குங்ஃபூ ராணி



உலகின் தலைசிறந்த குங்ஃபூ வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருகிறார், ஷாங் சிக்ஸ்வான். இவரது வயது 9. ஷாங்குவை ‘குங்ஃபூ ராணி’ என்று புகழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் சீனாவில் நடந்த உலகளவிலான ஷாலின் குங்ஃபூ ஸ்டார்களுக்கான போட்டியில் கலந்துகொண்டு, சிறந்த குங்ஃபூ வீராங்கனையாகத் தேர்வாகியிருக்கிறார் ஷாங். இவருக்கு நாலாப்பக்கமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

சீனாவின் மத்தியில் இருக்கும் ஹெனான் மாகாணத்தில் பிறந்து, வளர்ந்தவர் ஷாங். உடலை வில்லாக வளைத்து, ஷாங் செய்யும் குங்ஃபூ வித்தைகளைப் பார்த்து, சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் உறைந்து போயிருக்கின்றனர். அதிகளவிலான நெகிழ்வுத் தன்மை, உடல் வலிமை, உடலையும், மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறன் என எல்லாமுமே இருந்தால் மட்டுமே இப்படியான குங்ஃபூ வித்தைகளைச் செய்ய முடியும் என்று நிபுணர்கள் வியந்துபோயிருக்கின்றனர்.

இதுபோக கடந்த வாரம் ஷாலின் கோவிலில் ஒரு குங்ஃபூ போட்டி நடந்தது. இதில் 47 நாடுகளைச் சேர்ந்த 124க்கும் மேற்பட்ட தற்காப்புக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் தலைசிறந்த பத்து தற்காப்புக் கலைஞர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஷாங். மீதி ஒன்பது பேரும் ஷாங்கைவிட வயதில் மூத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாங்கின் வீட்டுக்கு அருகில்  ஒரு குங்ஃபூ பள்ளி இருந்திருக்கிறது. அங்கே நடக்கும் குங்ஃபூ பயிற்சிகளைப் பார்த்துதான் ஷாங்கிற்கு குங்ஃபூவின் மீது ஆர்வம் வந்திருக்கிறது. ஐந்து வயதிலேயே ஹெனானில் உள்ள ஜிங்ஷோங் தற்காப்புக் கலைப் பள்ளியில் சேர்ந்து  குங்ஃபூவைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார் ஷாங். 

இவர் வயதுடைய மற்ற குழந்தைகள் ஸ்மார்ட்போனில் கேம்ஸை விளையாடிக்கொண்டிருக்கும்போது, தினமும் காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் மூன்று மணி நேரம் என்று குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டார் ஷாங். குங்ஃபூவில் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே ஷாங்கின் கனவு.

த.சக்திவேல்