுதி வருகிறேன். எனக்கு காதல் திருமணம்தான். காதலிக்கும்போதும் சரி, திருமணத்திற்கு பிறகும் சரி, எனக்குத் தோன்றிய அனைத்தையுமே கவிதைகளாக எழுதி வருகிறேன். 

ஒரு கட்டத்தில் நான் எழுதிய கவிதைகள் மட்டுமல்லாது பிற கவிதைகளையும் வாசிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், எந்தக் கவிஞர்களது கவிதைகளைப் படிக்க வேண்டும் என்ற தெளிவு அப்போது எனக்கில்லை. அதனால், கவிதைகள் சார்ந்த தேடுதலை யூடியூப்பில் தொடர்ந்தேன்.
 
அப்போதுதான், யூடியூப்பின் மூலம் கவிஞர் செந்தமிழ்தாசன் அறிமுகமானார். எனது கவிதைகளைத் தாண்டி நான் வாசித்த கவிதைகள் அவருடையதுதான். சிந்திக்க வைக்கும் கவிதைகளையும் மனதை நெகிழ வைக்கும் கவிதைகளையும் செந்தமிழ்தாசன் வழியே வாசிக்க நேர்ந்தது. அவரைத் தொடர்ந்து மனுஷ்ய புத்திரன் கவிதைகளையும் வாசித்தேன். 

இதற்கிடையில் நானும் யூடியூப்பில் கவிதைகள் எழுதி ‘கவிதைக்காரி’ எனும் பெயரில் பதிவேற்றம் செய்தேன். இப்படி கவிதை எழுத, வாசிக்க என நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் ஒதுக்கிக் கொண்டேன். ஒரு கட்டத்தில் எனது கவிதைகளை நூலாகக் கொண்டு வரலாம் என எண்ணம் வந்தது. அப்போது, நான் எழுதிய கவிதைகளை மறுமுறையும் வாசித்தேன்.

நிறைய கவிதைகள் காதல் கவிதைகளாக இருந்தன. அவை அனைத்தும் எனது கணவரை நினைத்து எழுதிய கவிதைகள். அதனால், அவரின் நினைவாகவே எனது முதல் கவிதை நூலை ‘பிரியாமலிரு... பிரியமாயிரு...’ என்ற தலைப்பில் வெளியிட்டோம். புத்தகம் வெளியான நாட்களில் இருந்து எங்கள் ஊரிலும் சரி, நான் வேலைக்குச் செல்லும் இடத்திலும் சரி நிறைய நபர்கள் பாராட்டினார்கள்.

இந்த நூலில் இடம்பெற்ற பல கவிதைகள் என் வாழ்வில் நான் சந்தித்த, அனுபவித்த விஷயங்கள்தான். காலை வேலைக்குச் செல்வது மாலை வீடு வந்ததும் வீட்டுக்குத் தேவையான வேலை செய்வது என எனக்கு எப்போதும் வேலை இருந்தபடி இருக்கும். இதற்கிடையில்தான் கவிதைகள் எழுதி வருகிறேன். பல கவிதைகள் நான் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் எழுதியவை.

இப்படி கவிதை எழுதிக் கொண்டிருக்கும் கணங்கள்தான் எனக்கான கணமாக உணர்கிறேன். கவிதையைத் தொடர்ந்து தற்போது சிறுகதைகளும் எழுதி வருகிறேன்...’’ என்ற ஹேமா விரைவில் சிறு கதைத் தொகுப்பை வெளியிடப் போவதாகவும் மகிழ்வோடு பேசி முடித்தார்.

செய்தி: ச.விவேக்

படங்கள்: ராப்பூசல் சிவா