டிஜிட்டல் வணிகத்தில் தமிழகம் கெத்து!



இந்திய அளவில் டிஜிட்டல் வணிகத்தில் தமிழகம் 3வது பெரிய அடித்தளம் கொண்ட மாநிலம் என கெத்து காட்டுகிறது. மட்டுமல்ல; இந்தியாவில் மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்திலும் உள்ளது.கடந்த 20 ஆண்டுகளில் டிஜிட்டல் வணிகம் மக்களின் பொருளாதார வளர்ச்சியிலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலோட்டமாக பார்த்தால் இது எளிதான செயல் என்று தோன்றலாம். ஆனால், இது ஒரு சிக்கலான வேலை.

வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குவதால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எந்திரங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அந்த எந்திரங்கள், தொழில்நுட்பங்களை உருவாக்குவோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவின் கடைக்கோடி பகுதிகளுக்கும் இந்த டிஜிட்டல் வணிகம் சென்றடைந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்.சுமார் 6 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் வணிகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதன்மூலம் 25 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இந்த டிஜிட்டல்வணிகத்தில் ஈடுபட்டுள்ளன என்பது உண்மையிலேயே காலரை உயர்த்தும் விஷயம்.

சில்லரை வணிகம், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்சாதன பொருட்கள், சரக்கு வர்த்தகம், தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, சந்தைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் நகர்ப்
புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த டிஜிட்டல் வணிகம் வெற்றி அடைந்துள்ளது. 

பொருட்களின் தரம், எளிய முறையில் பணம் செலுத்துதல், அவர்களின் வசதிக்கேற்ப பொருட்களை வாங்குதல், பாதுகாப்பு, குறித்த நேரத்தில் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்தல், விற்பனைக்குப் பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல் ஆகிய காரணிகள் மூலம் டிஜிட்டல் வணிகம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இதன் விளைவாக வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘ஃபிளிப்கார்ட்’டில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி மிக விரைவாக பொருட்களைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்திட ‘ஃபிளிப்கார்ட் மினிட்ஸ்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது விரைவு வணிகம் மூலம் ‘ஃபிளிப்கார்ட்’டில் 3.25 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்கள் குடோன்களிலும், பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு, அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டில் 5 முதல் 5.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சியில் ‘ஃபிளிப்கார்ட்’ ஈடுபட்டுள்ளது. 

இது ஒரு சோறு பதம்தான். அந்தளவுக்கு இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் டிஜிட்டல் வணிகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சரக்கு வர்த்தகம், பொருட்களைக் கொண்டு சேர்க்கும் நபர்களுக்கும், குடோனில் பணியாற்றுவோருக்கும் என பெரிய அளவில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்க்கத்தினருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள்.

மொத்தத்தில் மக்களின் பொருளாதாரத்தை செம்மைப்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டிஜிட்டல் வணிகம் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயிகள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் உட்பட பல்வேறு பிரிவு மக்களுடன் இந்த டிஜிட்டல் வணிகம் கைகோர்த்து அவர்களை ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட வைத்துள்ளது.

இதில் அடிக்கோடிட்டு சொல்லவேண்டிய விஷயம், பெண்களுக்கும் வேலை வாய்ப்பு இதனால் அதிகரித்து வருகிறது என்பதுதான். குறிப்பாக குடும்பச் சூழல் காரணமாக கல்லூரி மற்றும் உயர்கல்விக்கு செல்ல முடியாதவர்களுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் வேலைகள் கிடைக்கின்றன.

டெலிவரி, பார்சலை ஏரியா வாரியாக பிரிப்பது, கம்ப்யூட்டரில் வாடிக்கையாளரின் பார்சல்விவரம் பதிவேற்றுவது, டிராக் செய்வது... என நீளும் பட்டியல் வேலை வாய்ப்புகளை உரத்து அறிவிக்கின்றன. மட்டுமல்ல; படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களிடம் உள்ள திறமைகளை வைத்து வீட்டு வருமானத்தை உயர்த்திட இந்த டிஜிட்டல் வணிகம் வழி
வகுக்கிறது. 

இதன்மூலம் அவர்களது திறமை, தொழிலாக மாறி வருமானம் ஈட்டுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி சொந்தக்காலில் நிற்க உதவுகிறது.
அவர்கள் தாங்கள் வாழும் இடத்தில் இருந்தே முன்னேற வழிவகுக்கிறது. அவர்களைக் கண்டு அதுபோல் பலரும் இந்த டிஜிட்டல் வணிகத்தில் இணைய ஊக்குவிக்கிறது. இதன்மூலம் சாதாரண மக்கள் முன்னேறுவது மட்டுமல்லாமல் சமூகமும் வளர்ச்சி அடைகிறது.

இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. திறமை இருக்கும் குடும்பத் தலைவிகள் சோஷியல் மீடியா வழியாக ஊறுகாய், சுரிதார், புடவை, மசாலா பொடிகள், எண்ணெய்... என தங்களால் இயன்றதை விற்பனை செய்து வருகிறார்கள்.இப்பொழுது மெல்ல மெல்ல பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் ஆன்லைன் வர்த்தகத்தை ‘சைட் பிசினஸ்’ ஆக செய்து வருகிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.

இன்ஸ்டாவில் வெறும் ஆடல், பாடல் மட்டுமே இருப்பதாக நினைக்க வேண்டாம். சகலவிதமான பொருட்களையும் விற்பனை செய்யும் சந்தையாகவும் இன்ஸ்ட்ராகிராம் தளம்
இருக்கிறது.

இதற்கு சொந்தமாக இடம் தேவையில்லை... வேலைக்கு ஆள் வைக்க வேண்டியதில்லை... வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு கிடைக்கும் நேரத்தில் பிசினஸ் செய்யலாம் என்பதுதான் டிஜிட்டல் வணிகத்தின் சாதகமான விஷயம்.இதை சரியாக தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்!

என்.ஆனந்தி