சிறுகதை - வி(ல்)லங்காலஜிஸ்ட்...



நான் இப்போது உதவி பேராசிரியராக பணிபுரியும் கல்லூரிக்கு உயிரியல் துறையின் சிறப்பு பேராசிரியராக மாற்றலாகி வந்து சேர்ந்தவர்தான் டாக்டர் சக்ரவர்த்தி.
பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தஸ்து பெறுகின்ற அந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டு உயிரியல் ஆய்வக விருப்பம் காரணமாக விலங்கியல் பேராசிரியராகவே தங்கிவிடுவது என்று அவர் முடிவு செய்தார் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது.

சனி, ஞாயிறு விடுமுறை என்றால் அவர் ஊருக்குப் போய்விடுவார். உள்ளூரில் அறை எடுத்து தங்கியிருந்தார். அது ஒரு ஒண்டிக் குடித்தனம். அது நான் இருந்த வீட்டிற்கு ஒரு தெரு தாண்டிதான் இருந்தது. அவர் மாற்றலாகி வந்த ஒரு வாரம் கழித்து மதியம் மூன்று மணி இருக்கும். வழக்கமாக நான் தேநீர் அருந்துகின்ற எங்கள் கல்லூரி காண்டீனில்  சமோசாவை கொறித்துக் கொண்டிருந்தவர் எதேச்சையாக என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

அவருடைய நெடிதுயர்ந்த உருவமும் பெரிய மீசையும் என்னை கவர்ந்து இருக்க வேண்டும். கலைத்துப் போடப்பட்ட தலைமுடியோடு நம்ம ஊரு ஐன்ஸ்டீன் போல் தென்

பட்டார். அவருக்கு வணக்கம் வைத்தேன்.‘‘ரொம்ப அதிகமாக தேநீர் அருந்துகிறீர்கள்...’’ என்று சொல்லிச் சிரித்தார்.

அவ்வளவுதான் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். அவர் சொல்வது உண்மைதான். நானும் தேநீர் வெறியன். அவரும் அப்படித்தான். தேநீர் ஏதோ ஒரு வகையில் எங்களது நட்பைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது.

நான் கணிதத் துறையைச் சேர்ந்தவன். துறை வேறு வேறு என்றாலும் தேநீர் எங்களை இணைத்தது. அந்த முதல் சந்திப்பிலேயே ஒரு விஷயம்... நான் அசந்து போனேன்.
அவருடைய தோள் பையிலிருந்து ஏதோ ஒன்று வீச்சு வீச்சு என்று கத்திக் கொண்டிருந்தது. உயிரியல் பேராசிரியர் அதிர்ச்சி அடைந்த என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே குட்டி அணிலை எடுத்துக்காட்டினார்.

‘‘மரத்தின் கூட்டிலிருந்து விழுந்துவிட்டது சகோதரா... இப்போது நான் அதன் தாய்...’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார். சமோசாவில் இருந்து பட்டாணி இரண்டை எடுத்து அதன் முன் வைத்து அதை சாப்பிட வைத்தார். 

வெளியில் சுதந்திரமாக விடப்பட்ட பொழுதும் அது ஓடவில்லை. அசந்து போனேன். அவர் மீதான என்னுடைய ஈர்ப்பு பல மடங்கு அதிகரித்தது.நாங்கள் தினந்தோறும் தேநீர் சாலையில் சந்திக்கத் தொடங்கினோம். சில சமயம் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை கூட எங்கள் சந்திப்பு நடந்தது.

என்னுடைய சிறப்புத் துறை நேரியல் இயற்கணிதம். நேரியல் வெளிகளையும் அத்தகைய வெளிகளுக்கு இடையிலான நேரியல் உருமாற்றங்களையும் ஆய்ந்து அறிகின்ற கணிதவியல் துறை அது.

முப்பரிமாண யூக்ளிடிய உலகம் எங்களுடையது. நேரியல் இயற்கணிதம் கோட்பாட்டு பயன்முறை என்கிற மையக்கருவில்... நுண்புல இயற்கணிதம் சார்ந்து புதிய சமன்பாடுகளை அடைவதற்கு என்னுடைய உதவி பேராசிரியர் பணிக்கு நடுவே நான் ஆய்விலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

அதற்கு இரவில் வெகு நேரம் விழித்து உழைக்க வேண்டியிருந்தது. பகலில் என்னை சுதாரித்துக்கொள்ள 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தேநீர் அருந்துவது தவிர்க்க முடியாத விஷயம்.

ஆனால், அவரைப் பொறுத்த வரையில் அணில், எலி, எதாவது ஒரு சிறு பறவை... சில சமயம் ஓணான் என்று தன்னிடமிருக்கும் அவைகளுக்கு இரை போடுவதற்காக தேநீர் சாலைக்கு வந்து கொண்டிருந்தார் என்று எனக்குப்பட்டது.

நான் இந்த விலங்குகள் விஷயத்துக்கெல்லாம் அப்பாற்பட்டவன். எங்கள் வீட்டில் ‘ரஜினி’ என்று நாங்கள் அழைக்கும் சாதாரண நாட்டுப் பூனை ஒன்று மட்டும்தான் வைத்திருக்கிறேன். அதைக் கூட என் வீட்டில் இருக்கும் மற்றவர்களைப் போல கையில் எடுத்துக் கொஞ்சுவது எல்லாம் இல்லை.

ஆனால், நாங்கள் பேசாத விஷயம் ஒன்றுகூட பாக்கி இல்லை. அமேசான் காடுகளின் பேரழிவு முதல் எங்கள் கல்லூரி அமைந்திருந்த அந்தச் சிறிய மலைப்பிரதேச ஊரில் எப்படி காடுகள் அழிக்கப்படுகின்றன என்பது வரை ஓர் உயிரியலாளராக அவரால் பல சித்தாந்தங்களைப் பற்றிப் பேச முடிந்தது.

தன் குடியிருப்பு ஒண்டிக் குடித்தனத்தில் ஓர் அறையை தன் ஆய்வகமாக அவர் வைத்திருப்பதை அறிந்த பொழுது நான் நேரில் விஜயம் செய்யத் தொடங்கினேன்.அவர் வெறும் பேராசிரியர் மட்டுமல்ல. கொஞ்சம் விலங்குகளுக்கான வைத்தியமும் தெரிந்து வைத்திருந்தார். 

நான் ஆரம்பத்தில் சின்னச் சின்ன அணில், எலி என்றுதான் பார்த்திருக்கிறேன். ஆனால், எங்கள் பிரதேசத்தில் வலம் வந்த பல்வேறு வகையான விலங்குகளை அவருடைய ஆய்வகத்தில் நான் பார்த் திருக்கிறேன். ஒருமுறை ஒரு குரங்கு குட்டி அவருடைய வீட்டில் பல நாட்களுக்கு இருந்து உடம்பு சரிப்படுத்திக் கொண்டு வெளியேறியிருந்தது.

வகை  வகையான விலங்குகளின் எச்சங்கள் கொடுத்த வயிற்றைக் குமட்டும் நெடி காற்றில் பேசிக்கொண்டிருந்த அந்த அறை வித்தியாசமாக இருந்தது. நான் போகும்போதெல்லாம் ஏதாவது ஒரு புதிய உயிரி உள்ளே அவரது அறிவியல் ஆய்வுக்கு உகந்ததாக சேர்க்கப்பட்டிருக்கும். 

பேராசிரியர் டாக்டர் சக்ரவர்த்தி சர்வதேச ஆய்வு இதழ்களில் உயிரியல் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுகின்ற அபூர்வமான நேரடி விஞ்ஞானியாக இருந்தார். அவரோடு நெருங்கிப் பழகியதில் நான் அறிந்துகொண்டது என்னவென்றால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை... - எனக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை என்பது என்னுடைய பெற்றோர்களின் எண்ணம்... - தாய், தந்தை மற்றும் சகோதரி ஒருத்தியை பார்ப்பதற்கு சனி ஞாயிறு  ஊருக்கு போய் விடுவார்.

மற்றபடி என் தோழமையை நேசித்தார் என்றுதான் தோன்றுகிறது. விரைவில் எங்களுடைய நட்பு நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவு சாப்பிடுகின்ற சந்திப்பாக மாறிப்
போனது.ஒரு புதன்கிழமை என்று நினைக்கிறேன். ‘‘இன்று மாலை கண்டிப்பாக நீங்கள் என்னுடைய ஆய்வகத்திற்கு வர வேண்டும்...’’ என்று ஒரு புதிர்போல பேசினார். ‘‘இதுவரையில் உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத ஒரு விஷயம்...’’ என்று மர்மப் புன்னகை பூத்தார்.

ஆனால், இப்படி அவர் பேசுவது முதல் முறையல்ல. பொதுவாக அவர் அப்படிப் பேசினால் எதாவது ஒரு சிறப்பு உயிரி அவருடைய ஆய்வகத்திற்கு விஜயம் செய்துள்ளது என்று அர்த்தம்.
இப்படி ஒருமுறை ஒரு பெருச்சாளியை விட பெரிய வண்டு ஒன்றை அவரது ஆய்வகத்தில் பார்த்து இரண்டு நாட்களுக்கு எனக்கு தூக்கம் வரவில்லை. இப்படி அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது.

ஆனால், இந்த முறை அவர் காட்டியது ஒரு கால்பந்தை விட சற்றே சிறிதாகவும், ஆனால், ஒரு கிரிக்கெட் பந்தை விட இரு மடங்கு பெரிதாகவும் இருந்த ஒரு உருண்டைக் கோளம். இளம் பச்சையா அல்லது இளம் மஞ்சளா என்று அதன் நிறத்தை கணிக்க முடியவில்லை. 

வானத்தில் இருந்து வந்து விழுந்த ஒரு உருண்டைக் எரிகல்லாக அது இருக்குமா என்று நான் யோசித்தேன்.என்னுடைய கணித மூளைக்கு சீரான உருண்டையாக இல்லாமல் ஓரிரு இடங்களில் கொஞ்சம் உப்பி இருந்தது. சுற்றளவை அளப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினேன். 

பூமத்திய ரேகை மெரிடியன் அல்லது வால்யூமெட்ரிக் முறைப்படி நிலையான கோளத்தின் ஒரு வட்டத்தை மையத்தின் வழியாக கடந்து சென்றால் அதற்கான சூத்திரம் என்ன என்றேதான் என் மூளை வேலை செய்தது.

என்னை ஆச்சரியப்பட வைத்த அந்த இயற்கை கோளத்தை அவர் என் கையில் கொடுத்தார். அது இளம் சூடாக இருந்தது. ஏறக்குறைய மூன்று கிலோ எடை இருக்கும் என்று கணித்தேன்.
என்னிடம் இருந்து அதை வாங்கி பத்திரமாக கண்ணாடிப் பேழைக்குள் வைத்தார். 

நாங்கள் பேசிக்கொண்டிருந்த சற்று நேரத்தில் மிகப் பெரிய ஒரு அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது.
அந்த உருண்டை  நிறம் மாறியது. முதலில் பச்சையாக இருந்தது இப்போது இளம் சிவப்பாக மாறியிருந்தது. ஒரு அரை மணி நேரம் அவரது அந்த ஆய்வு அறையில் இருந்திருப்பேன். நான் வெளியேறுவதற்கு முன் அந்த உருண்டை நீல நிறமாக மாறி இருந்தது.

‘‘அது என்னவென்று எனக்கே தெரியவில்லை...’’ அடுத்த நாள் காலை தேநீர் கடையில் சந்தித்த பொழுது அவர் சொன்னார். ‘‘அதிகாலை நடைப் பயிற்சியின் பொழுது மலையில் ஒரு புதருக்கு அருகாமையில் பளபளவென்று மின்னியபடி அது கிடந்தது...’’ என்று சொன்னார். ‘‘உங்களால் ஊகிக்க முடிகிறதா... அது என்னவாக இருக்கும்?’’ என்று கேட்டு மர்மப் புன்னகை புரிந்தார்.
எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

ஆனால், வெள்ளிக்கிழமை மாலை அவர் என் வீட்டிற்கு வந்தார். தான், அவசரமாக ஊருக்குப் போவதாகவும் திங்கட்கிழமை கண்டிப்பாக கல்லூரிக்கு வந்துவிடுவேன் என்றும் கூறிய அவர், ‘‘இந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் இந்த அதிசய கோளத்தை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள முடியுமா’’ என்று கண்ணாடிப் பேழையை நீட்டினார். நான் ஆசையோடு அதை வாங்கிக் கொண்டேன். எனக்கும் கணித முறையில் அதை சில ஆய்வுகளுக்கு உட்படுத்தலாம் என்கிற எண்ணம் தோன்றியிருந்தது. அவரோடு சேர்ந்துகொண்டு ஒரு அரை விஞ்ஞானியாக மாறி இருந்தேன்.

‘‘கண்ணாடிப் பேழையிலிருந்து மட்டும் அதை வெளியே எடுக்காதீர்கள். பத்திரம்...’’ அவர் ஓர் எச்சரிக்கை போல சொல்லிவிட்டுப் போய்விட்டார்.என் அப்பா வெளியூரில் என் தம்பி வீட்டிற்கு போயிருந்தார். வீட்டில் நானும் என் அம்மாவும்தான். மற்றபடி ‘ரஜினி’ பூனை இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருக்கும். அவ்வப்போது  நிறம் மாறுகின்ற அந்த அதிசய பந்து உருண்டை அம்மாவுக்கு ஏராளமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ‘‘இதுவரையில் இப்படி ஒன்றை நான் பார்த்ததே இல்லை...’’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால், எங்கள் வீட்டு பூனை ‘ரஜினி’ கத்திக்கொண்டே இருந்தது. அதற்கு அந்த உருண்டையை பிடிக்கவில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.உணவருந்திவிட்டு இரவில் நான் அந்த கண்ணாடிப் பேழையின் அருகே அமர்ந்து சுற்றளவைக் கண்டுபிடிக்க கிரேக்கத்தின் கணித மேதை போல காரியத்தில் இறங்கினேன். 

உண்மையில் சுற்றளவு என்கிற கருத்து, கோளத்திற்கு நேரடியாக பொருந்தாது. ஆனால், கோளத்தின் மிக பெரிய விட்டத்தால் உருவாக்கப்பட்ட வட்டத்தின் சுற்றளவை நாம் அளவிட முடியும்.

சாதாரண பள்ளிக்கூட ஜாமெட்ரி பாக்ஸ்... அதிலிருந்து காம்பஸ் கருவியை எடுத்தேன். கோளம் எதனால் ஆனது என்று பரிசோதிக்க லேசாக குத்திப் பார்த்தேன். அது உடையவில்லை.
எத்தனை நேரம் அவ்விதம் பரிசோதித்துக் கொண்டிருந்தேனோ... தூக்கம் கண்களை அசத்தியதால் உறங்கச் சென்று விட்டேன். 

பேழைக்குள் வைத்து  மூடி இருந்தேனா இல்லையா என்றுகூட யோசிக்காமல் போனது பெரிய தவறு.பொதுவாக சனிக்கிழமை கல்லூரி இல்லையென்றால் நான் சற்று நேரம் கூடுதலாக உறங்குவேன். ஆனால், அன்றைக்கு காலையில் அவசர அவசரமாக அம்மா என்னை எழுப்பினார். பெரிய பதற்றத்தில் இருந்தார்.

ஏறக்குறைய அலறுவது கேட்டது. எழுந்து அவசரம் அவசரமாக அந்தக் கோளம் இருந்த இடத்திற்கு ஓடினேன். அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது.
என்னத்தைச் சொல்ல... பேராசிரியரின் எச்சரிக்கையை காதில் வாங்காமல் போனது தவறு. பெரிய தவறு செய்திருந்தேன்.அது ஒரு முட்டை. 

அது உடைந்து அதில் இருந்து மலைப்பாம்பு வெளியே வந்திருந்தது. ‘‘நம்ம ரஜினிடா... ரஜினிடா...’’ என்று அலறுகிறார் என் தாய்.ஆமாம். எங்கள் வீட்டு பூனையை அந்த மலைப் பாம்பு குட்டி ஏற்கனவே முழுசாக விழுங்கியிருந்தது.  

- ஆயிஷா இரா நடராசன்